

1990களின் மத்தியில் அல்லது அதற்கு முன்பான 1987களில் நிகழ்ந்த ரஷ்ய சோஷலிச வீழ்ச்சிக்குப் பிந்தைய இளம்பருவக் கோளாறுகளில் அந்நியமாகியும் குடும்பம் உள்ளிட்டான இருத்தலியல் பிரச்சினைகளில் புதிய நவதாராளவாதப் பண்புகள் மேலோங்கின. அப்போது, கலை-இலக்கியம், அனைத்துத் துறைகளிலும் பன்மைப்பட்ட கருத்தியல் மோதல்கள் உருவாகியிருந்த காலத்தில், மாற்றுகள் குறித்த அவதானங்களில் நாங்கள் இருந்தோம். அப்போது, சென்னையிலிருந்து அடிக்கடி திண்டுக்கல்லுக்கு வந்துபோன அசிரத்தையான காலங்களில் எங்களுக்கு அறிமுகமானவர்தான் வேட்டை கண்ணன்.
இரவில் அவர் உறங்கும்போது தட்டி எழுப்பினால்கூட கார்ல் மார்க்ஸின் ‘லுயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமே’ரிலிருந்து சட்டெனத் தனது பேச்சைத் தொடங்கிவிடுவார். திண்டுக்கல்லில் அவரை எனக்கு அறிமுகப்படுத்திய நண்பர்கள் பலரும் ஒரு பழைய மார்க்ஸிய லெனினிய (எம்.எல்.) இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றே அறிமுகப்படுத்தினார்கள்.
தனியார் நிலங்களைப் பொது உழைப்பு முகாம்களுக்கு உள்ளாக்கி, அதன் மூலமாக ஒரு கூட்டுப் பண்ணைத் திட்டத்தைக் கிராமப்புறங்களிலிருந்து தொடங்க முடியும் என்கிற நம்பிக்கையோடு சென்னை போன்ற பெருநகரங்களின்மீது நம்பிக்கை அற்றவராக எங்கள் பகுதிக்கு அப்போது அவர் வந்துகொண்டு இருந்தார். இதை மிகவும் தாமதமாகத்தான் நான் புரிந்துகொண்டேன். பின்னாள்களில், தொடர்ந்து ரஷ்ய இலக்கியங்களை நான் வாசித்தபோது, இடதுசாரி அழகியல் அல்லது அதன் சித்தாந்த முனைப்புகளை அவர் தனக்குள் பேரளவு கொண்டிருந்ததைத் தெரிந்துகொண்டேன். ஆக, கடைசியாக ஒரு மார்க்ஸிய லட்சியவாதி ஒரு அபாக்கியவாதியாக அல்லது அப்படியாகவேதான் எனக்கும் பலருக்கும் அறிமுகமானார்.
சென்னையில் ஒரு காலத்தில் எம்.எல். இயக்கத்தின் பிராந்திய ஒருங்கிணைப்பாளராக அதற்கு முன்பாக அவர் இயங்கிக்கொண்டிருந்தார் என்பதோ, 90களுக்குப் பிறகான இடதுசாரி இயக்கங்களின் ‘ஜோல்னாபை இன்டலெக்சுவல்கள்’ மீது பல்வேறு விமர்சனங்களைக் கொண்டிருந்தார் என்பதையோ அவருடன் உரையாடியபோதுதான் நாங்கள் அறிந்துகொள்ள முடிந்தது.
சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இன்று செயலிழந்து நிற்கும் ஸ்டார் டாக்கீஸ் அருகே வல்லப அக்ரஹாரத்தில் தன் தமையனாரின் இல்லத்தில் தங்கி கீழைத்தேயம், மார்க்ஸியம் குறித்த உலகளாவிய சிந்தனைகளைத் தனக்குள் அவர் ஒருமுகப்படுத்திக் கொண்டிருந்தார். அதே வல்லப அக்ரஹாரத்தில் அலுவலகம் வைத்திருந்த சின்னக் குத்தூசியுடன் மாலை நேர அமர்வுகளில் அரசியலும் பேசிக் கொண்டிருந்தார். சோதிப்பிரகாசத்தின் அத்தியந்த நண்பரான வேட்டை கண்ணன், அவரிடம் இருந்தே ‘மனம் என்பது என்ன?’ என்கிற பிரதான கேள்விக்குள் இடம்பெறுகிறார்.
விவசாயம் அல்லது வணிகம் என்கிற பெயரில் அவர் வடசென்னைக் குப்பங்களில் மீன் வியாபாரம் செய்து ‘கருவாட்டுக் கண்ணன்’ என்கிற பெயரையும் பெற்றிருந்தார். திருவல்லிக்கேணி சந்துகளில் அவரைச் சந்திக்கிற யார் ஒருவரும் அவருடன் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம்கூடச் செலவழிக்க அஞ்சுவார்கள். ஒரு வறட்டுப் பொருள்முதல்வாதியை, அதாவது இக்கால நவீனத்தின் பறக்கும் தட்டுகளில் எதேச்சதிகாரத்தை காணும் யார் ஒருவரும், தங்களின் சந்தர்ப்பவாதங்களில் ஒரு தரித்திரியம் பிடித்த மனிதனை ஒருபோதும் சந்திக்க விரும்ப மாட்டார்கள். என்றாலும், அவர் தமிழின் கலை-இலக்கியத்தில் இடதுசாரி அழகியலின் வரையறையை அல்லது அதன் அறத்தை அனைத்து இலக்கியவாதிகளின் மீதான விமர்சனமாக முன்வைத்துச் சோர்ந்துபோனார்.
அதன் பிறகு, பலவீனமாகிவிட்ட தன் பிற்காலத்தில் உடம்பில் ஒரு சதையும் இல்லாமல் விடைத்த காதுகளோடு ஒரு குச்சிப்பூச்சியைப் போல உடலாலும் வலுவிழந்து இற்றுப்போன பின்பும் நிறைய மொழிபெயர்ப்புகளைத் தன் இறப்பின் வலிமைக்கெனவும் தமிழ் அறிவுச் சமூகத்துக்கெனவும், எதிர்காலத்துக்கெனவும் கொடுத்துச் சென்றுள்ளார். இவர் மொழிபெயர்த்த மார்க்கோ போலா புத்தகம் முதல் இந்தியக் காலனியத்தின் வருகை குறித்த ஒரு ஆவணம் என்றும் கூறலாம். வாய்ப்புள்ளவர்கள் அவற்றை வாசிப்பதன் மூலம் தமிழில் இலக்கிய அரசியல் அல்லது அரசியல் இலக்கியம் பற்றித் தெரிந்துகொள்ள ஒரு காரணியாக அவர் இருந்திருக்கிறார் என்பதை ஒப்புக்கொள்வார்கள்.
பிறகு, மனிதர்கள் எதற்காக உயிருடன் இருந்தார்கள் அல்லது இருக்க விரும்பினார்கள் என்பதற்கெல்லாம் வரலாற்றின்மீது பழி சுமத்த முடியாது. வரலாறு என்பது மனிதர்களை வெற்றிடம் ஆக்குவதில் கருணையற்றுப் போன பின்பு, வேட்டை கண்ணன் போன்றவர்கள் தங்கள் பணியில் இறுதிவரை தீவிரமாக இருந்தார்கள் என்பது ஒரு இடதுசாரி செவ்வியில் பண்பாகக் கலைத்துவம் பெறுகிறது. அவர் ‘வேட்டை’ என்று ஒரு நாவலையும் எழுதியிருக்கிறார். எனக்குத் தெரிய பல சிறுகதைகளைப் புதிய நவதாராளப் பொருளாதார காலத்தில் பகடியாகவும் எழுதவும் வல்லவர் என்பதன்றி, மொழிபெயர்ப்புகளையே அவர் இறுதியாக விட்டுச் சென்றுள்ள அறமாக எதிர்காலத்தில் ஞாபகம் கொள்ளவும் கூடும்; அல்லது மறந்துவிடுதல் என்பது யதார்த்தமானது என்றால், பிறப்பிலிருந்து இறப்புவரை கார்ல் மார்க்ஸ் வழியாக ஒரு தன்னிலையான லௌகீக அலைக்கழிப்புக்கு உள்ளான கலை-இலக்கியச் சம்பவங்கள் மற்றும் சித்தாந்தக் கேள்வி-பதில்கள் வேட்டை கண்ணனுக்கு நிகழ்ந்துவிட்டன எனக் கொள்ளலாம்.
இந்தியாவில் ஒரு தோழருக்கான மரணம் என்பது புதிய நவீன மாற்றுகளில் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே சம்சயப்பட்ட இறுதி நிகழ்வாகத்தான் இருக்கும் என்பதான சம்பவங்களில் ஒன்றுதான் வேட்டை கண்ணனின் விடைபெறுதலாகவும் இருக்கலாம்.
- யவனிகா ஸ்ரீ ராம்
கவிஞர், தொடர்புக்கு: yavanikaramasamy@gmail.com