இந்தியாவின் எதிர்காலம் ஊர்வனவற்றைச் சார்ந்ததே! - காட்டுயிர்ப் பாதுகாவலர் ரோமுலஸ் விட்டேகர் நேர்காணல்

இந்தியாவின் எதிர்காலம் ஊர்வனவற்றைச் சார்ந்ததே! - காட்டுயிர்ப் பாதுகாவலர் ரோமுலஸ் விட்டேகர் நேர்காணல்
Updated on
4 min read

ரோமுலஸ் விட்டேகர். இந்திய ஊர்வனவற்றில் ஏதாவது ஒன்றை நிறுத்திக் கேட்டால் - அவற்றுக்குப் பேசும் திறன் இருந்திருந்தால் - இந்தப் பெயரை அவை போற்றியிருக்கும். பாம்பைக் கண்டவுடன் உடனே அடிப்பதற்குக் கம்பைத் தேடும் நமது மனோபாவத்தில் இன்றைக்கு ஓரளவு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றால், அதற்குக் காரணமும் விட்டேகர்தான். திரைப்பட நடிகர்கள், கிரிக்கெட் வீரர்களைப் போலக் கொண்டாடப்பட்டிருக்க வேண்டியவர்.

காரணம், எண்பதைத் தொடும் இந்த வயதிலும் இந்திய ஊர்வனவற்றைக் குறித்த ஆராய்ச்சி, பாதுகாப்புப் பணிகளில் இடையறாது ஈடுபட்டுவருகிறார். இயற்கை பாதுகாப்புச் செயல்பாடுகளில் அவரது அனுபவம் 55 ஆண்டுகள்.
பிறப்பால் அமெரிக்கராக இருந்தாலும் தமிழ்நாடுதான் ரோமுலஸ் விட்டேகரின் முக்கியப் பரிசோதனைகள் நடைபெற்ற முதல் களம். 1969இல் சென்னை சேலையூரில் சிறிய அளவில் தொடங்கப்பட்டு, பிறகு கிண்டி சிறுவர் பூங்கா அருகே மாற்றப்பட்ட சென்னை பாம்புப் பண்ணை, மாமல்லபுரம் அருகேயுள்ள சென்னை முதலைப் பண்ணை, கருநாகங்களுக்காக (King Cobra) ஆகும்பே மழைக்காட்டு ஆராய்ச்சி நிலையம், அந்தமான் நிகோபார் தீவுகள் சுற்றுச்சூழல் குழு எனக் காட்டுயிர் ஆராய்ச்சி, பாதுகாப்பு சார்ந்து முன்னோடிப் பணிகளை அவர் ஆற்றியுள்ளார்.

இந்தச் செயல்பாடுகளில் சமவெளிப் பழங்குடிகளான இருளர்களையும் இணைத்துக்கொண்டு செயல்பட்டவர். இன்றைக்குப் பெரிதும் பேசப்படும் மரபறிவை அறிவியலுடன் சரியான வகையில் கூட்டுச் சேர்த்து வெற்றிகரமாக செயல்படுத்திக்காட்டியவர். அவர் ஏற்படுத்திய அமைப்புகள், அவருடைய பணிகளால் உத்வேகம் பெற்று சேகர் தத்தாத்ரி, சதீஷ் பாஸ்கர், கார்த்திக் சங்கர் எனப் பலர் ஊர்வன ஆராய்ச்சியாளர்கள், இயற்கைப் பாதுகாவலர்களாக மாறியிருக்கிறார்கள். அவரது பணியின் முக்கியத்துவம் நம் நாட்டில் போதுமான அளவு உணரப்பட்டிருக்காவிட்டாலும் பசுமை ஆஸ்கர் எனப்படும் ‘வைட்லி விருது’, மதிப்புமிக்க ‘ரோலக்ஸ் விருது’ போன்ற சர்வதேச அங்கீகாரங்கள் அவரது பணியைத் தேடி வந்தன. பாம்புகளை வழிபடவும் வித்தை காட்டவுமே பழக்கப்பட்டிருந்த நம் நாட்டில், அவருடைய அவ்வளவு முயற்சிகளிலும் அறிவியல் பார்வையே மையமாக இருந்தது. அவருடன் உரையாடியதில் இருந்து:

உங்களுடைய 55 ஆண்டு இயற்கை பாதுகாப்புப் பயணத்தை வரையறுக்கும் கொள்கை என்று எதைக் கூறுவீர்கள்?

என்னுடைய காட்டுயிர்ப் பாதுகாப்புப் பணிகளை வரையறுக்கும், வழிகாட்டும் கொள்கையாக இருந்தது ஒன்றுதான். எனக்கு நான்கு வயதானதிலிருந்தே வளர்ந்துவந்த அந்த நோக்கம், இப்போதுவரை நீங்கிவிடவில்லை. உலகின் சிறந்த உயிரினங்கள் ஊர்வனதான் என்பதை மனிதர்களுக்கு உணர்த்துவதே அந்த நோக்கம்.

இந்தியாவின் தனித்துவ உயிரினங்களில் ஒன்றான கரியால் முதலைகளை அழிவின் விளிம்பிலிருந்து 1970-80களில் காப்பாற்றியது உங்கள் குழு. உலகமயமாக்கலுக்குப் பிறகு இயற்கையும் காடுகளும் இன்றைக்குப் பேராபத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்திய ஊர்வனவற்றின் எதிர்காலம் என்னவாக இருக்கும்?

இந்தியாவில் மூன்று முதலை வகைகள் வாழ்ந்துவருகின்றன. அவற்றில் கரியால் கிட்டத்தட்ட அழிவின் விளிம்புக்குச் சென்றிருந்தது. கரியால்களின் எண்ணிக்கை அபாய கட்டத்தைத் தொட்டுவிட்டதை 1970களில் என்னுடைய கள ஆய்வுகள் உணர்த்தின. தொடர்ந்து கரியால் முதலைகளை அழிவிலிருந்து பாதுகாப்பதற்கு அரசிடமும், காப்பிட இனப்பெருக்க முறை சார்ந்தும் ஆதரவு திரட்ட முயன்றோம். 1970களின் மத்தியில் இந்திய அரசின் ‘முதலை பாதுகாப்புத் திட்ட’த்தில் இணைந்தோம். அதன் பிறகு நடந்ததெல்லாம் வரலாறு.

காட்டுயிர்ப் பாதுகாப்புச் சட்டம் மூலமாக இந்திய ஊர்வன, நீர்நில வாழ்விகளைப் பாதுகாக்கச் சட்டரீதியில் உறுதியான நடவடிக்கைகளை அரசு எடுத்திருக்கிறது. ஊர்வனவற்றைப் பாதுகாப்பதில் மதநம்பிக்கைகளும் பங்காற்றுகின்றன. அணைகட்டுதல், ஆறுகளை இணைத்தல், பன்மைத்தன்மை கொண்ட காடுகளை அழித்து ஒற்றைப் பயிர்த் தோட்டங்களாக மாற்றுவது உள்ளிட்ட வளர்ச்சி நடவடிக்கைகளால் இயற்கை வாழிடங்கள் மோசமாக அழிக்கப்படுகின்றன. அதனால் இந்திய ஊர்வன வகைகள் பெரும் ஆபத்தை இன்றைக்கு எதிர்கொண்டுள்ளன.
பன்மைத்தன்மை கொண்ட ஊர்வன வகைகளை இந்தியா பெற்றுள்ளது. அது மிகப் பெரிய இயற்கைப் புதையல்: 300-க்கும் மேற்பட்ட பாம்பு வகைகள், 200-க்கும் மேற்பட்ட பல்லி வகைகள், 40 வகை நில ஆமைகள் - நீராமைகள், 3 முதலை வகைகள், பிரம்மிப்பூட்டும் 500 வகை தவளைகள், தேரை வகைகள். நாடு வளர்வதற்கு வளர்ச்சி நடவடிக்கைகள் தேவைதான். ஆனால், செழிப்பான உயிரினப் பன்மையை அழித்து அவை உருவாக்கப்படக் கூடாது. உலகின் சிறந்த சூழலியலாளர்கள் சிலர் நம் நாட்டில் இருக்கிறார்கள். ‘நிதி ஆயோக்’ போன்ற முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்புகளில் உடனடியாக அவர்களை உறுப்பினர்களாக்க வேண்டும். எந்த ஒரு பெரிய வளர்ச்சித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்னதாகவும் ஊர்வனவற்றுக்கோ உயிரினப் பன்மைக்கோ ஆபத்து ஏற்படுமா என்பது குறித்த அவர்களின் கருத்தைக் கவனமாகக் கேட்டறிய வேண்டும். ஏனென்றால், இந்திய மக்களின் எதிர்காலம் ஊர்வனவற்றைச் சார்ந்தே உள்ளது!

உங்கள் அவதானிப்பில் எதிர்காலத்தில் பிரகாசிக்க வாய்ப்புள்ள இந்திய ஊர்வன ஆராய்ச்சியாளர்கள், இயற்கைப் பாதுகாவலர்கள் யார் யார்?

இந்திய ஊர்வன ஆராய்ச்சியாளர்கள், இயற்கைப் பாதுகாவலர்களின் பட்டியல் மிகப் பெரியது. 1970களில் அவர்களின் எண்ணிக்கை 10-20 பேர் இருக்கும் என்றால், இன்றைக்கு ஆயிரக்கணக்கில் இல்லாவிட்டாலும் நூற்றுக்கணக்கிலாவது அவர்கள் பெருகியிருக்கிறார்கள். இந்தத் தலைமுறை காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களின் பணிகள் பெரும் திருப்தி அளிக்கின்றன. தக் ஷிண் அறக்கட்டளை, இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளை, இந்தியக் காட்டுயிர் ஆராய்ச்சி நிறுவனம், ஒயில்டுலைஃப் எஸ்.ஓ.எஸ்., இந்தியக் காட்டுயிர்ப் பாதுகாப்பு சங்கம், ஏட்ரீ, பல அமைப்புகள், அரசு வனத் துறைகளின் பணிகள் குறிப்பிடத்தகுந்தவை என்பதில் சந்தேகமில்லை.

அதே நேரம் நமது ஊர்வன வகைகள் எதிர்கொள்ளும் ஆபத்துகளோ மாபெரும் அளவில் உள்ளன. காட்டுயிர் வாழிடங்களுக்கும் அற்புதமான ஊர்வனவற்றுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வளர்ச்சி நடவடிக்கைகளைக் குறித்து இன்னும் தீவிரமான களச் செயல்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் மேற்கண்ட காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள் வழிகாட்டவும், தேவைப்பட்டால் தடுத்து நிறுத்தும் வகையிலும் செயல்படுவதையும் பார்க்க நான் பெரிதும் விரும்புகிறேன்.

ஊர்வனவற்றைக் குறித்த மக்களின் பார்வை மாறியிருக்கிறது, மேம்பட்டிருக்கிறது என நினைக்கிறீர்களா?

சென்னை பாம்புப் பண்ணையைத் தொடங்கிய காலத்துடன் ஒப்பிடும்போது ஊர்வனவற்றைக் குறித்த விழிப்புணர்வும் ஆர்வமும் முன்னெப்போதைவிடவும் இன்றைக்கு அதிகமானோரிடம் பரவியிருக்கிறது. தொலைக்காட்சி, மற்ற ஊடகங்களுக்குத்தான் அதற்கு நன்றி சொல்ல வேண்டும். காட்டுயிர் சார்ந்து பொதுவாக ஆர்வமுள்ள குழந்தைகள் ஊர்வனவற்றால் கவரப்பட்டுப் பட்டம், ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொண்டு இந்தத் துறை சார் நிபுணர்களாக மாறிவருவதையும் பார்க்க முடிகிறது.

சமவெளி இருளர் பழங்குடியினரோடு மிக நெருக்கமாக இணைந்து பணிபுரிந்திருக்கிறீர்கள். அவர்களுடைய மரபறிவு எதிர்காலத்திலாவது உரிய கவனத்தைப் பெறுமா?

பாம்புகள் இருக்கும் இடங்களைக் கண்டறிவதில் இருளர்களுக்கு ஈடு இணையற்ற திறன் இருக்கிறது. அதைக் கொண்டு, மனித உயிரைக் காப்பாற்றும் பாம்பு நஞ்சு முறிவு மருந்தைத் தயாரிப்பதற்கான மூலப்பொருளைப் பாம்புகளிடமிருந்தே திரட்டித் தரும் வேலையை இருளர்களுக்குத் தந்திருந்தோம். இந்தியாவில் 50,000 கிராம மக்கள் ஆண்டுதோறும் பாம்புக்கடியால் இறந்துவருகிறார்கள். அதைத் தடுக்கும் இருளர்களின் பழங்குடித் தொழில்நுட்பம் போற்றப்படாவிட்டாலும்கூட, அவர்கள் முக்கியமான வேலையைச் செய்துவருவதைப் பெரும்பாலோர் உணர்ந்திருக்கவில்லை. மற்ற பழங்குடிகளைப் போலவே இருளர்களின் மரபறிவுத் திறன்கள் பெருமளவு தொலைந்துவிட்டன. எஞ்சியிருப்பதும், இழக்கப் பட்டுவருகிறது. எடுத்துக்காட்டாக, வயல்களில் எலிகளைக் கட்டுப்படுத்தும் இருளர்களின் நுட்பங்கள் தொடர்பாக 1980களில் நாங்கள் ஆராய்ந்தோம். நஞ்சு வைத்துப் பிடிப்பதைவிட இருளர்களின் நுட்பங்கள் பெரும் பலன் அளித்தன. நான்கு மாதங்களில் 2.4 லட்சம் எலிகளைப் பிடித்தார்கள், 5,000 கிலோ தானியங்களையும் எலி வளைகளில் இருந்து மீட்டெடுத்திருந்தார்கள். கெடுவாய்ப்பாக, இந்த அரிய நுட்பத்தைப் பெரிய அளவில் பயன்படுத்திக்கொள்ள யாரும் முன்வரவில்லை.

இந்திய அளவில் இயற்கைப் பாதுகாப்புக்கு உங்கள் பங்களிப்பு மிகப் பெரியது. இந்தப் பயணத்தில் உங்களுக்கு மிகவும் மனநிறைவு தந்தது எது? மிகப் பெரிய சாதனையாகக் கருதுவது எதை?

எங்களுடைய அமைப்புகளில் பயிற்சி பெற்ற நூற்றுக்கணக்கானோர் இந்தியாவின் முன்னணி ஊர்வன நிபுணர்கள், இயற்கைப் பாதுகாவலர் களாக மாறியிருப்பதைக் கண்டு பெருமைப்படுகிறோம். எங்களுடைய பெரிய சாதனை என்று மற்றொரு விஷயத்தையும் சொல்லலாம். அரசுத் துறைகளிலும் வெளியிலும் இருந்த திறமையற்றவர்கள், உத்வேகமற்றவர்கள் எங்கள் பொறுமையைப் பெருமளவு சோதித்தாலும்கூட, இயற்கை பாதுகாப்பு சார்ந்து யார் ஒருவர் ஆர்வம் காட்டுகிறாரோ அவரைப் பற்றிக்கொண்டு வேலையை நகர்த்தவே முயல்வோம். அதுவே இன்றுவரை என்னை வாழவைத்துக்கொண்டிருக்கிறது. இந்த 80 வயதிலும் ஓய்வுபெற வேண்டாம் என என்னை நினைக்கவைப்பது அதுதான்.

(மே 23: ரோமுலஸ் விட்டேகருக்கு 80 ஆண்டு நிறைவு)

- தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in