அச்சுறுத்தும் கார்ட்டூன் அலைவரிசைகள்!

அச்சுறுத்தும் கார்ட்டூன் அலைவரிசைகள்!
Updated on
2 min read

குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் கார்ட்டூன் அலைவரிசைகளில், குழந்தைப் பருவத்துக்குப் பொருத்தம் இல்லாத அதீதக் கற்பனைக் காட்சிகளும், வன்முறைக் காட்சிகளும் இடம்பெறுவது சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது. குழந்தைகளுக்கு உளவியல் சிக்கலை ஏற்படுத்தும் வகையிலான இந்தப் போக்கு குறித்த உரையாடல் அவசியம்.

இன்றைக்குக் குழந்தைகளுக்குக் கதை சொல்ல தாத்தா - பாட்டிகள் இல்லை. அந்தப் பெரும் வெற்றிடத்தை நிரப்புகின்ற பணியை கார்ட்டூன் அலைவரிசைகள் செய்கின்றன. ஒவ்வொரு அலைவரிசையும் தனக்கான நிரந்தரக் கதாபாத்திரங்களை உருவாக்கி, கதைக் களத்தை மட்டும் மாற்றி அமைத்துக்கொள்கின்றன. இந்தக் கதைகளில் வருகின்ற சில கதாபாத்திரங்கள், எதிர்பாராத தருணங்களில் வன்முறையை விதைக்கும் வகையில் பேசுவதைக் காண முடிகிறது.

ஒரு சொல்லை அல்லது ஒரு காட்சியை மீண்டும் மீண்டும் சொல்வதாலும் காட்டுவதாலும், அதுதொடர்பான கற்பனையைக் குழந்தைகளின் உள்ளத்தில் மிக எளிதாக விதைத்துவிட முடியும். ஒரு கார்ட்டூன் தொடரில், ‘கொலை’ என்னும் சொல்லை ஏழு, எட்டு முறைக்கு மேல் ஒரு கதாபாத்திரம் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே கடந்துபோகிறது.

குழந்தைகள் மத்தியில் இந்த வார்த்தை ஏற்படுத்தும் அதிர்வுகள் மிக மோசமாக இருக்கும் என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை. இப்படியான எதிர்மறைத் தாக்கங்கள், குழந்தைகளின் சொல்லாடலில் வெளிப்படும்போது நாமும் அதிர்ந்துவிடுகிறோம்.

பேய், அரக்கன், சூனியக்காரிகள் என அறிவியல்ரீதியாக ஏற்க முடியாத கற்பனைக் கதாபாத்திரங்கள், குழந்தைகளின் மனதில்அச்சத்தை விளைவிக்கும் வகையிலான காட்சியமைப்பு, பின்னணிக் குரல்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றன.

பல கதைத் தொடர்கள் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன என்பதால், இவற்றின் வீச்சு அதிகம். புராணங்கள், கட்டுக்கதைகள் மூலம் முந்தைய தலைமுறைக் குழந்தைகளுக்கு இப்படியான கதாபாத்திரங்கள் அறிமுகமானவைதான். ஆனால், இன்றைய நவீனத் தொழில்நுட்பங்கள், பெரியவர்களே ஒருகணம் திகைத்துவிடும் அளவுக்குத் தத்ரூபமாக உருவாக்கப்படுகின்றன.

இது மிகவும் கவலையளிக்கும் விஷயம். கைபேசிகளில் வரும் காணொளிகளின் தரம் இன்னும் மோசம். இயல்பாக ரசிக்கப்பட்டதாமஸ் ரயில் இன்ஜின் போன்ற கதாபாத்திரங்கள்கூட ரத்தம் குடிக்கும் ராட்சசர்களாக மாற்றப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.

இன்றைய பெற்றோர்கள், தாத்தா-பாட்டிகள் குழந்தைகளுக்குக் கதை சொல்கின்றனரா என்பது விவாதத்துக்குரிய விஷயம். எனவே, பெரும்பாலான குழந்தைகள் பொழுதுபோக்குக்காகத் தொலைக்காட்சிகளைச் சார்ந்திருக்கின்றனர். நேரடியாக ஒருவர் கதை சொல்வதற்கும் அந்தக் கதை கேட்பதற்கும், அதே கதையை இதுபோன்ற காட்சி ஊடகங்கள் வழியே குழந்தைகள் பார்ப்பதற்கும் இடையே பேரளவு வேறுபாடுகளும் இடையூறுகளும் இருக்கின்றன.

கார்ட்டூன் அலைவரிசைகள் ஒட்டுமொத்தமாக வன்முறையை விதைக்கும் வகையிலான கதைகளை மட்டுமே ஒளிபரப்புகின்றன எனச் சொல்லிவிட முடியாது. பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் அமர்ந்து ரசித்துப் பார்க்கும் வகையிலான கதைத் தொடர்களும் கார்ட்டூன் அலைவரிசைகளில் உண்டு.

ஆனால், அதே அலைவரிசையில் இன்னொரு நிகழ்ச்சி குழந்தை மனதுக்கு ஏற்பில்லாத அதீத கற்பனைகளுடன் வருவது உண்டு; இதுதான் சிக்கலான விஷயம். இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க சம்பந்தப்பட்ட அலைவரிசைகள், தங்கள் பொறுப்பை உணர்ந்து குழந்தைகளுக்கு ஏற்ற நிகழ்ச்சிகளை மட்டும் வழங்க முன்வருவது அவசியம்.

குழந்தைகள் தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தைக் குறைத்து பெற்றோரே குழந்தைகளிடம் கதை பேசி மகிழ்விக்கலாம். எளிய விஷயம்தானே என இதைக் கடந்து சென்றுவிடக் கூடாது!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in