

பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று 2023ஆம் ஆண்டை ‘சர்வதேசச் சிறுதானிய ஆண்டு’ என ஐ.நா. அமைப்பு அறிவித்தது. 2024இல் அனைத்துப் பருவநிலைகளையும் தாங்கி வளரும் 109 வகையான பயிர்களைப் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்.
கோவையில் 19.11.25இல் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டில் பேசிய பிரதமர், “முதலில் ஒரு ஏக்கர் ஒரு பருவம் என்று சிறிய அளவில் இயற்கை வேளாண்மையைத் தொடங்குங்கள்” என்று கேட்டுக்கொண்டார். சரி, பொதுவாகவே வேளாண்மையின் நிலை எப்படி இருக்கிறது?
சாதித்துக்காட்டிய உழவர்கள்: உலக வேளாண்மையில் அமெரிக்கா பொறாமைப்படும் இடத்தில் இந்தியா வீற்றிருக்கிறது. 179 நாடுகளுக்கு இந்தியா அரிசி ஏற்றுமதி செய்கிறது. உலக அரிசி வர்த்தகத்தில் இந்தியப் பங்களிப்பு 40 சதவீதம். இந்தப் போட்டியில் ஓட முடியாத அமெரிக்கா ஆறு மாதங்களுக்கு முன்பாக இந்திய அரிசிக்கு 10 சதவீதமாக வரி போட்டு, அதை 25 சதவீதமாக உயர்த்தி, இப்போது 50 சதவீத வரியாக்கிவிட்டது.
வேளாண்மை வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் மனிதவளம். உணவு உற்பத்தியில் ஏற்றஇறக்கங்கள் இயல்பானது. எனினும் உழவர்கள் பெரும் உழைப்புடன் வயல்வெளிகளில் நின்று கழனிகளைத் தங்கமாக்குகின்றனர். எடுத்துக்காட்டாக, கோவிட் தொற்றின் தாக்கம் நீடித்த 2021-22இல்கூட தமிழகத்தின் மொத்த உணவு தானிய உற்பத்தி 119.98 லட்சம் டன்.
இந்த வெளிச்சப் புள்ளிகளின் மறுபக்கம் இருண்டுகிடக்கிறது. இதே தருணத்தில், இந்திய உழவர்கள் தங்கள் உற்பத்திப் பொருள்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையம் 2004இல் கூறிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு போராடிக்கொண்டே உள்ளனர்.
வளர்ச்சி என்பது வேளாண் உற்பத்திப் பெருக்கம் மட்டுமல்ல, விவசாயிகளின் வருமானம் இருமடங்காகப் பெருகுவது என்பது அந்தக் குழுவின் இலக்கு. இந்தியாவில் 800க்கும் மேற்பட்ட பொருள்கள் விளைகின்றன. அதில் 23 வகையான பொருள்களுக்கு மட்டுமே அரசு விலையைத் தீர்மானிக்கிறது. இந்த நேரத்தில் மத்திய அரசு கொண்டுவர முயன்ற வேளாண் சட்டங்களுக்கு எதிராக உழவர்கள் நடத்திய போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது.