Published : 25 May 2023 06:15 AM
Last Updated : 25 May 2023 06:15 AM

மா.சு.சம்பந்தன் 100 |தொடர்பன் என்னும் தனிநபர் இயக்கம்!

1968 இல் சென்னையில் நடந்த இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில், நிகழ்வு ஒன்றில் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள பங்கேற்பாளர்களுக்கு முதலமைச்சர் அண்ணா ஒரு நிமிடம் வழங்கியபோது, மா.சு.சம்பந்தனுக்குத் தேவைப்பட்டது சில நொடிகள்தான்; அவர் தன்னை இப்படி அறிமுகப்படுத்திக்கொண்டார்: “மொழியால் தமிழன்; இனத்தால் திராவிடன். என் பெயர் மா.சு.சம்பந்தன்!”

1923 மே 25 அன்று சென்னையில் பிறந்தவரான மாரம்பேடு சுப்பிரமணியன் மகன் சம்பந்தன் என்கிற மா.சு.சம்பந்தன், முன்னுதாரணம் அற்ற தமிழ் எழுத்தாளர். சென்னை முத்தியால்பேட்டை மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியும் பச்சையப்பன் கல்லூரியில் இரண்டாம் இடைநிலை வகுப்புவரையும் படித்த சம்பந்தனின் எழுத்துப் பணிகள் யாவும் பல்கலைக்கழகம் ஒன்றின் எழுத்து-பதிப்புப் பணிகளுக்கு இணையானவை.

அந்த அன்பர்’: இளவயதில் பல நூல்களையும் இதழ்களையும் விரும்பிப் படித்துவந்த சம்பந்தனுக்கு, முத்தியால்பேட்டை பள்ளியில் தமிழாசிரியராக இருந்த புலவர் மா.இராசமாணிக்கனார் தமிழ்ப் பற்று ஊட்டி, கட்டுரைப் பயிற்சியளித்து எழுதத் தூண்டியுள்ளார். அதன் விளைவாக, வ.ரா. ஆசிரியராக இருந்த ‘பாரத தேவி’ இதழில், ‘பண்டை நாகரிகமே வேண்டும்’ என்கிற தலைப்பில் தன்னுடைய முதல் கட்டுரையை 1940இல் சம்பந்தன் எழுதினார்.

மேலும், சி.பா.ஆதித்தனார் நடத்திவந்த, சென்னை சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து வெளியான ‘தமிழன்’ இதழில், ‘பெரியோர் வாழ்க்கை’ என்ற பகுதியில் ஜி.டி.நாயுடு பற்றி சம்பந்தன் எழுதிய கட்டுரை (30.01.1944), எழுத்து மீதான ஈடுபாட்டை அவரிடம் தீவிரப்படுத்தியிருக்க வேண்டும்.

முத்தியால்பேட்டை பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்களுடன் கோயம்புத்தூர், மேட்டூர் உள்ளிட்ட இடங்களுக்குச் சுற்றுலா சென்றுவந்த பின் எழுதிய அந்தக் கட்டுரை குறித்து, ‘மிகவும் அருமையான பல விஷயங்களைக் கொடுத்திருக்கிறார் அந்த அன்பர்’ என இதழின் ஆசிரியர் கோ.த.சண்முகசுந்தரம் பாராட்டினார்.

‘பி.ஏ. பட்டம் கிடைத்திருந்தாலும் அவ்வளவு மகிழ்ச்சி ஏற்பட்டிருக்குமோ என்னவோ! இந்தப் புகழுரை பெரும் பட்டமாகவே தோன்றியது அப்போது!’ என சம்பந்தனைப் பரவசத்தில் ஆழ்த்திய பாராட்டு அது.

எழுத்தும் பதிப்பும்: எழுத்தும் பதிப்பும்தான் தன் வாழ்க்கை என்று தீர்மானித்துவிட்ட சம்பந்தன், 1947இல் ‘தமிழர் பதிப்பக’த்தைத் தொடங்கினார். அதன் மூலம் கா.அப்பாத்துரையின் ‘வருங்காலத் தமிழகம்’, மு.வரதராசனின் ‘கி.பி. 2000’, கி.ஆ.பெ.விசுவநாதத்தின் ‘வானொலியிலே’, கவிஞர் தமிழ் ஒளியின் ‘வீராயி’ ஆகிய நூல்களை வெளியிட்டார். ‘தமிழர் மலர்’ என்னும் கையெழுத்து இதழ், ‘முருகு’, ‘மதி’ என்னும் மாத இதழ்கள் ஆகியவற்றுக்கு ஆசிரியராக இருந்து நடத்திவந்த சம்பந்தன், ‘எங்கள் நாடு’ நாளேட்டின் துணை ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

தமிழர் கழகம், தமிழர் பேரவை, ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஆகியவற்றில் உறுப்பினராக இருந்த சம்பந்தன், தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர், துணைத் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார். சென்னை கன்னிமாரா நூலகத்தில் இளநிலை அலுவலராகவும் சில காலம் பணிபுரிந்தார்.

பல பரிமாணங்களில் சம்பந்தன்: ‘சிறந்த பேச்சாளர்கள்’ (1947), ‘திருச்சி விசுவநாதம்’ (1954), ‘சென்னை மாநகர்’ (1955), ‘அச்சுக் கலை’ (1960), ‘அச்சும் பதிப்பும்’ (1980), ‘எழுத்தும் அச்சும்’ (1981), ‘தமிழ் இதழியல் வரலாறு’ (1989), ‘தமிழ் இதழியல் சுவடுகள்’ (1990), ‘தமிழ் இதழியல் களஞ்சியம்’ (1990), ‘தொடர்பன் கட்டுரைகள்’ (1998) - பல்வேறு பரிமாணங்களிலான இந்தப் பத்து நூல்களும் தமிழ்கூறும் நல்லுலகுக்குச் சம்பந்தனின் முன்னுதாரணமற்ற பங்களிப்புகளாகும்.

மேடைத் தமிழின் முதல் நூல், வாழ்க்கை வரலாறு, நகர வரலாறு, கவின் கலை வரலாறு, தமிழில் அச்சு-பதிப்பு-பதிப்பாளர் பற்றிய ஆராய்ச்சி, தமிழ் இதழியல்-இதழாளர்கள் பற்றிய வரலாற்றாய்வு என எழுத எடுத்துக்கொண்ட தலைப்புகள் சார்ந்து, தான் மேற்கொண்ட தேடலும் ஆய்வும் குறித்து அந்த நூல்களின் முன்னுரையில் சம்பந்தன் விரிவாக எழுதியுள்ளார்; சம்பந்தன் என்கிற பெயரே ‘தொடர்பன்’ என்கிற புனைபெயருக்கு அடிப்படையும் ஆனது.

இன்று ஒரு நூலை எழுதுவதற்குத் துணைபுரியும் தொழில்நுட்பக் கருவிகளின் பின்னணியிலிருந்து பார்க்கும்போது, மிகக் குறைந்த வசதிகளுடன் தனிநபராக சம்பந்தன் மேற்கொண்டவை தன்னேரிலாத முயற்சிகளாகப் பிரமிப்பூட்டுகின்றன.

நூல்களின் முக்கியத்துவம்: சுமார் 400 ஆண்டு கால நவீன வரலாற்றை உடைய சென்னை மாநகர் குறித்து, தமிழில் முழுமையான ஒரு வரலாற்று நூலுக்கான தொடக்கத்தைச் ‘சென்னை மாநகர்’ (1955) நூலில் சம்பந்தன் ஏற்படுத்திக் கொடுத்தார். ’The Hand book of Corporation’ என்கிற சிறு நூல், ‘சென்னையைப் பற்றிய விவரங்கள் அடங்கிய தமிழ் நூல் ஒன்றை எழுத வேண்டும் என்ற எண்ண’த்தை அவரிடம் தோற்றுவித்திருந்தாலும், மேற்கொண்டு விரிவான ஆய்வுகளுடன் 15-க்கும் மேற்பட்ட நூல்களின் துணையோடு சென்னை மாநகர வரலாற்றைச் சம்பந்தன் எழுதியுள்ளார்.

‘யான் எடுத்திருக்கும் குறிப்புகள் அனைத்தையும் இந்நூலில் பயன்படுத்த முடியவில்லை’ என முன்னுரையில் வருந்தும் (இந்த வருத்தம் அவரது எல்லா ஆய்வு/வரலாற்று நூல்களின் முன்னுரையிலும் வெளிப்படுகிறது) சம்பந்தன், ‘இதுபோன்ற நூல்கள் தமிழில் வெளிவர அரசாங்கத்தினரும், நகராண்மைக் கழகத்தினரும், பொதுமக்களும் தங்களால் இயன்ற ஆதரவைத் தந்து உதவிபுரியக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று கோரிக்கைவிடுத்துள்ளார்.

‘சென்னை மாநகர்’ நூல் உருவாக்கத்தின்போது சென்னையில் வெளியான பழைய பத்திரிகைகள் பற்றிய குறிப்புகளைக் கண்ட சம்பந்தன், ‘தமிழ்ப் பத்திரிகைகள்’ என்ற நூலை எழுத விரும்பியிருக்கிறார். அதனால், தமிழ்ப் பத்திரிகை தொடர்பாக ‘ஏதாவது துப்பு கிடைக்குமா’ என்பதை அறிய தமிழ்நாட்டின் முக்கிய நூலகங்களுக்கு அலைந்துள்ளார்.

முடிவில், ‘தமிழ்ப் பத்திரிகை’களுக்கு முன்பாக அச்சு பற்றிய விவரத்தைத் தந்தால் நல்லது என நினைத்து ‘அச்சுக் கலை’ (1960) நூலை எழுதினார். நூலின் இறுதியில், ‘Books consulted’ என்று 15 ஆங்கில நூல்கள், பிரசுரங்கள், அறிக்கைகள் ஆகியவற்றைப் பட்டியலிட்டுள்ளார்.

‘தமிழில் அச்சுக் கலையின் வளர்ச்சி பற்றி எழுதப்பட்ட முதல் புத்தகம் இது’ என ‘தினத்தந்தி’ பாராட்டியது. 1966இல் இந்நூலுக்குத் தமிழ் வளர்ச்சி இயக்கத்தின் முதல் பரிசை அன்றைய முதலமைச்சர் பக்தவத்சலம் வழங்கினார். ‘அச்சும் பதிப்பும்’ நூலுக்கு 1982இல் முதலமைச்சர் எம்ஜிஆர் தமிழக அரசின் பரிசை வழங்கினார். தொடர்ந்து 1986இல், ‘தமிழ் இதழியல் வரலாறு’ நூலுக்கும் சம்பந்தன் பரிசு பெற்றார்.

சமூகப் பணிகள்: தொடக்கம் முதலே திராவிட இயக்கப் பற்றாளரான சம்பந்தன், அண்ணாவின் அறிவுறுத்தலில் 1959இல் சென்னை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு, கச்சாலீஸ்வரர் வட்டத்திலிருந்து உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

“தோழர் சம்பந்தன் அவர்கள் அடக்கமானவர். நல்ல அறிவுத் தெளிவு பெற்றவர்; அமைதியாகப் பணியாற்றும் பண்புள்ளவர்... தமிழ்ச் சமுதாயத்துக்கு நல்ல பணியாற்றுவார் என்பதில் சந்தேகமில்லை” என வெற்றி விழாவில் அண்ணா பேசினார் [‘நம் நாடு’ 25.05.1959]. தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகப் பேரவை [செனட்] உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வேட்பாளர், திரு/திருமதி ஆகிய சொற்களை அறிமுகப்படுத்தி பொதுப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தவர் சம்பந்தன்தான். பாட மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் நீதி மொழியாகவும் தமிழ் வளர வேண்டும் என சம்பந்தன் விரும்பினார்; நாடெல்லாம் தமிழ் செழிக்க, ‘எங்கும் தமிழ்..’ ‘எதிலும் தமிழ்’ என முழக்கமிட்டுக் குமரியிலிருந்து சென்னை வரை தமிழ் எழுச்சி நடைப்பயணம் மேற்கொண்டார்.

சம்பந்தன் எங்கே? எங்கு சென்றாலும் நடந்தே சென்றுவரக் கூடிய இயல்புடைய சம்பந்தன், எங்கு செல்கிறார், எப்போது திரும்புவார் என்கிற தகவல்களை எப்போதும் வீட்டினரிடம் சொல்லிச் சென்றதே இல்லை. அப்படித்தான் 2011 செப்டம்பர் 25 அன்று பெரியார் திடலில் ஒரு கூட்டத்துக்குச் சென்றவர் - இன்றுவரை - திரும்பவே இல்லை; அப்போது அவருக்கு வயது 89, இன்று 100 நிறைகிறது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்பது பெரும் சோகம். தமிழ்நாடு அரசு சம்பந்தனின் நூல்களை நாட்டுடைமையாக்கி அறிவித்துள்ளது. பல ஆண்டுகள் பதிப்பில் இல்லாமல் இருந்த அவரது நூல்கள் மீண்டும் அச்சாக்கம் பெறவிருக்கின்றன; இதை சம்பந்தன் அறிந்தால் மகிழ்வார்.

சம்பந்தன், எங்கே இருக்கிறீர்கள்?

மே 25: மா.சு.சம்பந்தன் நூற்றாண்டு நிறைவு
நன்றி: சம்பந்தன் குறித்த முக்கியமான தகவல்களைப் பகிர்ந்த அவரது மூத்த மகன் மா.ச.இளங்கோவன், குடும்பத்தினர் &
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (அட்டைப் படங்கள்).

To Read in English: An individual-cum-movement called Thodarban

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x