

மலையாள நடிகை கடத்தப்பட்டுப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் ஆறு பேருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. அதேவேளையில், இந்த வழக்கிலிருந்து நடிகர் திலீப் விடுவிக்கப்பட்டது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
கொச்சியின் பரபரப்பான சாலையில், ஓடும் காருக்குள் வைத்து, மலையாள முன்னணி நடிகை 2017 பிப்ரவரியில் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாக்கப்பட்டார். இதையடுத்து, நடிகையின் வாகன ஓட்டுநர் உள்பட அடுத்தடுத்துப் பலர் கைது செய்யப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாகவும் மலையாளத் திரையுலகில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்முறைகளையும் பாலினப் பாகுபாடுகளை எதிர்கொள்ளும் வகையிலும் ‘வுமன் இன் சினிமா கலெக்டிவ்’ (wcc) அமைப்பு நிறுவப்பட்டது. இதன் உறுப்பினர்கள் கேரள முதல்வரைச் சந்தித்து வழக்கு விசாரணையில் வேகம் தேவை என வலியுறுத்தினர்.
இதனிடையே கைது செய்யப்பட்டவர்கள் உடனான திலீப்பின் உரையாடல் வழக்கின் கோணத்தை மாற்றியது. விசாரணைக்குப் பிறகு நடிகர் திலீப் கைது செய்யப்பட, இந்த வழக்கு நாடு முழுவதும் பேசுபொருளானது. வழக்கை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு தனது குற்றப்பத்திரிகையில் 12 பேரைக் குற்றவாளிகள் எனவும், நடிகர் திலீப்பை எட்டாவது குற்றவாளியாகவும் குறிப்பிட்டிருந்தது.