

சுருக்கமாய்ச் சொன்னால், செய்யுள் அல்லது கவிதை வடிவிலான கதைகள் காப்பியம் எனப்படும். காவியம், புராணம் என்பன அதற்கு ஈடான சமற்கிருதச் சொற்கள். தனித்தமிழ் இயக்கத்தார் இதனைப் ‘பாவியம்’ என்று விளிப்பர். ‘பொருள் தொடர்நிலைச் செய்யுள்’ என்பது தண்டியலங்காரம் என்ற அணியிலக்கண நூல் கூறும் பெயர்.
அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருளையும் உணர்த்துவது பெருங்காப்பியம் என்றும் ஒன்றோ பலவோ குறைந்து வருவது சிறுகாப்பியம் என்றும் கூறுவது மரபு. இந்நாளில் கூறப்படும் பெரிது சிறிதெல்லாம் அளவைப் பொறுத்ததாக மாறிவிட்டது.
தமிழில் நமக்குக் கிடைத்த முதல் காப்பியம் சிலப்பதிகாரம். அது செழித்த காப்பிய மரபைப் புலப்படுத்துவதாய் அமைந்துள்ளது. எனவே, தமிழில் அதற்கு முன்பும் காப்பியங்கள் இருந்திருக்கக் கூடும். சிலம்பைத் தொடர்ந்து மணிமேகலை, சீவகசிந்தாமணி, நீலகேசி முதலிய ஐம்பெரு, ஐஞ்சிறு காப்பியங்கள் தோன்றின.
பின்னாளில் எழுச்சிபெற்ற சைவ, வைணவ மதங்கள் தமது தொன்மக் கதைகளைக் காப்பிய வடிவில் தந்தன. கம்பராமாயணம், வில்லிபாரதம், பாரத வெண்பா முதலிய வைணவக் காப்பியங்களும் பெரியபுராணம், திருவிளையாடல் புராணம், காஞ்சிப் புராணம் முதலிய சைவக் காப்பியங்களும் தோன்றின. இந்தக் காப்பியத் தொற்று கிறித்துவ, இசுலாமிய மதங்களையும் பீடித்துவிட்டதால் தேம்பாவணி, சீறாப்புராணம் முதலிய காப்பியங்களும் தோன்றின.
இருபதாம் நூற்றாண்டில் எளிய நடையில் கவிதை எழுதிய பாரதியார் காப்பிய வடிவத்திலும் பல புதுமைகளைச் செய்தார். சமய மரபுகளிலிருந்து விலகி பொதுநிலைக் காப்பியமான குயில்பாட்டை இயற்றினார். பின்னர் வந்த பாரதிதாசன் புரட்சிக் கவி, தமிழச்சியின் கத்தி, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு என ஏராளமான காப்பியங்களை எழுதிக் குவித்தார். இருபதாம் நூற்றாண்டின் காப்பிய வளர்ச்சிக்கு அவர் பெரும்பங்காற்றினார் என்றால் அது மிகையன்று.