

திறன்பேசி செயலிகளின் வழியாக நடைபெறுகின்ற இணையவழித் தொழில் (கிக் தொழில்) இன்றைக்குப் பெரிய அளவுக்கு வளர்ந்திருக்கிறது. உணவு வகைகள் முதல் மருந்துகள் வரை நேரடியாகக் கொண்டுவந்து சேர்க்கும் இந்தத் தொழிலை இயக்குவதில் மூன்று முக்கிய விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
முதலாவது, கட்டளைகளைக் கொடுத்துக்கொண்டே இருக்கின்ற அல்காரிதம் (Algorithm). இரண்டாவது, முதல் மைல் அவசரம் (First Mile Rush), மூன்றாவது, கடைசி மைல் அவசரம் (Last Mile Rush). இவை கிக் தொழிலாளர்களை எப்படி அடிமைப்படுத்தி இருக்கின்றன என்பதைப் பற்றிப் பேசியாக வேண்டும்.
குலையும் நம்பிக்கை: ஒரு குறிப்பிட்ட வேலையை / சேவையைச் செய்வதற்காகப் பின்பற்றப்படும் விரிவான வழிமுறையே அல்காரிதம் என்று அழைக்கப்படுகிறது. கிக் தொழிலுக்கு இதுதான் அடிப்படை. முதல் மைல் அவசரத்தைப் பொறுத்தவரை முதன்முதலாக விநியோகப் பணிக்கு வருகின்ற தொழிலாளர்களைப் பல்வேறு விதங்களில் கவர்வதற்கான உத்தி இது. தொடக்கத்தில் அவர்கள் புதிதாக ‘லாகின்’ செய்த பிறகு, அவர்களுக்கு அடிக்கடி ‘ஆர்டர்’ கிடைத்துக்கொண்டே இருக்கும்.
ஒருவருக்கு ஒரு மணி நேரத்துக்குள் ஐந்து, ஆறு விநியோகம் கொடுக்க முடியும் என்றால், அவர் கூடுதலாகச் சம்பாதிப்பதற்கான வாய்ப்பைப் பெறுகிறார் என்று அர்த்தம். அதேபோல வாடிக்கையாளரைப் பொறுத்தவரை, அவருக்குத் தேவையான உணவை ஆர்டர் செய்வதற்கு அவருக்கு அருகில் நிறைய உணவு விடுதிகள் இருப்பதுபோலவும் டெலிவரி பார்ட்னர்கள் அதிகம் பேர் (Ghost Riders) சும்மா நின்றுகொண்டிருப்பது போலவும் ஒரு போலியான தோற்றத்தை அல்காரிதம் உருவாக்கிக் காட்டும்.
இத்தகைய சூழலில் வாடிக்கையாளர் விரைந்து சென்று அந்த உணவை ‘ஆர்டர்’ செய்வார். முதன்முதலில் வேலைக்கு வந்திருக்கின்ற புதிய தொழிலாளர்களுக்கு அதிகமான ஆர்டர்கள் கிடைக்கும். அவர்களும் விரைந்து சென்று அந்த ஆர்டரைக் கொடுத்துவிடுவார்கள். திருப்தியடையும் வாடிக்கையாளர் நல்ல ‘ரேட்டிங்’ கொடுப்பதால் இந்தத் தொழிலில் எப்படியாவது தங்களை நிலைநிறுத்திக் கொண்டு அதிகமாகச் சம்பாதித்து முன்னேறலாம் என்கின்ற ஆசையைத் தொழிலாளர்களிடம் அந்த அல்காரிதம் தூண்டுகிறது.