அசோகமித்திரனின் ‘விமோசனம்’: வெகுஜன ரசனைக்கும் அப்பால்...

அசோகமித்திரனின் ‘விமோசனம்’: வெகுஜன ரசனைக்கும் அப்பால்...
Updated on
3 min read

அசோகமித்திரனின் கவனம்பெற்ற கதைத் தொகுப்புகளில் ஒன்று, ‘விமோசனம்’. அசோகமித்திரன் நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளை எழுதியிருக்கிறார். எழுத்தையே முழுநேர வேலையாகக் கொண்ட தைரியசாலி அவர். யதார்த்தவாதக் கதைகளின் காலகட்டமான 1960களில் அவர் எழுதிய கதைகளின் தொகுப்பு இது.

இந்தத் தொகுப்பில் பன்னிரண்டு கதைகள் உள்ளன. அசோகமித்திரனின் கதையின் பின்னணி, நடுத்தரவர்க்க வாழ்க்கைதான். நடுத்தர வர்க்கத்தினரின் பிரச்சினை, பலவீனம் என அவர்களது உலகத்தைக் காட்சிப்படுத்துவது அசோகமித்திரன் எழுத்தின் விசேஷமான அம்சம். வெளியிலிருக்கும் பிரம்மாண்டமான அரசியல், சமூக மாற்றங்களை எல்லாம் அந்த நடுத்தர வர்க்க வாழ்க்கைக்குள் உண்டாக்கும் விளைவு என்ற மட்டத்தில்தான் அசோகமித்திரன் தன் கதைகளுக்குள் பதிவுசெய்கிறார். அவரது கதைகளில் பெண்கள் படும்பாடு வேதனையுடன் பதிவுசெய்யப்படுவது பொதுவான அம்சம்.

தலைப்புக் கதையான ‘விமோசன’த்தில், சரஸ்வதி அம்மாதிரியான ஒரு பெண். ஒரு ஒண்டுக் குடித்தன வீட்டில் தன் கணவன், கைக்குழந்தையுடன் வசிக்கிறாள். அரிசிக்கும் பருப்புக்கும் திண்டாடும் வாழ்க்கை. கோபக்காரக் கணவனின் அடியும் ஏச்சும் இன்னொரு பக்கம். திடீரென ஒருநாள் அலுவலகத்திலிருந்து வந்தவன், அவசரப்படுத்தி அவளையும் குழந்தையையும் சாமியாரைப் பார்க்க அழைத்துச் செல்கிறான். இரவு தாமதமாகி வீடு திரும்புகிறார்கள். ஒரு கையில் பையும் மறுகையில் குழந்தையுமாக பஸ்ஸில் ஏறத் தாமதித்ததால் ஏற்கெனவே அவனிடம் அவள் வசவுகளை வாங்கியிருப்பாள். வீட்டில் எதையெதையோ நினைத்து உறக்கம் வராமல் கிடக்கும்போதுதான், குழந்தையின் பால்புட்டி அவளுக்கு நினைவில் வருகிறது. குழந்தைகளுடன் புழங்கியவர்களுக்குப் பால்புகட்டியின் முக்கியத்துவம் புரியும். அது காணவில்லை என்பதைவிட, அதனால் குழந்தை அழுதால் உறக்கத்திலிருந்து விழிக்கும் கணவனின் அடிதான் அவளைப் பயமுறுத்துகிறது.

அது பூஜைக்குப் போன இடத்தில் தவறவிடப்பட்டுவிட்டது. சிறு கரண்டியில் பால் புகட்டும் பிரயத்தனம் தோல்வியடைகிறது. குழந்தை கத்த ஆரம்பிக்கிறது. பிடரியில், கன்னத்தில், மறுகன்னத்தில் என அடிகள் விழுகின்றன. பதில் பேசாமல், அடி வாங்கிக்கொண்டே இருப்பவள், லேசாக மூஞ்சியைக் காண்பித்துவிடுகிறாள்; அவ்வளவுதான் அவள் வாழ்க்கை தலைகீழாக மாறிவிடுகிறது. அவன் அவளுடன் முற்றாகப் பேச்சை நிறுத்திவிடுகிறான். குழந்தை, பால், அப்பளம், சாதம், வத்தல்குழம்பு, கடன், காபி என்ற இந்தக் குடும்ப அமைப்பிலிருந்து தான் வெளியேற்றப்பட்டுவிடுவோமோ என்ற பதற்றத்தில் மன்றாடுகிறாள். ஆனால், நிராகரிக்கப்படுகிறாள். கணவனே சரணாகதி என்னும் நிலையிலிருக்கும் பெண்கள் பலரின் பிரதிநிதியாக சரஸ்வதியை உருவாக்கியிருக்கிறார் அசோகமித்திரன். இந்தக் கதை அதையும் தாண்டி நீள்கிறது. அந்தப் பால் புட்டியைக் கண்டுபிடிக்க அவள் ஒரு த்ரில்லர் பயணம்போகிறாள். அதைக் கண்டடைந்த நிறைவை ஒரு விடுதலையைப் போல் அசோகமித்திரன் இதில் சித்தரித்திருப்பார்.

‘அவனுக்கு மிகப் பிடித்தமான நட்சத்திரம்’ கதை கரோனா பொது முடக்கக் காலத்தில் திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்த கதை. தினசரி செய்தித்தாளைப் போடுபவனுக்கு அன்றைக்கு ஏதோ வேலை. அவன் மனைவி வீடு மாறி வேறு வீட்டின் வாசலில் அதைச் செருகிச் சென்றுவிடுகிறாள். இது என்ன மாதிரியான பிரச்சினைக்கு இழுத்துச் சென்றுவிடுகிறது என்பதுதான் கதை. அந்த செய்தித்தாளில் பக்கத்து வீட்டுக்காரர் புளி வாங்கிவிடுகிறார். அந்தச் செய்தித்தாளின் உடைமையான இளைஞனுக்குப் பிடித்த சினிமா நட்சத்திரத்தின் படம் அதில் இருக்கிறது. சினிமா நட்சத்திரத்தின் முகத்தில் புளிக் கறை படிந்துவிடுகிறது. பக்கத்து வீட்டுக்காரருக்கும் இளைஞனுக்கும் இதனால் வார்த்தைத் தர்க்கம். இந்தக் கதை நிகழ்வது அம்மை, கரோனாவைப் போல் பார்க்கப்பட்ட காலகட்டம். இந்தச் சந்தர்ப்பத்தில் பக்கத்து வீட்டுக்காரரின் குழந்தைக்கு அம்மை. இளைஞன் பழிவாங்கலுக்கான வாய்ப்பாகச் சுகாதாரத் துறைக்கு விஷயத்தை எழுதிவிடுகிறான். பலவந்தமாகக் குழந்தையை அழைத்துக்கொண்டு போய்விடுகிறார்கள். ஊருக்கு வெளியே தொற்றுநோயாளிகள் மருத்துவமனையில் குழந்தையை அடைத்துவிடுகிறார்கள். பக்கத்துவீட்டுக்காரரும் மனைவியும் யார் யாரிடமோ அழுது புலம்பியும் ஒன்றும் ஆகவில்லை.

அசோகமித்திரன் அந்தக் குழந்தையின் அம்மாவின் பார்வையில் எழுதியிருக்கும் விவரிப்புகள் வாசகருக்கு வேதனை அளிக்கக் கூடியவை: ‘வியாதியுடன் படுத்திருக்கும் குழந்தைக்குப் பெற்ற தாயாரால் சிசுருஷை செய்ய முடியாது. அது தாகம் தாகம் என்று கதறும்போது ஒரு வாய் பால் தர முடியாது. குழந்தையை எங்கேயோ பழக்கமில்லாத பயங்கரமான இடத்தில் ஆயிரம் குஷ்டரோகிகள், காலரா வியாதிக்காரர்கள் நடுவில் போட்டுவிடுவார்கள். குழந்தைக்கு ஆறுதலாக ஒரு வார்த்தை கூற ஒருவரும் இருக்க மாட்டார்கள். குழந்தை கிலி பிடித்து நடுங்கும். அதைக் கொல்லைப்புறம் அழைத்துப் போக யாரும் இருக்க மாட்டார்கள். யாரோ மீசை வைத்திருக்கும் முரடன்தான் இருப்பான். அவன் குழந்தையை அதட்டி மிரட்டுவான். அந்தக் குழந்தை வீடு திரும்பவில்லை’ என அசோகமித்திரன் சொல்லும்போது, நாம் கடந்து வந்துவிட்ட கரோனா கால அனுபவங்கள் நினைவுக்கு வரும்.

இதன் முதல் கதையில் நம்முடைய பச்சாதாபங்களைக் கேள்விக்கு உள்ளாக்கியிருப்பார் அசோகமித்திரன். நாய்கள் மீது உள்ள கருணை, பன்றிகள் மீது நமக்கு இருப்பதில்லை. சமூக மதிப்பீட்டின்படிதான் நமது கருணை, அன்பு எல்லாம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘குருவிக்கூடு’ என்ற இந்த யதார்த்தவாதக் கதையில் அசோகமித்திரன் இதைச் சொல்ல ஒரு சிறு மாயத்தைச் சேர்த்திருப்பார். அந்தக் குருவியைத் தமிழ் பேச வைத்திருப்பார். அதன் முட்டைகள் உடைந்ததற்காக கதையில் வரும் பையன் அடையும் குற்றவுணர்வை அந்தக் குருவி கேள்வி கேட்கும். அது எவ்வளவு உள்ளீடற்ற கற்பிதம் என்பதைச் சொல்லிப் பறக்கும்.

வெகுஜனக் கதைகள் என அசோகமித்திரனின் கதைகள் தமிழில் விமர்சிக்கப்பட்டன. ஆனால் அவரது கதைகள், யதார்த்தத்துக்கு அப்பாற்பட்ட விவரிப்பின் வழி வெகுஜன வாசிப்பு ரசனை என்கிற நோக்கத்தைத் தாண்டி வாழ்க்கையை விசாரிக்கும் அம்சத்தைக் கொண்டிருக்கும். அம்மாதிரியான கதை களுக்கு இந்தத் தொகுப்பு ஒரு பதம்.

செய்தித்தாளைப் போடுபவனுக்கு அன்றைக்கு ஏதோ வேலை. அவன் மனைவி வீடு மாறி வேறு வீட்டின் வாசலில் அதைச் செருகிச் சென்றுவிடுகிறாள். அந்த செய்தித்தாளில் பக்கத்து வீட்டுக்காரர் புளி வாங்கிவிடுகிறார். அந்தச் செய்தித்தாளின் உடைமையான இளைஞனுக்குப் பிடித்த சினிமா நட்சத்திரத்தின் முகத்தில் புளிக் கறை படிந்துவிடுகிறது..

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in