ஓய்ந்திருக்கலாகும் பாப்பா!
தமிழ்நாட்டில் அரசு, தனியார், சிபிஎஸ்இ, மெட்ரிகுலேஷன் என அனைத்து வகைப் பள்ளிகளுக்குமான ஆண்டுத் தேர்வுகள் நிறைவுபெற்று, கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆண்டு விடுமுறை என்பது அந்தந்த மாநிலத்தின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்பக் கோடைமழை, பனிக்காலம் எனப் பகுத்தறிந்து திட்டமிடப்படுகிறது.
போதிய இடைவெளியில் வார இறுதி, பருவ முடிவு விடுமுறைகளும் இதை ஒட்டியே கணக்கிடப்பட்டு அளிக்கப்படுகின்றன. மாணவர்களின் நோக்கம், கல்வி என்ற குறிப்பிட்ட அடைவு சார்ந்து குவியும்போது, மனதில் ஏற்படும் சுமையைக் குறைப்பதற்காக அவர்களுக்கு ஓர் இடைவெளி தேவைப்படுகிறது. ஆனால், இன்றைய அவசர யுகத்தில் பள்ளி மாணவர்கள் பலருக்கு இந்த இடைவெளி மறுக்கப்படுவதுதான் வேதனையளிக்கிறது.
‘கற்றதை மறப்பது’ (unlearning process) என்பது மாணவர்களின் கற்றல் நடைமுறையில் மிக முக்கியமானது எனக் கல்வி உளவியலாளர்கள் கூறுகின்றனர். ஒரு நிலைக்கு மேல் நமது நினைவாற்றல் குறிப்பிட்ட விஷயங்களை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு, மற்றவற்றை ஒதுக்கித் தள்ளிவிடும். இது நடைபெற்றால்தான் மீண்டும் புதிதாக நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். இது இயல்பாக நடைபெறக்கூடிய ஒன்று. ஆண்டு விடுமுறை அளிப்பது என்பது மாணவர்கள் தாங்கள் ஏற்கெனவே கற்ற விஷயங்களை மறந்து நினைவாற்றலைப் புதுப்பித்துக்கொள்வதற்கான பயிற்சி.
ஆனால், நடைமுறையில் கோடை விடுமுறை வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பல்வேறு திறன்களைக் கொண்டவர்களாக ஆக்க விரும்புவது இயற்கை. இதனால்தான் இசை, நடனம், ஓவியம், தற்காப்புக் கலை, நீச்சல் எனப் பல்வேறு கோடைப் பயிற்சி முகாம்களில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்துவிடுகின்றனர். இந்த முகாம்கள் புதிய திறன்களைக் கற்றுத்தந்தாலும் விடுமுறையிலும் பள்ளிக்குச் செல்லும் உணர்வையே குழந்தைகளுக்கு ஏற்படுத்துகின்றன.
பல்வேறு பள்ளிகளில் ஆண்டுத் தேர்வு முடிந்ததும், விடுமுறை நாள்களுக்கெனத் திட்டமிட்டு வேலைத் திட்டத்தை (assignment) மாணவர்களுக்கு வழங்கியே வீட்டுக்கு அனுப்புகின்றனர். சில பள்ளிகள் அப்படி வழங்காமல் இருந்தாலும், பெற்றோர்கள் அதை வலியுறுத்திக் கேட்பதும் உண்டு. இது மாணவர்களுக்குப் பெரும் மனச்சுமையை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக, 10ஆம் வகுப்பு, 2 மாணவர்களுக்குக் கோடை விடுமுறை கிடையாது என்பதுதான் யதார்த்தம். உயர்வகுப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகளும் அதற்கான தயாரிப்பும் விடுமுறையை அபகரித்துவிடுகின்றன. பெரும்பாலான வீடுகளில் பெற்றோர் இருவரும் பணிக்குச் செல்வதால், தங்கள் குழந்தைகளை வீட்டில் தனியே விடாமல் பாதுகாப்பாக இருப்பதற்காகவாவது ஏதேனும் ஒரு கோடை முகாம் அல்லது சிறப்பு வகுப்பில் சேர்த்துவிடுகின்றனர்.
மேலும், படிப்பு வீணாகிவிடும் என்று உறவினர் இல்லங்களுக்குக்கூடத் தங்கள் குழந்தைகளைப் பெற்றோர்கள் அழைத்துச் செல்வதில்லை. இதனால் குழந்தைகளுக்குத் தங்கள் உறவினர்கள் யார் என்பதே தெரிவதில்லை.
கல்வி உளவியலாளர்கள் சொல்வதுபோல விடுமுறை என்பது மாணவர்களின் அடுத்த ஆண்டு கற்றலை வலுப்படுத்தும் என்பதைப் பெற்றோர்களும் கல்வி நிறுவனங்களும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். முழுமையான ஓய்வுதரும் விடுமுறை என்பது குழந்தைகளின் உடலுக்கும் மனதுக்கும் மிகவும் அவசியம் என்பதை நாம் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
- தொடர்புக்கு: kmasnagai@gmail.com
