

உலக அளவில் மருத்துவத் தொழில்நுட்பம், மருத்துவ ஆராய்ச்சி, சுகாதார நடைமுறைகள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால், பொதுச் சுகாதாரம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்துவருகிறது. 2025இல் சுகாதாரப் பராமரிப்பின் மக்கள் பரப்பை அதிகப்படுத்துவதற்கும், பயனாளர்களை அணுகும் விதம், மருத்துவப் பணியாளர்களின் செயல்திறன், பயனாளர்களுக்கு ஏற்படும் பலன்கள் போன்றவற்றை மேம்படுத்துவதற்கும் பல கண்டுபிடிப்புகள் உதவியுள்ளன.
ஏஐ செய்யும் புரட்சி: மருத்துவர்கள் நோயைக் கண்டறிதலில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) புரட்சியை ஏற்படுத்திவருகிறது. இயந்திரக் கற்றல் மூலம் திறன் பெற்றுள்ள கணினிகள், பயனாளர்களின் பரிசோதனைப் படங்களைப் பகுப்பாய்வு செய்வதிலும், முடிவுகளைத் தீர்மானிப்பதிலும், மேம்பட்ட சிகிச்சையைப் பரிந்துரைப்பதிலும், மருத்துவத் தரவுகளைச் சேமிப்பதிலும் மனித ஆற்றலைவிடப் பல மடங்கு அதிகத் திறன் கொண்டுள்ளதால், பல்வேறு அசாதாரணங்களைத் தெளிவாக அடையாளம் காண முடிகிறது; துல்லியமாக நோயைக் கணிக்க முடிகிறது; சிகிச்சை முறையை விரைவாகத் தீர்மானிக்க முடிகிறது.
ஆரம்பநிலைப் புற்றுநோய்கள் முதல் இதயநோய்கள்வரை பலவித உடல்நலப் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறியும் ஏஐ தொழில்நுட்பம் நோய்த் தடுப்பு மருத்துவத்துக்குப் புதிய வலுசேர்த்துள்ளது.
தொலைநிலை மருத்துவத்தில் முன்னேற்றம்: மருத்துவர்கள் இல்லாத இடங்களில் அல்லது மருத்துவப் பயனாளர்கள் மருத்துவரை நேரடியாகச் சந்திக்க இயலாத சூழல்களில் ‘டெலிமெடிசின்’ என்னும் தொலைநிலை மருத்துவம் நடைமுறைக்கு வந்தது. குறிப்பாக, கரோனா பெருந்தொற்றின்போது இந்தச் செயல்முறை கோடிக்கணக்கானவர்களுக்குப் பலன் தந்தது.
பயனாளர்கள் மெய்நிகர் ஆலோசனைகளைப் பெறுவது, மெய்நிகர் பரிசோதனைகளை மேற்கொள்வது, தகுந்த சிகிச்சைகளைப் பெறுவது, பிந்தைய கவனிப்பைத் தொடர்வது போன்றவற்றில் கணிசமாக முன்னேற்றம் அடைந்த தொலைநிலை மருத்துவம், பயனாளர்கள் மருத்துவமனைக்கு வருகை புரிவதையும் அவர்களின் காத்திருப்பு நேரத்தையும் பெரிதும் குறைத்தது.
இப்போது அவற்றையெல்லாம் தாண்டி, மருத்துவர்கள் தொலைவில் இருந்துகொண்டே நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சையும் மேற்கொள்ள முடியும் என்பதை உறுதிசெய்துள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக, இந்தியாவில் மருத்துவர் சந்திரமோகன் வாடி ‘ரோபாட்டிக் டெலிசர்ஜரி’யில் உலகிலேயே முதன்முறையாக ஒரு குழந்தைக்குச் சிறுநீரக வடிகுழாய் அடைப்பை நீக்கிய சிகிச்சையைச் சொல்லலாம்.
மேம்பட்டுவரும் தனிப்பயனர் மருத்துவம்: 2025இல் எழுச்சிபெற்றுள்ள பொதுச் சுகாதார மருத்துவம் எதுவென்றால், தற்போது மேம்பட்டுவருகிற தனிப்பயனர் மருத்துவம்தான் (Personalized Healthcare). ஒரு நோய்க்குப் பொதுவான சிகிச்சையைப் பெறுவதைவிடத் தனி பயனாளர் ஒருவருக்கு எந்தவிதமான சிகிச்சை தேவை என்பதைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவதே சாலச் சிறந்தது.