

நூறு பக்கங்களுக்கும் குறைவான ஒரு நூல், ‘The Open: Man and Animal’ (2002). நான்கு, ஐந்து பக்கங்களைக் கொண்ட இருபது சிறு அத்தியாயங்கள். ஆனால், மானுட இருப்பைக் குறித்த மிக ஆழமான கேள்விகளைச் சுவாரசியமாக எழுப்பும் நூல். இதை எழுதியவர், இத்தாலியைச் சேர்ந்த 81 வயதாகும், ஜார்ஜோ அகாம்பென் [Giorgio Agamben]. நம் காலத்தின் முக்கியமான தத்துவ அறிஞர்களில் ஒருவர்.
விலங்கும் மனிதரும்: தலைப்பே கூறுவதுபோல நூலின் முக்கியக் கேள்வி, மனிதருக்கும் விலங்குக்கும் இடையே உள்ள வேறுபாட்டின் பொருள் என்ன என்பதுதான். மனிதரும் விலங்கும்தான் எனலாம்; அல்லது விலங்குகளுக்கு ஐந்தறிவு, மனிதருக்கு ஆறறிவு என வித்தியாசங்களைப் பட்டியலிடலாம். ஆனால், அத்தகைய வித்தியாசங்களின் விளைவு என்பது என்ன? மனித இனம் அவற்றின் மூலம் எதைச் சாதிக்கப்போகிறது?
அகாம்பென், ஜெர்மானியத் தத்துவ அறிஞர் மார்ட்டின் ஹைடெக்கரின் [Martin Heidegger 1889-1976] கருதுகோளையே முக்கியமாக விவாதத்துக்கு உட்படுத்துகிறார். அறுபதுகளில் ஹைடெக்கரின் வகுப்புகளில் பங்கேற்றவர் அகாம்பென். ‘விலங்குகளின் இருப்பு என்பது புலன்களால் மட்டும் இயங்கும் தன்மை கொண்டது; அதனால், அவற்றின் உலகியல் இருப்பு வறியது’ (poor of the world) என்பதுதான் ஹைடெக்கரின் கருதுகோள்.
மானுட இருப்பு புலனுணர்விலிருந்து புரிந்துணர்வுக்கு மேம்படுவதால் தன்னுணர்வுடன் உலகத்தைக் கட்டமைத்துக்கொள்கிறது. புலனுணர்வுக்கும் புரிந்துணர்வுக்குமான இடைவெளியே திறப்பு (open) என்ற இருப்பின் வடிவத்தை மானுடருக்கு வழங்குகிறது.
புலனுணர்வு புலப்படுத்தும் உலகுக்கு அப்பால் என்ன என்ற கேள்வி இந்தத் திறப்பின் வடிவத்தினால் உருவாகிறது. புலன்களால் மூடப்படும் உலகம், புரிதலுக்குத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் உலகம் ஆகியவற்றுக்கு இடையிலான முரண்பாடு விலங்குகளிடம் கிடையாது. எனவே, கவிஞர் ரில்கே [Rainer Maria Rilke 1875-1926], விலங்குகள் உலகின் திறப்பைக் காண்பதாகவும், மனிதர்களின் கண்களோ உள்வயமாகப் பார்ப்பதாகவும் கூறுவதைக் கண்டிக்கிறார் ஹைடெக்கர்.
விலங்கு-தளையும் மிருகமும்: தமிழில் விலங்கு என்ற சொல்லுக்கு இரண்டு முக்கியப் பொருள்கள் உள்ளன: ஒன்று கை, கால்களில் கட்டப்படும் தளை - கை விலங்கு, கால் விலங்கு; மற்றொன்று மனிதர்கள் அல்லாத பிற உயிரினங்கள். வண்டலூர் விலங்கியல் பூங்கா என்று வழங்கப்படுவதுபோல.
இந்த இரண்டு பொருளும் ‘விலங்கு’ என்கிற சொல்லுக்கு இருப்பதை இணைத்துப் பார்த்தாலே மொழியின் உள்கிடையான தத்துவம் வெளிப்படும். இயற்கையுடன் புலன்களால் பிணைக்கப்பட்ட நிலை தளைகள் இடப்பட்ட நிலை. மனிதம் என்பது இந்தத் தளைகளிலிருந்து தன்னுணர்வால் விடுபடும் ஆற்றல் கொண்டது என்கிற தத்துவ உள்கிடைக்கை, இந்தச் சொல்லின் இணைந்த அர்த்தத் தளங்களில் காண முடிகிறது.
ஆனால், பல நேரங்களில் விலங்குகளைச் சுதந்திரமானவையாக, இயற்கையோடு ஒன்றியவையாகப் பார்க்கும் வழக்கமும் படைப்பாளிகளிடம் உள்ளது. உதாரணமாக பாரதியார், ‘விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச் சிட்டுக்குருவியைப் போலே’ என்கிறார். ஆனால், தன் உயிரியல் நியதிப்படி வாழும் சிட்டுக்குருவிக்கு விடுதலை என்றால் என்னவென்று தெரியுமா என்று கண்டிப்பார் ஹைடெக்கர்.
தளை, அதனின்று விடுதலை என்பதெல்லாம் மானுடச் சிந்தனை அல்லவா? விலங்கை மனிதமயமாக்குவதும், மனிதரை விலங்கியல்பாக்குவதும் சிந்தனைச் சிதைவு என்பதே ஹைடெக்கரின் வாதம். விலங்குகளிடத்தும், தாவரங்களிடத்தும் சொல் என்பதே இல்லை என்பதை முக்கிய ஆதாரமாகக் கருத்தில் கொள்ளச் சொல்கிறார் ஹைடெக்கர்.
மானுடத் தன்னுணர்வின் இலக்கு – கடவுள்: மனிதரிடம் சொல் இருக்கிறது, தன்னுணர்வு இருக்கிறது என்றால் அதன் பயன் என்ன என்பது அடுத்த கேள்வி. இதற்குப் பன்னெடுங்காலமாக மானுடச் சிந்தனை உருவகித்த பதில், கடவுள் என்பதுதான். பிரபஞ்சத்தின் மூலகாரணமான கடவுளின் திருவடியை அடைவது அல்லது கடவுளுடன் கலப்பது என்பது தன்னுணர்வின் பலன்.
இதைப் பல்வேறு விதங்களில் மானுடம் பேசி வந்திருப்பதை, உருவகித்து வந்திருப்பதைப் பல்வேறு பண்பாடுகளிலும் காண முடியும். மனிதர்களிடம் புலனுணர்வுத் தளத்தில் உலகுடன் பிணைக்கப்பட்ட விலங்குத்தன்மை இருக்கிறது. ஆனால், அதனைக் கடந்து சிந்திக்கும் தன்னுணர்வால் மனிதர்கள் கடவுளை நோக்கித் தன் சிந்தனையைச் செலுத்த முடியும், மோட்சமடைந்துவிட முடியும் என்பதே நம்பிக்கை (‘கடவுள் பாதி, மிருகம் பாதி, கலந்து செய்த கலவை நான்’ – திரைப்படப் பாடல்).
ஆனால், இந்த இறை நம்பிக்கை மானுடச் சகவாழ்வை முற்றிலும் மேம்படுத்தவில்லை. கடவுளின் பெயராலேயே வன்முறையைப் பெருக்குவது, ஆதிக்க வடிவங்களை உருவாக்கிச் சக மனிதர்களைச் சுரண்டுவது என அரசியல் அமைப்புகளையே இது பெருக்கியது.
இதை முன்னிட்டே பெரியார், மனிதர் விலங்குகளிலிருந்து மேம்பட்டவர்கள் என்று கருதத் தேவையில்லை என்று கூறினார். தும்பிக்கை என்ற உறுப்பால் யானை எப்படிப் பிற விலங்குகளிடமிருந்து மேம்பட்டதில்லையோ, அதேபோலத் தன் சிந்தனைத் திறத்தின் பொருட்டு மனிதர் பிற விலங்குகளிடமிருந்து மேம்பட்டவர்கள் இல்லை என்றார் பெரியார்.
மானுடத் தன்னுணர்வின் விளைவு – இயங்கியல், வரலாறு: மானுடத் தன்னுணர்வின் இயக்கம் என்பது இயங்கியல்ரீதியாகத் தன் தளைகளிலிருந்து தொடர்ந்து தன்னை விடுவித்துக்கொண்டு, சமூக-அரசியல் வாழ்வை, மானுட வாழ்வை மேம்படுத்திக்கொண்டே செல்லும் என்று கருதினார் ஹெகல் [GWF Hegel 1770-1831].
அந்தப் பயணம்தான் வரலாறு என்றும், அந்தப் பயணத்தை வழிநடத்திச் செல்வது வரலாற்றின் ஆன்மா (Spirit) என்றும் கருதினார். அந்தப் பயணம் எப்போது நிறைவுபெறும் என்பதும், அது நிறைவு பெற்ற பின் தன்னுணர்வின் இயங்கியல் ஓய்ந்துவிடுமா என்பதும் கேள்விகள்.
வரலாற்றின் இலக்கு - நிறைவு (End of History) என்கிற ஹெகலின் கருத்தாக்கத்தைக் கோட்பாட்டாக்கம் செய்தவர் அலெக்ஸாண்டர் கோஜேவ் [Alexandre Kojeve, 1902-1968]. இவர் மனிதத் தன்னுணர்வின் இயங்கியல் நிறைவு பெற்ற பின், மனிதர் விலங்கினைப் போல இயற்கையுடன் முரணற்று மனநிறைவுடன் வாழ்வார்கள் என்றார்.
இந்தப் பார்வையையும் ஜோர்ஜ் பத்தாயின் [Georges Bataille 1897-1962] மறுப்பின் மூலமும் கேள்விக்கு உள்படுத்தும் அகாம்பென், மனிதர்கள் விலங்கிடமிருந்து வேறுபடுத்திக்கொள்ளும் நடைமுறை-அரசியல் முரணுடன்தான் தொடர்ந்து வாழ வேண்டும் என்று கூறுகிறார்.
- தொடர்புக்கு: rajankurai@gmail.com