

செ.து.சஞ்சீவி (1929-2023) தமது 94 வயதில் மறைந்துவிட்டார். அடுத்த ஆண்டு கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டைத் தமிழ்ச் சமூகம் கொண்டாடப்போகிறது. அப்போது தமிழ்ஒளியோடு இவரது புகழும் பேசப்படும். 1966 முதல் 2019 வரை தொடர்ந்து தமிழ்ஒளியின் ஆக்கங்களை வெளியிடுவதை தம் வாழ்நாள் பணியாகக் கொண்டு வாழ்ந்துவந்தவர் சஞ்சீவி.
தமிழ்ஒளி குறித்து இவர் எழுதியுள்ள ஐந்து நூல்கள்தான், தமிழ்ஒளியை அறிய உதவும் ஆவணங்கள். தமிழ்ச் சமூகம் தமிழ்ஒளியைக் காலகாலத்திற்கும் கொண்டாடும் என்றால், அதற்கான மூல ஆவணத்தை உருவாக்கித் தந்த பெருமகன் இவர். ‘தமிழ்ஒளி நினைவாகச் சில பதிவுகள்’ எனும் இவரது நூல், தமிழ்ஒளி ஆக்கங்களை வெளியிட்ட வரலாற்றைச் சொல்கிறது.
கவிஞர் மறைந்தபோது அவரது கவிதைகள் முழுத் தொகுப்பாக வெளிவரவில்லை. செ.து.சஞ்சீவிதான் தமிழ்ஒளியின் கவிதைகளைத் தேடித் திரட்டி முதன்முதலில் ‘தமிழ்ஒளியின் கவிதைகள்’ என்று 1964இல் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து பதின்மூன்று தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். மறைந்த ஒரு கலைஞனின் ஆக்கங்களைத் தொடர்ந்து வெளியிட்டுவந்த இவருடைய செயல் பெரிதும் பாராட்டுக்குரியது. தமிழ்ஒளி படைப்புகளைத் தேடிக் கண்டறியும் பணியில் அயராது உழைத்திருக்கிறார். ‘கவிஞனின் காதல்’, ‘நிலைபெற்ற சிலை’, ‘வீராயி’, ‘மே தின ரோஜா’, ‘கோசலக்குமரி’, ‘மாதவி காவியம்’ ஆகிய தமிழ்ஒளியின் காவியங்களை அச்சிட்டுத் தமிழ்ச் சமூகத்திற்கு வழங்கினார்.
‘தமிழ்ஒளி: கவிதையும் வாழ்வும்’, ‘தமிழறிஞர் பார்வையில் தமிழ்ஒளி (தொகுப்பு நூல்), ‘தமிழ்ஒளி வரலாறு (சாகித்ய அகாடமி வெளியீடு), ‘தமிழ்ஒளி காவியங்கள் ஓர் அறிமுகம்’, ‘தமிழ்ஒளி நினைவாக சில பதிவுகள்’ ஆகிய நூல்களை எழுதிய செ.து.சஞ்சீவி, தமிழ்ஒளியின் பல பரிமாணங்களையும் நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இலக்கிய விமர்சகர் தி.க.சிவசங்கரன், இவரை ‘தமிழ்ஒளிக்குக் கிடைத்த சடையப்ப வள்ளல்’ என்று பாராட்டி எழுதியுள்ளார்.
தமிழ்ஒளி நூல்களை வெளியிடுவது மட்டுமின்றி, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்த் துறை மாணவர்கள் - ஆசிரியர்களுக்குத் தமிழ்ஒளி நூல்களை அறிமுகப்படுத்துவது, பாடத்திட்டத்தில் இணைப்பது ஆகிய வேலைகளையும் செய்தார். 1958ஆம் ஆண்டுவாக்கில் ‘மாதவி காவியம்’ கையெழுத்துப் பிரதியை செ.து.சஞ்சீவியிடம் தமிழ்ஒளி கொடுத்துள்ளார். அப்பிரதியை 1995இல்தான் இவர் வெளியிட்டார். சுமார் 40 ஆண்டுகள் அப்பிரதியைப் பாதுகாத்துப் பின்னர் அச்சில் கொண்டுவந்த சஞ்சீவியின் செயல், விதந்து பேச வேண்டியது. தமிழில் உருவாகியுள்ள காப்பியங்களில் ‘மாதவி காவியம்’ தனித்தது. அதனை சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையில் முதுகலை மாணவர்களுக்குப் பாடமாக வைத்தோம். இதற்கும் காரணமாக அமைந்தவர் சஞ்சீவிதான்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ஒளி பிறந்தநாள், நினைவுநாள் ஆகியவற்றில் தமிழ்ஒளி தொடர்பான நூல்களை வெளியிட்டு விழா நடத்துவது, கருத்தரங்கம் ஏற்பாடு செய்வது, கலை இலக்கியப் பெருமன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஆகியவற்றோடு இணைந்து, தமிழ்ஒளிக்கான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது, கல்லூரிகளில் ஏற்பாடு செய்வது, அதற்கான செலவுகளை ஏற்பது என்பதைக் கடந்த 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்துவந்தார் சஞ்சீவி.
தமிழ்ஒளி பிறந்த புதுச்சேரியில் உள்ள மொழி - பண்பாட்டு நிறுவனத்தில் தமிழ்ஒளியின் பெயரில் அறக்கட்டளை உருவாக்கினார். புதுவை அரசு தமிழ்ஒளி பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்தார். இவரது இந்தப் பணிகள் நிகழ்ந்திருக்காவிட்டால், தமிழ்ஒளி ஆக்கங்கள் நமக்குக் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
- வீ.அரசு