

திராவிட இயக்க வரலாற்றைப் பெரியாருக்கு முன், பெரியாருக்குப் பின் என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
பெரியாருக்கு முந்தைய காலகட்டத்தில் முக்கியமானவர்களில் ஐந்து முன்னோடிகள் இவர்கள்.
அயோத்திதாசர் (1845 - 1914)
1845-ல் சென்னையில் பிறந்த அயோத்திதாச பண்டிதரின் இயற்பெயர் காத்தவராயன். தனக்குத் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுக்கொடுத்த அயோத்திதாச கவிராஜ பண்டிதர் மீதான பற்றால் தன் பெயரை மாற்றிக்கொண்டவர். தமிழ் தவிர சம்ஸ்கிருதம், பாலி, ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர். ஒடுக்கப்பட்டோரின் நலன்களுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட அயோத்திதாசர் ‘திராவிடன்’, ‘தமிழன்’ அடையாளங்களைப் பேசியவர்களில் முதன்மையானவர். திராவிட மொழிக் குடும்பம் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தோர் மத்தியில் மட்டுமே புழங்கிவந்த ‘திராவிடம்’ என்ற சொல்லை ஒரு அரசியல் சொல்லாடலாக முதலில் உருவாக்கியவர் இவரே. ரெவரெண்ட் ஜான் ரத்தினத்தோடு சேர்ந்து 1885-ல் ‘திராவிட பாண்டியன்’ வார இதழை அயோத்திதாசர் தொடங்கினார். 1891-ல் ‘திராவிட மகாஜன சபா’ அமைப்பை உருவாக்கினார். 1907-ல் இவர் தொடங்கிய ‘ஒரு பைசாத் தமிழன்’ வார இதழ் பத்திரிகை ஓராண்டுக்குப் பிறகு ‘தமிழன்’ என்று பெயர் மாற்றம் அடைந்தது. அயோத்திதாசர் மறைவுக்குப் பின்னரே நீதிக் கட்சி, திராவிடர் கழகம், திராவிடக் கட்சிகள் என்று திராவிட இயக்க வரலாறு தொடங்குகிறது என்றாலும், அந்தச் சிந்தனை மரபுக்கு முன்னோடி என்று அயோத்திதாசரைக் கொண்டாடலாம். சாதி ஒழிப்புக்கான தமிழ் அரசியல் குரல்களில் முன்னோடி அவருடையது!
பிட்டி. தியாகராயர் (1852-1925)
1852-ல் சென்னை, கொருக்குப்பேட்டையில் பிறந்தவர் தியாகராயர். சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. படிப்பை முடித்தார். பெரும் செல்வந்தரான இவர் ‘பிட்டி நெசவு ஆலை’யை நிறுவியவர். வணிகத்தில் கிடைத்த செல்வத்தைப் பொதுப் பணியில் செலவிட்டவர். வண்ணாரப்பேட்டையில் ஒரு பள்ளியை ஏற்படுத்தினார். பச்சையப்பர் கல்லூரியின் அறங்காவலராக அதன் வளர்ச்சிக்கும் உதவினார். கொடையாளியான அவருக்கு, திருப் பணிகளுக்காகப் பல ஆயிரம் ரூபாய் கொடை அளித்தாலும் கோயில்களில் பிராமணர் களுக்குக் கிடைக்கும் மரியாதை பிராமணரல்லாதோருக்குக் கிடைக்காததைப் பார்த்த போது எல்லாவற்றையும்விட இங்கு முக்கியம் சமூக நீதி என்று தோன்றியது. காங்கிரஸில் இருந்தபோது அங்கும் பிராமணர் ஆதிக்கத்தை உணர்ந்தவர் பிராமணரல்லாதோருக்கென ஒரு தனி இயக்கம் கண்டாக வேண்டும் என்ற உந்துதலுக்கு உள்ளானார். இதே சிந்தனையைக் கொண்டிருந்தவர்களான டி.எம்.நாயர், சி.நடேசனார் ஆகியோருடன் இணைந்து தியாகராயர் 1916-ல் உருவாக்கிய தென்னிந்திய நலவுரிமைச் சங்கமே பின்னாளில் அது நடத்திய பத்திரிகையின் (ஜஸ்டிஸ்) பெயரால் ‘ஜஸ்டிஸ் பார்ட்டி’ - நீதிக் கட்சி என்றானது. 1920-ல் நடந்த தேர்தலில் மதறாஸ் மாகாணத்தில் பெரும்பான்மை இடங்களை வென்றது நீதிக் கட்சி. சென்னை மாநகராட்சியில் பதவியிலிருந்த காலத்தில் தியாகராயர் ஆற்றிய பணிகள் மிக முக்கியமானவை. இந்தியாவிலேயே முன்னோடியாக சென்னை மாநகராட்சிப் பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தவர் இவரே!
டி.எம்.நாயர்
(1868 - 1919)
1868-ல் பாலக்காட்டில் தரவாத் மாதவன் நாயர் பிறந்தார். பிரிட்டன், பிரான்ஸில் மருத்துவப் படிப்புகளை முடித்துவிட்டு, 1897-ல் நாடு திரும்பியவர், பொது வாழ்வில் கொண்ட நாட்டத்தால் அரசியலில் இறங்கினார். நீதிக் கட்சியின் ஏனைய முன்னோடிகளைப் போலவே காங்கிரஸில் பிராமண ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டவர். பிராமணரல்லா தோர் இயக்கத்தின் தேவையை உணர்ந்தார். நீதிக் கட்சியைத் தொடங்கிய மூவரில் ஒருவரானார். கட்சியின் சித்தாந்தத்தை வடிவ மைப்பதில் முக்கியப் பங்காற்றினார். அவருடைய மரணம் வரை ‘ஜஸ்டிஸ்’ பத்திரிகையின் ஆசிரிய ராக இருந்தார். பெரியாரால் ‘திராவிட லெனின்’ என்று அழைக்கப்பட்டார். ஆனால், நீதிக் கட்சி தன் வெற்றிக்கனிகளைச் சுவைப்பதற்கு முன்பே காலமானார்.
சி.நடேசனார் (1875-1937)
1875-ல் சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்தவரான சி.நடேசனார் மருத்துவம் பயின்றவர். பிராமணரல்லாத மாணவர்களுக்கு விடுதிகளில் இடம் மறுக்கப்பட்ட காலகட்டத்தில், அவர்களுக்காக ‘திராவிடர் இல்லம்’ விடுதியை 1914-ல் தொடங்கியவர் இவர். அவர்களின் உணவு, உடை, தங்குமிடம் ஆகிய தேவைகளை மட்டுமின்றி, அவர்களின் கல்வி வளர்ச்சிக்குமான செலவுகளையும் ஏற்றவர். இது தவிர, ‘சென்னை ஐக்கிய சங்கம்’ என்ற அமைப்பையும் நடேசனார் உருவாக்கினார். கல்வி, வேலைவாய்ப்புகளில் பிராமணரல்லாதார் சமூகம் ஏற்றம் காண, அரசியல் அதிகாரம் மிகவும் இன்றியமையாதது என்பதை உணர்ந்த நடேசன் ஏனைய முன்னோடிகளுடன் கைகோத்ததன் விளைவே நீதிக் கட்சி. 1923-ல் மதறாஸ் மாகாணச் சட்ட மன்றத்தில் அவர் காலடி எடுத்துவைத்தார். ‘சென்னை பப்ளிக் சர்வீஸ் கமிஷன்’ அமைக்கப்பட்டதில் முக்கியமான பங்கு இவருக்கு உண்டு. ஆதி திராவிடர்களின் உரிமை, தீண்டாமை ஒழிப்பு, ஆலயப் பிரவேச உரிமை ஆகியவற்றைக் குறித்து 1918-லேயே பேசிய நடேசன், தன்னுடைய பதவிக் காலத்தில் பிராமணரல்லாதோர் மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்குப் பெரும் உந்துசக்தியாக இருந்தார்!
பனகல் அரசர் (1866 - 1928)
காளஹஸ்தியில் பிறந்த பனகல் அரசரின் இயற்பெயர் பனங்கன்டி ராமராயநிங்கார். சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தவர், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். வடக்கு ஆர்க்காடு மாவட்ட வாரியத்தின் பிரதிநிதியாகக் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து பொது வாழ்க்கை தொடங்குகிறது. நீதிக் கட்சி உருவெடுத்தபோது தன்னை இணைத்துக்கொண்டு, அதன் தூண்களுள் ஒன்றாக இவரும் உருவெடுத்தார். 1920-ல் நீதிக் கட்சி தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தபோது, முதல் ஆறு மாத காலம் சுப்பராயலு ரெட்டியார் முதல்வராக இருந்தார். பின்னர் அவர் பதவி விலகியதைத் தொடர்ந்து நீதிக் கட்சி யின் இரண்டாவது முதல்வராகப் பதவியேற்ற பனகல் அரசர், 1926 வரை முதல்வராக இருந்தார். பிராமணரல்லாதோர் முன்னேற்றத்துக்கும் சமத்துவத்துக்கும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னின்று எடுத்த பனகல் அரசர், 1921-ல் கொண்டுவந்த இடஒதுக்கீட்டுக்காகவே என்றென்றும் நினைவுகூரப்படுவார். 1928-ல் இவர் காலமானார்.
- ஆசை,
தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in