

உலகப் புகழ்பெற்ற நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலோனின். ‘ராம்போ’, ‘ராக்கி’ படங்கள் இன்றும் அவரது புகழைப் பறைசாற்றக்கூடியவை. நடிகர், குத்துச்சண்டை வீரர், திரைக்கதை எழுத்தாளர் என்பதைத் தாண்டி, இவருக்கு ஓவியர் என்கிற அடையாளமும் உண்டு. இவரது ஓவியங்கள் ஐரோப்பாவின் பல அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
தன் சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைவதில் ஈடுபாடு கொண்டிருந்தார் ஸ்டாலோன். பிக்காசோ, ஜெர்மன் ஓவியர் கெர்ஹார்ட் ரிக்டர் ஆகியோரின் ஓவியங்கள் வழியே கற்றுக்கொண்டு, தன் பாணி ஓவியங்களை உருவாக்கினார். அமெரிக்க ஓவியர் மார்க் ரோத்கோவிடமிருந்து அரூப பாணியைக் கற்றுக்கொண்டார். சில்வஸ்டர் ஸ்டாலோனின் ஓவியங்கள், நமது இருப்பை அடிப்படையாகக் கொண்டவை. அவரது கருப்பொருள்கள் கனவுகளையும் கற்பனையையும் மரணத்தையும் பச்சையான உண்மையையும் மையமாகக் கொண்டவை எனக் கலை அறிஞர் டைபூன் பெல்கின் மதிப்பிடுகிறார்.
அமெரிக்க எழுத்தாளர் எட்கர் ஆலன் போவின் வாசகரான ஸ்டாலோன், அவரது வாழ்க்கையைப் படமாக எடுக்க நினைத்தார். ஆனால், அது கைகூடவில்லை. அதற்குப் பதிலாக அவரைத் தன் ஓவியத்தில் ‘எட்கர் ஆலன் போவின் ரசிகன்’ எனச் சித்தரித்துவிட்டார்.
அவரது ‘ராக்கி’ தொடர் படங்களின் பாதிப்பில் ‘ஃபைண்டிங் ராக்கி’, ‘ஸ்கார்’, ‘தி ஆப்பனன்ட்’, ‘ஃபேமிலி டைஸ்’ ஆகியவை இவரது ஓவியங்களில் பிரபலமானவை.
- விபின்