பன்மைத்துவத்தை மறுக்கும் பாடத்திட்டம் எதற்கு?

பன்மைத்துவத்தை மறுக்கும் பாடத்திட்டம் எதற்கு?
Updated on
2 min read

இந்தியாவில் கல்வி பயில வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் வகையில், இந்தியப் பாரம்பரியம் - பண்பாடு பற்றிய புதிய பாடத்திட்டங்களை உருவாக்குவதற்கான வழிகாட்டுதலை உயர் கல்வித் துறையின் கீழ் இயங்கும் எல்லா கல்லூரி-பல்கலைக்கழகங்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வழங்கியிருக்கிறது.

அதன் அடிப்படையில் தொடக்க நிலைப் பாடத்திட்டம், இடைக்காலப் பாடத்திட்டம் மற்றும் உயர்நிலைப் பாடத்திட்டம் என்று மூன்று நிலைகளில் பாடத்திட்டங்களை அமைக்குமாறும் யுஜிசி அறிவுறுத்தியிருக்கிறது. இந்திய மரபு - இந்தியப் பண்பாடு என்னும் தலைப்பையொட்டி, மேலும் 46 கிளைத் தலைப்புகளையும் அது கோடிட்டுக் காட்டியுள்ளது.

உதாரணமாக இந்திய ஆயுர்வேதம், யோகா, இந்தியத் தத்துவம், இந்திய இசை, இந்திய வழிபாட்டு முறைகள், இந்திய உணவு - உடை, இந்தியாவின் பழக்கவழக்கங்கள், இந்தியாவின் தொன்மங்கள், இந்தியச் சட்டங்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் பாடத்திட்டத்தை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. கல்வியாளர்கள் மத்தியில் இது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

இந்தியாவின் தனித்தன்மை: இந்திய மரபு வளங்கள் செழுமையானவை மட்டுமல்ல; பன்மைத்தன்மை கொண்டவை. இந்தியா முழுமைக்கும் பொதுவான ஒரு பாரம்பரியமும், பொதுப் பண்பாடும் என்றைக்குமே இருந்த தில்லை. பல மரபுகளும் பண்பாடுகளும் இந்தியா வின் பல்வேறு மாநிலங்களில் இருக்கின்றன. இந்தப் பன்மைத்துவம்தான் இந்தியாவுக்கு அழகும் செறிவும் தருகிறது. இந்திய அரசமைப் பும் இதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில், உயர் கல்விப் புலத்தில் மட்டும் எப்படி இந்திய மரபு, இந்தியப் பண்பாடு என்ற மேம்போக்கான பார்வையில் பாடத்திட்டத்தை அமைக்க முடியும் எனக் கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்திய மரபு என்பது எழுதப்பட்ட வரலாற்றிலும் இலக்கியத்திலும் மட்டும் இருப்பதில்லை. மாறாக, அடித்தட்டு மக்களுடைய வாய்மொழி மரபுகளிலும் பாரம்பரியத்திலும் செழுமையுற்றுக் கிடக்கிறது. எழுதப்பட்ட வரலாற்றில் வெளிப்படும் இந்திய மரபுகளைவிட, வாய்மொழிப் பாரம்பரியத்திலும் இந்தியாவின் பன்மைத்துவம்மிக்க மரபுகள் அதிகமாகப் பொதிந்து கிடக்கின்றன.

வேத மரபுகளுக்கு அப்பாலான சிந்தனைகள் பலவும் உருவாகி வளர்ந்துவந்துள்ளன. சாங்கியம், யோகம், வைசேசிகம், நையாகிகம், மீமாம்சம், லோகாயுதம், சமணம், பௌத்தம் ஆகியவை இதில் அடங்கும். ஆதிக்க மரபோ, மக்களின் மரபுகளை உள்வாங்கிக்கொண்டுள்ளது அல்லது அழித்துவிடுகிறது. இதுதான் நிதர்சனம்.

நோக்கம் சிதைவுறும்: இந்தியா எங்கும் பல மொழிகள் பேசப்படுகின்றன. ஒரு மாநிலத்துக்குள்ளேயே வெவ்வேறான பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள் நிலவுகின்றன. அந்தந்த வட்டாரத்தன்மைகளுக்கு ஏற்ப உள்ளூர்ப் பிரச்சினைகளை இலக்கியங்களாகப் படைக்கின்ற போக்கு இருக்கிறது.

இதில் எதை இந்திய இலக்கியம் என்று சொல்லப் போகிறோம்? எதை இந்தியப் பண்பாடு என்று வரையறுக்க முடியும்? பன்மைத்துவத்தை மறைத்துவிட்டு, ஒற்றை மரபையும் ஒற்றைப் பண்பாட்டையும் வெளிநாட்டு மாணவர்களுக்குக் கொடுக்க அரசு முயல்வது விமர்சனத்துக்குரியது. இது இந்தியாவைப் பற்றிய தவறான புரிதலை அவர்களுக்குத் தருவதற்கான வாய்ப்பாகவே அமைந்துவிடும்.

இந்தியா, வேற்றுமையில் ஒற்றுமை காண்கின்ற ஒரு நாடு என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில்தான் பாடத்திட்டம் அமைக்கப்பட வேண்டும். அப்படி இல்லையென்றால், நாடு முழுவதற்கும் ஒற்றைக் கலாச்சாரத்தையும் ஒற்றைப் பண்பாட்டையும் விதைக்கின்ற ஒரு பொய்யான உலகத்துக்குள் மாணவர்களை அது அழைத்துச் செல்லும்; உயர் கல்வியின் உயரிய நோக்கத்தையும் தரத்தையும் வெகுவாகப் பாதிக்கும்.

- தொடர்புக்கு: iruraj2020@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in