முன்னேறும் இந்திய ரயில்வே | சொல்... பொருள்... தெளிவு

நவீனத் தொழில்நுட்பங்களுடன் கால மாற்றத்துக்கு ஈடுகொடுத்துப் பயணிக்கிறது
முன்னேறும் இந்திய ரயில்வே | சொல்... பொருள்... தெளிவு
Updated on
3 min read

இன்று உலகின் மிகப்பெரிய ரயில்வே வலைப்பின்னல்களில் ஒன்றாக வளர்ந்து நிற்கிற இந்திய ரயில்வே, 173 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சிறு முயற்சியாகவே தொடங்கியது. இன்று நாள்தோறும் 25,000 ரயில்கள் இயக்கப்படுகின்றன.

2025–2026 நிதியாண்டில் 741 கோடி பேர் ரயில்களில் பயணித்துள்ளனர். இந்தக் காலக்கட்டத்தில் ரயில்வே துறை கையாண்ட சரக்குகளின் அளவு 167 கோடி டன். அனைத்துக்கும் மேலாக, இந்தியாவில் 99.6% ரயில் வழித்தடங்கள் மின்மயமாக்கம் செய்யப்பட்டுள்ளன.

முதல் பயணிகள் ரயில்

பம்பாய் (இன்றைய மும்பை) - தானே இடையேயான 34-35 கி.மீ. தொலைவை 1853 ஏப்ரல் 16இல் கடந்தது இந்தியாவின் முதலாவது பயணிகள் ரயில். ‘கிரேட் இந்தியன் பெனின்சுலா ரயில்வே’ நிறுவனத்தால் அது இயக்கப்பட்டது.

புதிய போக்குவரத்து நடைமுறையைக் காண விடுமுறையும் அனுமதியும் வழங்கப்பட்டதால், போரி பந்தர் ரயில்நிலையத்தில் பெருந்திரள் மக்கள் கூடியிருந்தனர்.

21 குண்டுகள் முழங்க, ரயில் கிளம்பியது. 14 பெட்டிகளில் ஏறக்குறைய 400 பேர் பயணித்த அந்த ரயிலை ஃபாக்லேண்ட் (Falkland) நீராவி இன்ஜின் இழுத்துச்சென்றது.

இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் பிராட்கேஜ் எனும் அகலவழிப் பாதையில் (1.60 மீ.) இயக்கப்பட்டாலும், நாட்டின் வெவ்வேறுபட்ட புவியியல் பரப்புக்கு ஏற்ப மீட்டர்கேஜ், ஸ்டாண்டர்டுகேஜ், நேரோகேஜ் என இருப்புப்பாதைகள் வெவ்வேறாக அமைக்கப்பட்டன.

1880 வாக்கில் 14,500 கி.மீ. தொலைவுக்கு இருப்புப்பாதைகள் நீட்டிக்கப்பட்டன. 1881இல் மேற்கு வங்கத்தின் சமவெளிப் பகுதியான புது ஜல்பாய்குரியையும் மலைப்பகுதி ஊரான டார்ஜிலிங்கையும் இணைக்கும் வகையில் ரயில் தடம் போடப்பட்டது. 1895இல் ராஜபுதனா மால்வா ரயில்வேயின் அஜ்மீர் பணிமனையில் முதலாவது நீராவி இன்ஜின் தயாரிக்கப்பட்டது.

1925இல் பம்பாய் விக்டோரியா முனையம் - குர்லா துறைமுகம் இடையே முதன்முறையாக மின்சாரம் மூலம் ரயில் இயக்கப்பட்டது. அதன் பின்னரும் நீராவி, டீசல் இன்ஜின்களைச் சார்ந்தே நாட்டின் ரயில் போக்குவரத்து இருந்தது.

நாடு விடுதலை பெற்ற பின்னர் 42 ரயில்வே அமைப்புகள் ஒன்றிணைக்கப்பட்டு ‘இந்திய ரயில்வே’ உருவாக்கப்பட்டது. எளிதாக நிர்வகிக்கும் நோக்கில், 1952இல் அது ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது. 1985க்குப் பின்னர் நீராவி இன்ஜின் பயன்பாடு படிப்படியாகக் குறைக்கப்பட்டது.

நவீன யுகத்தில்...

தொழில்நுட்பங்கள், கட்டமைப்பு வசதிகளில் மேம்பாட்டைத் துரிதப்படுத்தியதன் மூலமாக, 21ஆம் நூற்றாண்டில் அபார வளர்ச்சியை இந்திய ரயில்வே எட்டியிருக்கிறது.

மின்மயமாக்கம், நவீன ரயில் வடிவமைப்பு, பாதுகாப்பு அமைப்புகள், ரயில் நிலையங்கள் புனரமைப்பு, டிஜிட்டல் சேவைகள் போன்றவற்றில் அது பிரதிபலிக்கிறது.

பயணிகள் வசதி, செயல்பாட்டுத் திறன், தடையற்ற இணைப்பு ஆகியவற்றில் வலுவாகக் கவனம் செலுத்துவதன் வழியாக நவீனமயமாக்கத்தை எட்டிவருகிறது. 2014இல் ரயில் தடங்களில் மின்மயமாக்கல் 20% ஆக இருந்த நிலையில், தற்போது அது 99.6 சதவீதத்தைத் தொட்டிருக்கிறது.

இதனால், கடந்த நிதியாண்டில் மட்டும் ஏறக்குறைய 180 கோடி லிட்டர் டீசல் பயன்பாடு தவிர்க்கப்பட்டுள்ளது. இவ்விஷயத்தில் பிரிட்டன், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளைவிட முன்னணி வகிக்கிறது இந்தியா. கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் நாட்டில் 54,600 கி.மீ. இருப்புப்பாதைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

அதிநவீன ரயில் சேவைகள்

2019 பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘வந்தே பாரத்’ விரைவு ரயில், உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு ‘மேக் இன் இந்தியா’ (உள்நாட்டில் தயாரிப்போம்) திட்டத்தின்கீழ் தயாரிக்கப்பட்ட முதலாவது ‘ஓரளவு-அதிவேக ரயில்’.

தற்போதுவரை ஒரு லட்சம் பயணங்களை நிறைவு செய்திருக்கும் இந்த ரயில் சேவை, ஏறக்குறைய 9.1 கோடிக்கும் மேற்பட்டோரைச் சுமந்து சென்றுள்ளது. 2026 ஜனவரியில் அறிமுகமான ‘படுக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரயில்’ கடந்த மூன்று மாதங்களில் 1.21 லட்சம் பயணிகளை ஏற்றிச்சென்றுள்ளது.

ஏழை, நடுத்தரக் குடும்பங்கள் மலிவான கட்டணத்தில் பயணிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் ‘அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ்’களின் எண்ணிக்கை இப்போது 60 ஆகியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு, 2026-27 மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.2,78,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வலுவான பயணிகள் பாதுகாப்பு

பயணிகள் சேவை, பாதுகாப்பு, செயல்பாட்டுத் திறனை விரிவுபடுத்துவதற்காகத் தொலைதொடர்பு, டிஜிட்டல் கட்டமைப்பை ரயில்வே துறை வலுப்படுத்தி வருகிறது. உயர்திறன்மிக்க, மிக முக்கியமான ரயில்வே பயன்பாடுகளைச் செயல்படுத்தும் வகையில் ஐபி எம்பிஎல்எஸ் (Internet Protocol Multi-Protocol Label Switching) மூலமாகத் தொலைதொடர்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

1,396 ரயில்நிலையங்களில் இது செயல்படுத்தப்பட்டுள்ளது. பரவலான வீடியோ கண்காணிப்பு, மொபைல் ரயில் வானொலி தொடர்பு (MTRC), பயணிகள் முன்பதிவு அமைப்பு (PRS), கட்டுப்பாட்டுக் கண்காணிப்பு, தரவு சேகரிப்பு (SCADA) உள்ளிட்டவை இயங்க இது உதவுகிறது.

ர​யில்கள் மோதிக்​கொள்​வதைத் தடுப்பது, செயல்​பாட்டுப் பாதுகாப்பை விரிவுபடுத்துவதை நோக்க​மாகக் கொண்டு ‘கவச்’ தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு வடிவமைக்​கப்​பட்​டுள்ளது.

உள்நாட்டில் தயாரிக்​கப்பட்ட இந்நுட்பம் 3,100 கி.மீ. வழித்​தடத்தில் செயல்​படுத்​தப்​பட்டு இருப்​ப​தோடு, மேலும் 24,400 கி.மீட்​டருக்கு விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று​வரு​கின்றன.

1,874 ரயில் நிலையங்​களில் செயற்கை நுண்ணறிவு அடிப்​படையிலான பகுப்​பாய்வு, முக அடையாளத் தொழில்​நுட்​பத்தில் செயல்​படும் காணொளிக் கண்காணிப்பு அமைப்பு (AI-Enabled Video Surveillance) செயல்​பாட்டுக்கு வந்துள்ளன.

சரியான நேரத்தில் அறிவிப்புகள், சிறப்பான பயணிகள் தொடர்பை உறுதிப்​படுத்தும் வகையில் 1,405 ரயில் நிலையங்​களில் நிகழ்-நேரப் பயணிகள் தகவலமைப்பு செயல்​படுத்​தப்​படு​கிறது. சுரங்​கப்​பாதைத் தடங்களில் பயணிகள் தடையற்ற இணைப்​பையும் பாதுகாப்பான செயல்​பாடு​களையும் பெறும் வகையில் சுரங்கத் தகவல்​தொடர்பு அமைப்பு (Tunnel Communication Systems) செயல்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

எட்டப்பட்ட சாதனைகள்

ரயில்வே விரிவாக்கத்தில் தன்னிறைவைப் பிரதிபலிக்கும் வகையில், கடந்த நிதியாண்டில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் 1,674 ரயில் இன்ஜின்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. சரக்குப் போக்குவரத்துக் கட்டமைப்பை விரிவாக்கும் வகையில் 35 கதிசக்தி (PM Gati Shakti) சரக்கு முனையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை ஒட்டி ஏறக்குறைய 65,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. பயணச்சீட்டு முன்பதிவு, ரயில்கள் குறித்த தகவலறிதல், குறைகள் தீர்வுக்கான ஒருங்கிணைந்த தளமாக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் ‘ரயில்ஒன்’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

பல்வேறு மாற்றங்களுக்கு மத்தியில் இன்றளவும் அடுத்த தலைமுறையோடு நெருக்கமாகப் பயணிக்கும் ரயில்வே துறை, நாட்டின் வளர்ச்சிப் பயணத்தோடு பிணைந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.

முன்னேறும் இந்திய ரயில்வே | சொல்... பொருள்... தெளிவு
Bulbbul: பலீவனப்படுத்தும் சமூகத்தைப் பந்தாடும் புல்புல் | திரை தேவதைகள் 15

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in