என்எல்சி-யின் பேராசைக்கு எப்போது முடிவுரை?

என்எல்சி-யின் பேராசைக்கு எப்போது முடிவுரை?
Updated on
3 min read

நெய்வேலி அனல் மின்நிலையங்களில் பழுப்பு நிலக்கரிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும், அதனால், ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதாகவும் என்எல்சி நிறுவனத்தின் தலைவர் பிரசன்ன குமார் தெரிவித்திருக்கிறார். உடனடியாக நிலங்கள் கையகப்படுத்தப்படவில்லை என்றால், தொடர்ந்து மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாது என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.

என்எல்சி நிறுவன விரிவாக்கத்துக்காகத் தங்களின் விளைநிலங்களை வழங்க மறுக்கும் கடலூர் மாவட்ட உழவர்கள், தங்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காகவே போராடிவருகின்றனர். அவர்களது போராட்டத்தை நசுக்க முடியாத என்எல்சி நிர்வாகம், இந்தப் போராட்டம் தமிழ்நாட்டின் மின்னுற்பத்திக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகச் சித்தரிக்க முயல்கிறது.

“என்எல்சி நிறுவனம் தமிழ்நாட்டுக்கு இப்போது ஒரு யூனிட் ரூ.2.30க்கு மின்சாரம் வழங்கிவருகிறது. வெளிச்சந்தையில் இதை ரூ.12 வரை விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். அதைத் தடுக்க வேண்டுமானால் மக்கள் நிலங்களை வழங்க வேண்டும்” என்று என்எல்சி தலைவர் கூறியிருக்கிறார். அதன் மூலம் நிலம் தர மறுக்கும் உழவர்களைத் துரோகிகளாகச் சித்தரிக்க அவர் முயல்கிறார்.

உண்மை நிலவரம்: குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை என்எல்சி அனல் மின்நிலையங்கள் பராமரிப்புக்காக மூடப்படுவது வழக்கம். அதேபோல்தான் இப்போதும் நிலக்கரிச் சுரங்கங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், என்எல்சி நிறுவனத்திடம், தேவைக்கு அதிகமாகவே நிலமும் நிலக்கரியும் உள்ளன.

‘2030 வரையிலான என்எல்சி நிறுவனத்தின் கார்ப்பரேட் திட்டம்’ என்ற தலைப்பிலான ஆவணத்தில் இடம்பெற்றுள்ள தரவுகளின்படி, கடலூர் மாவட்டத்தில் இப்போதுள்ள மூன்று சுரங்கங்களின் மூலம் என்எல்சி-க்கு ஆண்டுக்கு 26 மில்லியன் டன் நிலக்கரி கிடைக்கிறது.

60 ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் முதலாவது சுரங்கத்தில், 83.83 மில்லியன் டன் நிலக்கரிப் படிமம் உள்ளது; இன்னும் 11 ஆண்டுகளுக்கு இது போதுமானது. அதேபோல் 1ஏ சுரங்கத்தில் ஆண்டுக்கு 3 மில்லியன் டன் மட்டுமே வெட்டி எடுக்கப்படும் நிலையில், அங்குள்ள 161.66 மில்லியன் டன் நிலக்கரி 54 ஆண்டுகளுக்குப் போதுமானது.

இரண்டாவது சுரங்கத்தில் உள்ள 282.45 மில்லியன் டன் நிலக்கரியை ஆண்டுக்கு 15 மில்லியன் டன் என்ற அளவில் வெட்டி எடுத்தால், அடுத்த 19 ஆண்டுகளுக்கு நிலக்கரிப் பற்றாக்குறை ஏற்படாது. இரண்டாவது நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்காக 1985இல் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில், 10,000 ஏக்கர் நிலங்கள் 37 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்படவில்லை. அந்த நிலங்களில் இருந்து இன்னும் 40 ஆண்டுகளுக்குப் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்க முடியும்.

வெளிச்சந்தையில் விற்பனை: கடலூர் மாவட்டத்தில் வெட்டி எடுக்கப்படும் 26 மில்லியன் டன் நிலக்கரியையும் அப்படியே மின்சாரம் தயாரிக்க என்எல்சி பயன்படுத்துவதில்லை. மாறாக, அதில் ஒரு பகுதியை வெளிச்சந்தையில் விற்று வருவாய் ஈட்டுகிறது. 2021-22இல் பழுப்பு நிலக்கரி விற்பனை மூலமாக மட்டும் வரலாறு காணாத வகையில் ரூ.830 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

அதற்காக அந்த ஆண்டில் மட்டும் நிலக்கரி உற்பத்தி 30% அதிகரிக்கப்பட்டது. மேலும், 2022 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் சுரங்கங்களின் மூலம் என்எல்சி-யின் வருவாய் ரூ.5,515.22 கோடியாக உயர்ந்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் கிடைத்த வருவாயைவிட 15.23% (ரூ.729 கோடி) அதிகம் ஆகும். தவிர, என்எல்சி நிறுவனம் அதன் ஆண்டு உற்பத்தியான 26 மில்லியன் டன் நிலக்கரியில், சுமார் 10 மில்லியன் டன் நிலக்கரியை விற்பனை செய்வதாக அதன் புள்ளிவிவரங்களே ஒப்புக்கொள்ளும் நிலையில், எங்கிருந்து பற்றாக்குறை ஏற்படும்?

தவிர்க்க முடியாத நிறுவனமா? - சில நாள்களுக்கு முன்புவரை என்எல்சி-யின் அனல் மின்நிலையங்கள் மூலம் தமிழகத்துக்குச் சுமார் 1,500 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டது; ஆனால், அதில் சராசரியாக 900 மெகாவாட் அளவுக்குத்தான் கிடைக்கும். கடந்த சில நாள்களாக என்எல்சி-யிடமிருந்து தமிழகத்துக்கு ஒதுக்கப்படும் மின்சாரத்தின் அளவு 685.80 மெகாவாட்டாகக் குறைக்கப்பட்டுவிட்டது. அதிலிருந்து தமிழகத்துக்குக் கிட்டத்தட்ட 407 மெகாவாட் அளவுக்குத்தான் மின்சாரம் கிடைத்துவருகிறது.

என்எல்சி வழங்கும் மின்சாரம் 55%க்கும் மேல் குறைக்கப்பட்டாலும்கூட, அதனால் தமிழகத்தில் பரவலான மின்வெட்டு ஏதும் ஏற்படவில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம். தமிழகத்தின் சராசரி மின்தேவை 15,000 மெகாவாட். அதிகபட்சமாக 18,000 மெகாவாட் வரை தேவைப்படலாம். ஆனால், மாநிலத்தின் ஒட்டுமொத்த மின்னுற்பத்தித் திறன் 36,000 மெகாவாட். இது தேவையைவிட இரு மடங்கு அதிகம் ஆகும். இதில் என்எல்சி வழங்குவது 800 முதல் 1,000 மெகாவாட் வரை மட்டுமே.

என்எல்சி குறைந்த விலையில் தமிழகத்துக்கு மின்சாரம் வழங்குவதாகக் கூறுவதிலும் உண்மை இல்லை. 2022 மார்ச் 16 அன்று தமிழ்நாடு அரசு கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி தமிழகத்துக்கு என்எல்சி வழங்கப்போகும் மின்சாரத்தின் விலை யூனிட் ரூ.3.06 ஆகும். ஆனால், அதைவிடக் குறைவாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.2.61க்கு மத்திய அரசின் சூரிய எரிசக்தி நிறுவனத்திடமிருந்து வாங்க அதே நாளில் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

என்எல்சி-க்கு நிலம் தராவிட்டால், ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.12 வரை விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும் என்று பிரசன்னகுமார் கூறுவதையும் ஏற்க முடியாது. தமிழ்நாட்டில் தனியார் அனல் மின்நிலையங்களிலிருந்து வாங்கப்படும் மின்சாரத்தின் விலை, ஒரு யூனிட்டுக்கு ரூ.5-க்கும் குறைவுதான். தமிழ்நாடு மின்சார வாரியம் வாங்கும் மின்சாரத்தின் சராசரி விலை ரூ.3.58 மட்டுமே என்று அரசே தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.

அழிந்துபோன வாழ்வாதாரம்: 1950-களில் நெய்வேலி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 23 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தமிழ்நாட்டுக்கு மின்சாரம் கிடைக்க வேண்டும் எனும் உயரிய நோக்கத்தில்தான், தங்களின் வாழ்வாதாரமான நிலங்களை வழங்கினர். ஆனால், பேராசை காரணமாகத் தேவையைவிட பல லட்சம் டன் அதிகமான நிலக்கரியை வெட்டியெடுத்து வெளிச்சந்தையில் விற்பனை செய்துவரும் என்எல்சி, இன்னும் கூடுதலாகச் சுரண்டுவதற்காகத்தான் நிலம் வேண்டும் எனக் கூக்குரலிடுகிறது.

மத்திய அரசின் நிலக்கரிச் சுரங்கத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், காலநிலை மாற்றத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக 30 நிலக்கரிச் சுரங்கங்களை மூடுவதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டிருக்கிறது.

இந்நிலையில், என்எல்சி நிறுவனத்தால் உழவர்களுக்கும், இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் மக்களின் நலவாழ்வுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசு ஆய்வு நடத்த வேண்டும். என்எல்சி-க்காக கடலூர் மாவட்ட உழவர்களை அச்சுறுத்தி நிலங்களைப் பறிப்பதைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். மின்சாரத்தை உற்பத்தி செய்யப் பல வழிகள் உள்ளன. ஆனால், விளைநிலங்களை இழந்துவிட்டால் விவசாயத்துக்கு வேறு வழியில்லை. ஆட்சியாளர்கள் இதை மறந்துவிடக் கூடாது!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in