

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் அமைச்சரவையில், சமீபத்தில் நடந்தேறியிருக்கும் அமைச்சர்களின் துறை மாற்றங்கள் அரசியல் களத்தில் ஒரு விவாதமாக மாறியிருக்கின்றன. அமைச்சரவையில் யாரெல்லாம் இடம்பெற வேண்டும், யாருக்கு எந்தத் துறையை ஒதுக்க வேண்டும் என்பது முதல்வரின் தனிப்பட்ட உரிமையும் விருப்பமும் ஆகும்.
ஆனால், அதையும் தாண்டி அமைச்சர்களின் துறை மாற்றமோ, நீக்கமோ பொதுவெளியில் கவனம் பெறுவதற்குக் காரணம், அவற்றின் பின்னணியில் இருக்கும் அரசியல் சதிராட்டங்கள்தான்.
பேசப்பட்ட மாற்றங்கள்: கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டை ஆட்சிசெய்துவரும் திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் பல முறை அமைச்சரவை மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் அமைச்சர்கள் பலர் அதிரடியாக மாற்றப்பட்டிருக்கிறார்கள்; அதுதொடர்பாகப் பரவலான விமர்சனங்களும் எழுந்தது உண்டு. ஒப்பீட்டளவில் திமுக ஆட்சிக்காலத்தில் அதுபோன்ற பரபரப்பான அமைச்சரவை மாற்றங்கள் குறைவு.
மு.கருணாநிதி கடைசியாக முதல்வராக இருந்த காலத்தில், நில மோசடி விவகாரத்தில் சிக்கிய என்.கே.கே.பி.ராஜா அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார். ஒரு தொலைபேசி உரையாடலால் பூங்கோதை ஆலடி அருணா அமைச்சர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது. 2010 இல் நடந்த ஓர் அமைச்சரவை மாற்றம், அரசியல் ரீதியாக மிகுந்த கவனம் பெற்றது.
அன்று பொதுப்பணி, சட்டத் துறைகளைக் கவனித்துவந்த மூத்த அமைச்சர் துரைமுருகனிடமிருந்து பொதுப்பணித் துறை பறிக்கப்பட்டது. திமுக ஆட்சி என்றால், பொதுப்பணித் துறை துரைமுருகனுக்கே எனும் அளவுக்கு அடையாளம் உண்டு. எனவேதான், அந்த நடவடிக்கை விவாதத்துக்கு வழிவகுத்தது.
முதல் நீக்கம்: அதன் பிறகு, தற்போது நடைபெற்றுள்ள துறை மாற்றங்கள் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. பால்வளத் துறை அமைச்சர் நாசரின் பதவிப் பறிப்பைப் புரிந்துகொள்ள முடிகிறது. மக்களோடு மிகவும் நெருக்கமான ஒரு துறை பால்வளம். அதில் குறைபாடுகள் ஏற்பட்டாலோ அத்துறையும் அமைச்சரும் சர்ச்சைகளுக்கு இலக்கானாலோ, அது ஆட்சிக்கும் சேர்த்தே அவப்பெயரை ஏற்படுத்திவிடும்.
அண்மைக் காலமாக எதிர்மறையான செய்திகளில் நாசர் அடிபட்டுவந்த நிலையில், அத்துறையை மனோ தங்கராஜுக்கு மாற்றியிருக்கிறார் முதல்வர். மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவையில் நடைபெற்றுள்ள முதல் நீக்கம் இது.
ஓர் ஆட்சி நிர்வாகம் செம்மையாக நடைபெறுவதில், ஒட்டுமொத்த அமைச்சரவைக்கும் பங்கிருக்கிறது. எனவே, அமைச்சர்களின் செயல்பாடுகளை ஆய்வுக்கு உட்படுத்தி, அதனடிப்படையில் நடவடிக்கை எடுப்பதும் முதல்வரின் பணிதான். அந்த வகையில் சரியாகச் செயல்படாத அமைச்சர்களை மாற்றுவதும் அவசியம்தான். அந்த வகையில் இரண்டு ஆண்டுகளைக் கடந்திருக்கும் திமுக ஆட்சியின் அமைச்சரவையில் நிகழ்ந்திருக்கும் மாற்றம் இயல்பானது என்றே சொல்லலாம்.
‘ஆடியோ’ விவகாரமும் மாற்றமும்: அதேவேளை, சில மாற்றங்கள் பல சந்தேகங்களைக் கிளப்பியிருக்கின்றன.மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அமைச்சர்கள் திறமையாகச் செயல்படுகிறார்கள் எனப் பெயரெடுத்த துறைகளில், நிதித் துறையும் தொழில் துறையும் குறிப்பிடத்தக்கவை. நிதித் துறை என்பது மிக முக்கியமானது. பல்வேறு துறைகளுக்கு நிதியைப் பகிர்ந்தளிக்கும் துறை மட்டுமல்ல, ஆட்சிக்கு நற்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் அரசு அறிவிக்கும் மக்கள் நலத் திட்டங்களுக்கு, ஏனைய துறைகளுக்குச் சிக்கல் இல்லாமல் நிதியைப் பகிர்ந்தளிக்கின்ற, சவால்கள் நிறைந்த துறையும்கூட.
முதல் முறையாக அமைச்சராகப் பொறுப்பேற்ற பிடிஆர். பழனிவேல் தியாகராஜன், நிதித் துறையில் திறம்படச் செயல்பட்டவர் எனப் பெயரெடுத்தவர். நிதி வருவாய்ப் பற்றாக்குறை, அரசின் கடன் சுமை, கரோனா பெருந்தொற்றால் முடங்கிய பொருளாதாரம் என நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில், சவாலான ஒரு துறையைக் கையாள்வது கடினமானது. பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றவரான பழனிவேல் தியாகராஜனிடம் நிதியமைச்சகப் பொறுப்பை 2021இல் முதல்வர் வழங்கியது அவர் மீதான நம்பிக்கையில்தான்.
முதல்வரின் நம்பிக்கையை நிறைவேற்றி, திறம்படச் செயலாற்றியவர் என கோட்டை அதிகாரிகள் மத்தியில் பழனிவேல் தியாகராஜன் பெயரெடுத்திருந்தார். அது மட்டுமல்ல, ஆட்சிப் பணியில் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்பதற்காகவே, மாநில அளவில் வகித்துவந்த கட்சிப் பணியையும் துறந்தவர் அவர்.
அரசியலில் இவையெல்லாம் அபூர்வமானவை. அந்த அளவுக்குத் தமது துறை நலன் சார்ந்து இயங்கிய அமைச்சரின் துறையை மாற்றியது அரசியல் களத்தில் மட்டுமல்ல, சாமானியர்கள் மனதிலும் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. குறிப்பாக, இந்த நடவடிக்கை, அண்மையில் வெளியான ‘ஆடியோ’விவகாரத்தின் நீட்சியா எனும் கேள்வி உரக்க ஒலிக்கிறது.
தவிர்க்க முடியாத விமர்சனங்கள்: தொழில் துறையில் சிறப்பாகச் செயல்பட்ட தங்கம் தென்னரசுவின் துறை மாற்றமும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. எந்தப் பணியை அளித்தாலும் அதைப் பற்றி முழுவதும் அறிந்து முத்திரை பதிக்கக்கூடியவர் என்று பெயரெடுத்தவர் அவர். முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிக் கல்வித் துறையை 2006இல் மு.கருணாநிதி தனியாகப் பிரித்தபோது, புதியவர் என்றாலும் தங்கம் தென்னரசுவின் திறமையை அறிந்தே, அத்துறைக்கு அவரை அமைச்சராக்கியிருந்தார்.
அதேபோல, மாநிலத்தின் நலன் சார்ந்த தொழில் துறையை முதல்வர் ஸ்டாலின் அவருக்கு வழங்கியபோது, அது சரியான நகர்வாகவே பார்க்கப்பட்டது. முதல்வரின் நம்பிக்கையை அவர் திருப்திகரமாக நிறைவேற்றியிருக்கிறார் என்பதைத் தொழில் நிறுவனங்களுடனான அண்மையப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உணர்த்துகின்றன. ஆனால், தங்கம் தென்னரசுவும் தொழில் துறையிலிருந்து மாற்றப்பட்டிருப்பது தடம்புரண்ட ஓர் உணர்வைத் தோற்றுவித்திருக்கிறது.
பொதுவாகவே அமைச்சர்களின் நீக்கம், துறைகள் மாற்றம் போன்ற நடவடிக்கைகள் அமைச்சர்களை முதல்வர் உன்னிப்பாகக் கவனித்துவருகிறார் என்கிற எண்ணத்தைப் பிற அமைச்சர்களிடம் ஏற்படுத்தும். அது அவர்கள் சிறப்பாகச் செயல்படவும் உதவும். அதேவேளையில், இந்த நடவடிக்கைகள் சரியாகச் செயல்படாத அமைச்சர்களின் மீது பாயும்போதுதான் அது அர்த்தமுள்ளதாகவும் மாறும். திறம்படச் செயல்பட்ட அமைச்சர்கள் மாற்றப்படுவது, அரசின் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும். திமுக அரசு பரிசீலிக்க வேண்டிய விஷயம் இது.
- தொடர்புக்கு: karthikeyan.di@hindutamil.co.in