

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தத்தெடுப்பு உரிமைகள் தொடர்பாக அண்மையில் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில், குழந்தைக்கு மூன்று மாதங்களுக்கு மேல் வயது இருந்தாலும், தத்தெடுக்கும் தாய்மார்களுக்கு 12 வார மகப்பேறு விடுப்பு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஒரு குழந்தையின் மீதான நிபந்தனையற்ற அன்பையும் அரவணைப்பையும் சட்டம் அங்கீகரிக்க வேண்டும் என்ற பெரும் தேவையிலிருந்து இந்தத் தீர்ப்பு பிறந்துள்ளது. ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாலும் சரி, தத்தெடுத்தாலும் சரி, அவருக்கு வழங்கப்படும் மகப்பேறு உரிமைகள் சமமாக இருக்க வேண்டும் என்பதை அரசமைப்புச் சட்டத்தின் வழி நின்று இந்தத் தீர்ப்பு உறுதிசெய்துள்ளது.