

புவியுடன் ஒத்தியங்கும் செயற்கைக்கோள் ஏவுகலமான ‘ஜிஎஸ்எல்வி எம்கே II’ மூலம் ‘ஈஓஎஸ்-05’ என்னும் புவி கண்காணிப்புச் செயற்கைக்கோளை செப்டம்பர் 4 அன்று அதிகாலையில், துணை-புவி ஒத்தியங்கும் மாற்றுச் சுற்றுப்பாதைக்கு (சப்-ஜிடிஓ) கொண்டுசென்றிருப்பது இஸ்ரோவின் புதிய சாதனை.
ஆகஸ்ட் 2021இல் தோல்வியடைந்த ஜிஎஸ்எல்வி-எஃப்10 ஏவுதல் ஈஓஎஸ்-03 (ஜிஎஸ்ஏடி-1) சுற்றுப்பாதையை அடையவில்லை. எனவே, அதற்குப் பதிலியாக ஈஓஎஸ்-05 ஏவப்பட்டுள்ளது.
இதில் கூடுதலாகப் பல் நிறமாலை, உயர் நிறமாலை படம் எடுக்கும் திறன்களும் பொருத்தப்பட்டுள்ளன. புவியுடன் ஒத்தியங்கும் சுற்றுப்பாதையில் (Geostationary Orbit) இருந்தபடி இந்தியத் துணைக்கண்டத்தையும் அதன் சுற்றுச்சூழலையும் அடிக்கடி கவனிப்பதன் மூலம், இந்தியக் கடற்படைக்கு உதவுவதே இந்தச் செயற்கைக்கோளின் முதன்மைப் பணி.
புதிய வழிமுறை
ஜிஎஸ்எல்வி-எஃப்17 என்று பெயரிடப்பட்ட இந்தப் பயணம் மிகவும் முக்கியமானது. ஏனெனில், 2010க்குப் பிறகு முதல் முறையாக, சுமார் 2.3 டன் எடையுள்ள செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எம்கே II மூலம் ஜிடிஓ போன்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த இஸ்ரோ முயல்கிறது. முந்தைய முயற்சியான ஜிஎஸ்ஏடி-5P, டிசம்பர் 2010இல் ஜிஎஸ்எல்வி-எஃப்06 மூலம் ஏவப்பட்டது; ஆனால், அந்தப் பயணம் வெற்றியடையவில்லை.
ஈஓஎஸ்-03இன் எடை 2,268 கிலோ மட்டுமே. பிப்ரவரி 2024இல் ஜிஎஸ்எல்வி-எஃப்14 மூலம் ஏவப்பட்ட இன்சாட்-3டிஎஸ்இன் எடை 2,275 கிலோ. அதுவரை ஜிஎஸ்எல்வி எம்கே II ஏவிய செயற்கைக்கோள்களில், இதுவே மிக அதிக நிறை கொண்டதாக இருந்தது. இந்தச் சாதனையை ஈஓஎஸ்-05 முறியடித்துள்ளது.
பூமியிலிருந்து 36,000 கி.மீ. உயரத்தில் உள்ள புவியுடன் ஒத்தியங்கும் சுற்றுப்பாதைக்கு ஒரே பாய்ச்சலில் சென்று சேர்ந்துவிட முடியாது. முதலில், செயற்கைக்கோள் புவியுடன் ஒத்தியங்கும் நீள்வட்டமான மாற்றுச் சுற்றுப்பாதையில் (ஜிடிஓ) நிலைநிறுத்தப்படும்.
பின்னர், செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள சிறு ராக்கெட் இயக்கிகளைப் பயன்படுத்தி, சுற்றுப்பாதையின் உயரத்தை அதிகப்படுத்தியும், அதன் வடிவத்தைச் சுற்றுப்பாதைக்கு நிகராக மாற்றியும் அடுத்த சில நாள்களில் இறுதி நிலைக்குக் கொண்டுசெல்லப்படும்.