

சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை முன்னிட்டு, ஆழி பதிப்பகம் 100 திராவிட இயக்க நூல்களை வெளியிட்டுள்ளது, இந்த ஆண்டு சென்னை புத்தகக் காட்சியின் பேசுபொருள் களில் ஒன்றாகியுள்ளது. அரசியல், சமூகம், வரலாறு, மொழிபெயர்ப்புகள் எனப் பல வகைகளில் புத்தகங்களை வெளியிட்டுவரும் ஆழி பதிப்பகம், சென்னை புத்தகக் காட்சியை முன்னிட்டு ‘திராவிட நூலகம்’ என்கிற நூல் வரிசையில் 100 புத்தகங்களை வெளியிட்டுள்ளது.
இந்தப் புத்தகங்கள் வரிசையில், 1916இல் நீதிக் கட்சியின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட, பார்ப்பனரல்லாதோர் அறிக்கை இடம்பெற்றுள்ளது. நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திமுக ஆகிய அமைப்புகளின் தலைவர்கள், அறிஞர்கள் எழுதிய நூல்கள் இடம்பெற்றுள்ளன. அறிஞர் அண்ணாவின் அரசியல் சமூகப் புத்தகங்களும் நாவல்கள், நாடகங்கள், சிறுகதைத் தொகுப்புகளும் வாசகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’ ஆறு பாகங்களும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அவரது ‘குறளோவியம்’, ‘சங்கத்தமிழ்’, ‘தொல்காப்பியப் பூங்கா’, ‘திருக்குறள் உரை’ ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.