

சிவபெருமானை ஆடல் நாயகராகப் படம்பிடிக்கும் பத்திமை இலக்கியங்கள், அந்த நாயகப் பொறுப்பை அவர் ஏற்ற வரலாற்றுடன், ஆடற்களம், ஒப்பனை, கலைஞர்கள், கருவிகள் எனப் பல நுட்பமான தரவுகளையும் பதிவுசெய்துள்ளன. பொதுக்காலம் 6, 7ஆம் நூற்றாண்டுகளின் ஆடற்செழுமையை இவையே வரலாற்றுச் சான்றுகளாய் மின்னி வெளிச்சப்படுத்துகின்றன.
ஆடற்கலைச் சிற்பங்கள் பல்லவ அரசரான முதல் மகேந்திரரின் சீயமங்கலம் அவனிபாஜனம் குடைவரையிலேயே முதன்முதலாகக் கண்காட்டுகின்றன. சங்க ஆடலான ஒள்வாள் அமலையும், நாட்டிய சாத்திரம் பேசும் புஜங்கக்கரணமும் அவனிபாஜனத்தின் அருமையான படப்பிடிப்புகள். ஒரு திருவடியை நிலத்திலிருத்தி, மற்றொரு திருவடியை வலப்புறம் வீசியாடும் சிவபெருமானின் ஆடற்கோலமே புஜங்கக்கரணமாகும். இந்த ஆடலை, ‘புயங்கராக மாநடம்’ என்பார் சம்பந்தர்.