Last Updated : 03 Oct, 2017 09:41 AM

 

Published : 03 Oct 2017 09:41 AM
Last Updated : 03 Oct 2017 09:41 AM

எதிர்க்கட்சிகள் செய்ய வேண்டியது என்ன?

திர்க்கட்சிகளின் இன்றைய நிலையைப் பார்க்கும்போது, 2019 மக்களவைப் பொதுத் தேர்தலில் மீண்டும் பாஜகதான் வெற்றி பெறும் என்று சொல்லிவிடலாம். நமக்குத் தெரியாதது என்னவென்றால் எத்தனை இடங்கள் பாஜகவுக்குக் கிடைக்கும் என்பதுதான். அந்தக் கட்சி இலக்கு நிர்ணயித்திருப்பதைப் போல ‘350 மற்றும் அதற்கும் கூடுதலாக’ என்றால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இருப்பதே தெரியாமல் போய்விடும். இந்த நிலையில் 2019-க்கு முன்னரும் அதற்குப் பிறகும் வலுவான எதிர்க்கட்சி ஏற்படும் என்று நம்புவதில் அர்த்தம் இருக்கிறதா? அப்படியென்றால் பாஜகவுக்கு வலுவான சவாலாக விளங்க அது வகுக்க வேண்டிய அரசியல் உத்தி என்னவாக இருக்கவேண்டும்?

ஒரு கட்சி ஆட்சி?

எதிர்க்கட்சிகளின் தோல்வி குறித்து பக்கம் பக்கமாக எழுதியாயிற்று. அரசைக் கேள்வி கேட்டு உலுக்கி எடுப்பதற்குப் பதிலாக அவை சோம்பிக் கிடந்தோ, பிழைப்பதற்காகத் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டோ வலுவிழந்து வருகின்றன. பாஜகவோ மாநிலம் மாநிலமாகத் தனது பரப்பளவை வளர்த்துக்கொண்டே வருகிறது. 2014 மக்களவைப் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பாஜக ஐந்து மாநிலங்களில் ஆட்சி செய்தது. இப்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 29 மாநிலங்களில் 18 மாநிலங்களை ஆட்சி செய்கிறது. அவற்றில் 13 பாஜக முதலமைச்சர்களைப் பெற்றிருக்கின்றன.

நாடு மீண்டும் ‘ஒரு கட்சி ஆட்சி முறை’க்குத் திரும்பிவிட்டது, முன்னர் காங்கிரஸ் அந்த இடத்தில் இருந்தது, இப்போது பாஜக அந்த இடத்தைப் பிடித்துவிட்டது என்கின்றனர் சிலர். தோற்றத்தில் இது சரியாக இருக்கலாம், உள்ளீட்டில் வித்தியாசம் இருக்கிறது; அந்த உள்ளீடு இந்திய ஜனநாயகத்தின் தலையெழுத்துக்கே முற்றுப்புள்ளி வைப்பதாகக்கூட மாறிவிடலாம்!

நாடு சுதந்திரம் அடைந்த இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஜனநாயகத்தில் அரசியல் போட்டி என்பது ‘காங்கிரஸ் அமைப்புக்குள்ளே’ என்று இருந்தது. அது ஒரு கட்சி ஆதிக்கத்தின் வெளிப்பாடு. 1970-கள் வரை எதிர்க்கட்சிகளுக்கான கூறுகளை காங்கிரஸ் தன்னுடைய பல்வேறு கோஷ்டிகளுக்கிடையே தேசிய அளவிலும் மாநில அளவிலும் செலுத்திவந்தது. அது தனிச்சிறப்புடைய பன்மைத்துவத்தையும், வேறுபடுதலையும் காங்கிரஸின் தேசியத் தன்மைக்கு அளித்தது.

பாரம்பரியங்களை விட்டுவிடாத இந்தியச் சமூகத்தில் ஜனநாயகத்தை மையமாகக் கொண்ட கலாச்சாரம் வேரூன்றாததால் இந்திய அரசியல் சட்டத்துக்குத் தேவையான நவீனத்துவத்தை அளிக்க காங்கிரஸ் அமைப்பு முறையும் கலாச்சாரமும் உதவியாக இருந்தன; ஓரளவுக்கு லேசான சமூக மேலாதிக்கத்துக்கும் அது வழிவகுத்தது. நெளிவு-சுளிவுகளுக்கு இடம் தராத அதிகார வர்க்கத்தின் எஃகுக் கட்டமைப்புக்குத் தகுந்த மாற்றாக காங்கிரஸ் கட்சியின் நெகிழ் ஜனநாயகக் கட்டமைப்பு திகழ்ந்ததால் நாட்டை ஒற்றுமையாக வைத்திருந்ததுடன் அதன் பன்மைத்துவ மரபுசார் வடிவத்துக்கும் மரியாதை தந்தது.

காங்கிரஸின் சரிவு

காலப்போக்கில் காங்கிரஸ் தேய ஆரம்பித்தபோது மாநிலக் கட்சிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சிக்கு வரத் தொடங்கின. இந்தியா கூட்டணி அரசு என்ற காலகட்டத்தில் காலடி எடுத்து வைத்தது. மாநிலங்களில் காங்கிரஸ் தனது செல்வாக்கை இழந்ததால் தேசிய அளவிலேயே மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டிய நிலைமை அதற்கு ஏற்பட்டது. இன்னொரு வகையில் பார்த்தால் காங்கிரஸ் கட்சிக்குள் முன்னர் இருந்த அணிகளுக்கு இடையிலான கூட்டணி, வெளியே உருக்கொண்டு மாநிலக் கட்சிகளுடனான கூட்டணியாக 9-வது மக்களவைக் காலமான 1989-ல் தொடங்கி 2014 மக்களவை பொதுத் தேர்தல் வரை தொடர்ந்தது.

காங்கிரஸ் கட்சி சுருங்கியதால் ஏற்பட்ட வெற்றிடத்தை இப்போது பாஜக நிரப்பிக் கொண்டிருக்கிறது. மாற்று தேசிய கட்சியை அது மூன்று முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டு செயல்படுத்தி வருகிறது. முதலாவது இந்துத்துவா அடிப்படையிலான தேசியவாதம். அடுத்தது தேர்தல்களை கட்சியின் தேசியத் தலைமைக்கு ஆதரவா – எதிர்ப்பா என்ற கருத்துக் கணிப்பாக்கும் உத்தி (குறிப்பாக மோடி நல்ல பிரதமரா இல்லையா என்ற கேள்வி), மாநிலங்களின் பிரச்சினைகளை மையப்படுத்தாமல் தேசியப் பிரச்சினைகளையே தேர்தல் பிரச்சினையாக்குவது. இந்த மூன்றின் அடிப்படையில் பாஜகவுக்கு ஒரு சவாலாகத் திகழ முயன்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தோற்று வருகின்றன. எனவேதான் அவற்றின் முயற்சிகளுக்குப் பலன் ஏற்படாமல் போகிறது.

தேசியவாதம் குறித்து விவாதிப்பது, பேரினவாதத்துக்கு உயிர் மூச்சை அளிப்பதில் முடிகிறது. நரேந்திர மோடிக்கு நிகரான பொது அரசியல் தலைவர் எதிர்க்கட்சிகளிடம் இல்லை. மாநிலக் கட்சிகளின் தலைவர்களால் அவர்களுடைய மாநிலத்தில் மட்டுமே தலைவராக இருக்க முடிகிறது; அவர்களால் திடீரென தேசியத் தலைவராக முடியாது. சுருக்கமாகச் சொல்வதென்றால் பாஜகவின் சீண்டல்களுக்குப் பதில் அளிப்பதை நிறுத்திக் கொண்டு, பாஜகவை கேள்விகேட்டு மடக்கும் வழிமுறைகளை எதிர்க்கட்சிகள் ஆராய வேண்டும்.

காங்கிரஸ் – பாஜக: வேறுபாடுகள்

முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு மக்களவையில் 44 இடங்கள் மட்டுமே கிடைத்தது பெரிதாகப் பேசப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் கட்டமைப்பில் உள்ள பலவீனமாகவும் அது பார்க்கப்படுகிறது. சுதந்திரத்துக்குப் பிறகு நடந்த ஐந்து மக்களவைப் பொதுத் தேர்தல்களுக்குப் பிறகும் எதிர்க்கட்சி ஒன்றுக்குக் கிடைத்த அதிகபட்ச இடமே 44 தான்! அப்படியென்றால் 25 ஆண்டுகளாக எதிர்க்கட்சிகளே இல்லாத இந்தியாவாகவா நாம் இருந்தோம்? காங்கிரஸ் கட்சியின் செல்வாக்குச் சரிவுக்கு மாநில அளவில் ஏற்பட்ட தோல்விகள்தான் காரணம், தேசிய அளவுத் தோல்விகளால் அல்ல. அதற்குக் காரணமும் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த தேசியப் பன்மைத்துவம்தான்.

காங்கிரஸ் ஆதிக்கத்துக்கும் பாஜக ஆதிக்கத்துக்கும் அடிப்படையில் பெரிய வித்தியாசம் இருக்கிறது. பாஜக பன்மைத்துவத்துக்கு அளிக்கப்படும் இடத்தைத் தகர்க்கப் பார்க்கிறது. இது எதிர்க்கட்சிகளுக்கு கடுமையான சவாலாகும். அதே வேளையில் பாஜகவுக்குப் பெரிய பின்னடைவாகப் போகிறது. பன்மைத்துவத்தை பாஜக அழிப்பதால் அந்த இடத்திலிருந்து எதிர்க்கட்சிகளுக்கு மாற்று முறைமை உருவாகும்.

எதிர்க்கட்சிக் கூட்டணி மக்களிடம் இரண்டு கேள்விகளைக் கேட்க வேண்டும். 2019 பொதுத் தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு? பன்மைத்துவம் – கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றைச் சிதையவிடாமல் காப்பாற்றப் பார்க்கும் எதிர்க்கட்சிக் கூட்டணிக்கா? அல்லது நிலையான ஆட்சி என்ற பெயரில் ஜனநாயகத்தின் தன்மையே சிறிதும் இல்லாத சர்வாதிகாரத் தலைமையின் ஆட்சிக்கா? என்பது முதல் கேள்வியாக இருக்க வேண்டும்.

இரண்டாவதாக, இந்தத் தேர்தல் யாருடைய தலைமை சரி என்ற கருத்துக் கணிப்பாக அமைந்துவிடாமல், ஜனநாயக அம்சங்கள் வலுவாக இருப்பதை உறுதி செய்திட வேண்டும். 2019 மக்களவைப் பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்தால் அது நாடு சுதந்திரம் அடைந்தது முதல் கடைப்பிடிக்கப்பட்டு வரும் கருத்தொற்றுமை அடிப்படையிலான ஆட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும்; பன்மைத்துவத்தை நிறுவனமயமாகவே ஆக்கிய தன்மை மாற்றப்படும்; கூட்டாட்சியிலும் சுயாட்சி வழங்கிய நெகிழ்வுத்தன்மை நீக்கப்படும் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

ஜனநாயகத்துக்கும் கூட்டாட்சித் தத்துவத்துக்கும் பன்மைத்துவத்துக்கும் நேரிட்டுள்ள ஆபத்துகளை மக்களுக்குப் புரியும் வகையில் தேர்தல் களத்தில் விளக்கும் உத்தியை எதிர்க்கட்சிகள் கண்டுபிடித்தாக வேண்டும்.

மாநிலக் கட்சிகளின் பொறுப்பு

பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மையோ அதற்கும் மேலோகவோ வலு கிடைத்துவிடாதபடிக்கு தொங்கு நாடாளுமன்றம் அல்லது ஏதாவது ஒரு கட்சியின் தலைமையில் கூட்டணி அரசு என்ற நிலைமையை ஏற்படுத்த வேண்டும். எந்தப் பெரிய அரசியல் கட்சிக்கும் 170 முதல் 180 வரையிலான தொகுதிகள் மட்டுமே கிடைக்கச் செய்ய வேண்டும். அப்படியொரு கூட்டணி அரசைச் தான் பாஜகவால் ஏற்படுத்த முடியும் என்றால் அது கூட எதிர்க்கட்சிகளுக்குப் பெருத்த வெற்றியே. இந்தியாவின் பன்மைத்துவத்தைக் காப்பாற்றிவிட முடியும்.

இந்தச் சவாலை மாநிலக் கட்சிகள்தான் முன்னெடுத்துச் செல்ல வேண்டும், ஏனென்றால் மையப்படுத்தப்பட்ட அரசு, அரசியல் என்றால் அதிகம் ஒதுக்கப்படப் போவதும் செல்வாக்கிழக்கப் போவதும் மாநிலக் கட்சிகள்தான். இந்தியாவின் பன்மைத்துவத்தைக்காக்க வேண்டும் என்ற ஒற்றைக் கொள்கை அடிப்படையில் மாநிலக் கட்சிகள் காங்கிரஸுடனோ அல்லது காங்கிரஸ் இல்லாமலோகூட இணைந்து செயல்பட்டால் அது தேர்தலுக்கு முன்பாகக் கூட்டணி அமைப்பதற்கோ, தொகுதிகளைப் பகிர்ந்துகொள்வதற்கோ அவசியம் இல்லாமல் செய்துவிடும். இதைவிட்டால் வேறு வழியில்லை.

மம்தாவின் திரிணமூல் காங்கிரஸும் மார்க்சிஸ்ட் கட்சியும் பொது எதிரியை எதிர்க்க ஒரே அணியில் திரண்டாக வேண்டும்; அவ்விரு கட்சிகளும் தங்களுக்குள் மோதிக்கொண்டால் ஏற்படக்கூடிய சேதத்தைவிட அதிக சேதத்தை ஏற்படக்கூடிய பொது எதிராளியை அடையாளம் காண வேண்டும். காங்கிரஸ் அல்லாத மாநிலக் கட்சிகளுக்கு எதிராகத்தான் பாஜக அதிகம் உழைக்க வேண்டியிருப்பதால், இது சூழ்ச்சித்திறன் மிக்க தேர்தல் உத்தியாகவே இருக்கும்.

இவ்வளவு செய்தும் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்குப் படுதோல்வி கிடைத்தாலும் மனம் தளர வேண்டிய அவசியமே இல்லை. இந்திய நாடாளுமன்ற மரபானது, எதிர்க்கட்சிகளுக்குக் கிடைக்கும் தொகுதிகள் எண்ணிக்கை எவ்வளவு குறைவாக இருந்தாலும் நாடாளுமன்ற விவாதங்களிலும் பல்வேறு அமைச்சகங்களுக்கான ஆலோசனைக் குழுக்களிலும் பிறவற்றிலும் எதிர்க்கட்சிகளுக்குத்தான் அதிக இடங்களைத் தருகிறது. எனவே ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்க்கட்சிகளுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது.

மாற்றம் வேண்டும்

மக்களிடம் செல்வாக்கு பெற்ற பிரதமரின் தலைமையில் ஆளும் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மைக்கும் அதிகமாகவே இடங்கள் கிடைத்தாலும் அந்த அரசுகள் சிறப்பான ஆட்சியைக் கொடுத்ததில்லை என்பது நம்முடைய வரலாறு. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி தலைமையிலான அரசுகள் நல்ல உதாரணம். இந்திரா காந்தி சிறிது காலத்துக்கு ஜனநாயகத்தையே முடக்கி நெருக்கடி நிலையை அமல்படுத்தினார்; ராஜீவ் காந்தியோ இந்துமத அடிப்படைவாதிகள் ஊக்கம் பெற வழிவகுத்தார், பத்திரிகைகளுக்கு வாய்ப்பூட்டு போட முயன்றார்.

நாட்டின் வளர்ச்சிக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை ஜனநாயக மரபுகளுக்குள் அளிக்க வேண்டும். எனவே, எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சிக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது பாஜக அமைப்பை காங்கிரஸ் அமைப்பைப் போல மாற்ற வேண்டும் – காங்கிரஸ்காரர்களை வாங்கி அல்ல – காங்கிரஸ் கட்சியில் நிலவிய பன்மைத்துவத்தையும், மாற்றுக் கருத்துள்ளவர்களுக்கு காங்கிரஸ் அளித்த இடத்தைப்போல அளித்தும் பாஜகவை மாற்ற வேண்டும்; நேருவின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப உருவான காங்கிரஸைப் போல பாஜகவும் உருவாக வேண்டும்.

தமிழில்: சாரி,© தி இந்து ஆங்கிலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x