

அடிமை வர்த்தகம் மனிதகுலத்துக்கு எதிரான கொடூரமான குற்றம் என்று அதிகாரபூர்வமாக அங்கீகரித்துள்ளது ஐ.நா. அவை. ஆப்ரிக்கக் கூட்டமைப்பின் நீண்ட கால வேண்டுகோளின்படி, 2026 மார்ச் 25 அன்று நிறைவேற்றப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் வெறும் காகிதத்தில் போடப்பட்ட கையெழுத்து அல்ல, பல கோடி எளிய மக்களுக்குக் கிடைத்த நீதிக்கான ஆறுதல் மொழி.
மனிதகுல வரலாற்றில் நீக்க முடியாத கறையாக விளங்கும் நிறப் பாகுபாடும் அடிமை முறையும் ஒரு நாளில் திடீரென்று தோன்றிவிடவில்லை. பல நூற்றாண்டுகளாக அதிகாரம், பொருளாதாரம், தவறான அறிவியல் பார்வை போன்றவற்றால் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டவை அவை.
சிதைக்கப்பட்ட மானுடம்
ஐரோப்பாவின் வல்லரசு நாடுகள் ஆப்ரிக்கக் கண்டத்தைக் கைப்பற்றத் தொடங்கியபோது, அங்கிருந்த மக்களை ‘நாகரிகமற்றவர்கள்’ என்று அழைத்தன.
17ஆம் நூற்றாண்டில் அடிமை வணிகம் லாபகரமான தொழிலாக மாறியபோது, சக மனிதர்களை விலைக்கு வாங்குவதை மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் செய்யப் பல தவறான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
மண்டையோட்டின் அளவு, மூளையின் அமைப்பு போன்றவற்றை வைத்து ஆப்ரிக்கர்களுக்கு அறிவுத்திறன் குறைவு எனப் பொய்யான ஆய்வுகள் வெளியிடப்பட்டன. ஆப்ரிக்காவின் மாபெரும் பேரரசுகளை அழித்து, அங்கிருந்த கலைகளையும் பண்பாட்டையும் ஐரோப்பியர்கள் திட்டமிட்டு மறைத்தனர்.
ஆப்ரிக்காவை ஓர் ‘இருண்ட கண்டம்’ என்றும், கறுப்பினத்தவரை வெறும் ‘வேட்டைக்காரர்கள்’ என்றும் பிம்பங்களைக் கட்டமைத்து, சுயலாபத்துக்காக அவர்களை அடிமைகளாகக் கடத்திச் சென்றனர்.
16ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டுவரை, உலகம் கண்டிராத ஒரு மாபெரும் மனித வேட்டை ஆப்ரிக்க மண்ணில் நிகழ்த்தப்பட்டது. 1.2 கோடிக்கும் அதிகமான ஆப்ரிக்கர்கள் வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டு, விலங்குகளைப் போலச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, கப்பல்களில் மேற்கத்திய நாடுகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். இது ‘முக்கோண வர்த்தகம்’ (Triangular Trade) என்று அழைக்கப்பட்டது.