டெங்கு காய்ச்சல்: கடமை தவறுகிறதா தமிழக அரசு?

டெங்கு காய்ச்சல்: கடமை தவறுகிறதா தமிழக அரசு?
Updated on
3 min read

மிழகத்தில் டெங்கு காய்ச்சல் மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், டெங்கு பரவலைத் தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தரமான சிகிச்சை வழங்குவதற்கும் இயலாமல் அரசு திணறிவருகிறது. உண்மையில், இதுபோன்ற சூழல்கள் ஏற்படுவதன் பின்னணியில் அரசின் அலட்சியம் இருப்பதுதான் வேதனையளிக்கும் விஷயம். மக்களின் ஆரோக்கியத்தில், உடல்நலனில் அரசுக்கு எந்த அளவுக்கு அக்கறை இருக்கிறது என்று பார்ப்போம்.

உலகிலேயே மக்கள் நல்வாழ்வுத் துறைக்குப் பொதுநிதியைக் குறைவாக ஒதுக்கும் நாடு இந்தியா. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.4%தான் மத்திய – மாநில அரசுகள் மக்கள் நல்வாழ்வுத் துறைக்காக ஒதுக்குகின்றன. உலக சராசரி 6.0 %. ரஷ்யா 3.7%, சீனா 3.1%, தென் ஆப்பிரிக்கா 4.2%, இலங்கை 2.0% தாய்லாந்து 3.2% ஒதுக்குகின்றன. இந்தியாவில் தனிநபருக்கு ஒரு ஆண்டுக்கு மருத்துவத்துக்கு ஒதுக்கப்படும் நிதி வெறும் ரூ.957 மட்டுமே. இதில் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே மத்திய அரசு ஒதுக்குகிறது.

இந்தியாவில் 83% பேருக்கு மருத்துவக் காப்பீடும் இல்லை. ஒவ்வொரு குடிமகனும் தனது மருத்துவ சிகிச்சைக்கு ஆகும் செலவில் 80%-க்கும் மேற்பட்டத் தொகையைத் தனது சொந்தப் பணத்திலிருந்துதான் செலவுசெய்கிறார். கிராமப்புறங்களில் 25% குடும்பங்கள் கடனையே நம்பியுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவக் கட்டணங்களும் பல மடங்கு அதிகரித்துள்ளன. உள்நோயாளிகளுக்கான செலவு 300%-ம், வெளிநோயாளிகளுக்கான செலவு 100%-ம் அதிகரித்துள்ளன. மருத்துவச் செலவுகளால் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி இந்தியர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் தள்ளப்பட்டார்கள். அது இப்பொழுது 6 கோடியாக அதிகரித்திருக்கிறது. 57% நகர்ப்புற மக்களும், 68% கிராமப்புற மக்களும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவதில்லை. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பமும் தனது குடும்பச் செலவில் 6%-ஐ மருத்துவ சிகிச்சைகளுக்காகச் செலவு செய்கிறது.

உலகிலேயே மிகவும் தனியார் மயமாக்கப்பட்ட மருத்துவத் துறையும் இந்தியாவில்தான் உள்ளது. நாடு சுதந்திரம் அடைந்தபோது தனியார் மருத்துவ நிறுவனங்களின் எண்ணிக்கை 8%தான். தற்பொழுது அது 80%-ஐத் தாண்டிவிட்டது. போதாக்குறைக்கு, 2015-ல் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை 20% குறைத்துவிட்டது மத்திய அரசு. மருத்துவ ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீடும் 25% குறைக்கப்பட்டிருக்கிறது.

உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி. மருத்துவமனையில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 290 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தது, குஜராத்தில் பன்றிக்காய்ச்சலால் 340 பேர் இந்த ஆண்டு உயிரிழந்தது, தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு ஒவ்வொரு நாளும் பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வது ஆகியவற்றை இந்தப் பின்னணியில்தான் பார்க்க வேண்டும்.

2011-12-ல் கொசு உள்ளிட்ட பூச்சிகளால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ. 7.64 கோடியை ஒதுக்கியது. அதில் வெறும் ரூ.3.41 கோடியைத்தான் செலவுசெய்தது தமிழக அரசு. அதே ஆண்டில் தமிழகத்தில் 2,501 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். ஒன்பது பேர் இறந்தனர். 20,000-க்கும் மேற்பட்டோர் மலேரியாவால் பாதிக்கப்பட்டனர்.

அதே போல், 2012-13-ல் ரூ 9.08 கோடி மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது. அதில் தமிழக அரசு 1.26 கோடியை மட்டும்தான் செலவு செய்தது. ஆனால் அதே 2012-ல் தமிழகத்தில் 9,249 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர், 60 பேர் இறந்தனர். சிக்குன்குனியாவால் 5,018 பேரும், மலேரியாவால் 18,869 பேரும் பாதிக்கப்பட்டனர். இந்தச் சூழலில் டெங்கு விஷயத்தில் எப்படி தமிழக அரசிடமிருந்து காத்திரமான நடவடிக்கைகளை எதிர்பார்க்க முடியும்?

டெங்குவைப் பற்றிய ஆய்விலும் நமது அரசுகள் கவனம் செலுத்தவில்லை. 1955-ல் மூன்று நாடுகளில் மட்டுமே இருந்த டெங்கு, இன்றைக்கு 125-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் இதன் பரவல் 30 மடங்கு அதிகரித்துள்ளது. புவி வெப்பமயமாதல், நகர்மயமாதல், உலகளாவியப் போக்குவரத்து அதிகரிப்பு, இதற்குக் காரணம். உலக அளவில் டெங்கு தடுப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சீனாவில், மலட்டுத்தன்மைவாய்ந்த ஆண் கொசுக்கள் மூலம் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது. அமெரிக்காவில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாத மருந்துகள் கொசு ஒழிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. கியூபாவில் டெங்கு தடுப்பை ஒரு மக்கள் இயக்கமாகவே ஃபிடல் காஸ்ட்ரோ மாற்றினார். வியட்நாமில் கொசுவால் பரவும் நோய்களைத் தடுப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் டெங்கு கட்டுப்படுத்தப்பட்டது.

நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? நிலவேம்புக் குடிநீர் வழங்கிவிட்டால் போதுமா? நிலவேம்புக் குடிநீர் டெங்குப் பரவலைத் தடுக்கிறதா என்பதை ஆராய்வது அவசியம். நிலவேம்புக் குடிநீரை சர்வரோக நிவாரணியாக மாற்றி, அதை வழங்குவதையே பெரிய கடமையாகப் பூதாகரமாக மாற்றிப் பிரச்சினையைத் திசைதிருப்பக் கூடாது.

2015 முதல் பிரேசில், மெக்ஸிகோ, வெனிசுலா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 18 நாடுகளில் டெங்குக்கான தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்சில் தேசியத் தடுப்பூசித் திட்டத்திலேயே டெங்குக்கான தடுப்பூசி சேர்க்கப்பட்டுள்ளது. டெங்வேக்சியா (DengVaxia) என்ற இத்தடுப்பூசி இந்தியாவிலும் லூதியானா, பெங்களூரு, கொல்கத்தா போன்ற நகரங்களில் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. இத்தடுப்பூசியை டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் பயன்படுத்த உலக நல நிறுவனமும் அறிவுறுத்தியுள்ளது. எனவே, இத்தடுப்பூசியைப் பயன்படுத்துவது குறித்து மத்திய - மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்.

ஏடிஸ் கொசுக்களின் இனவிருத்தியில் மூன்றில் இரண்டு பங்கு வீடுகளின் உள்ளே சேமித்து வைத்துள்ள தண்ணீர் மூலமாகவே நடைபெறுகிறது. கடும் குடிநீர்த் தட்டுப்பாடே தண்ணீரைச் சேகரித்து வைக்கக் காரணமாகிறது. இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வுகாண்பது கொசு ஒழிப்புக்கு வழிவகுக்கும். ஏழைக் குடும்பங்களுக்கு, மூடியுடன் கூடிய தண்ணீர் கேன்களை வழங்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தி, தரமான இலவச சிகிச்சையை வழங்க வேண்டும். காலை நேரத்தில் உள்ளது போல் மாலை 4.00 மணிமுதல் இரவு 9.00 மணி வரை மாலை நேர வெளிநோயாளிகள் பிரிவை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செயல்படுத்த வேண்டும். இதற்காகத் தனியாகத் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களை நியமிக்க வேண்டும். தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்க வேண்டும். ஆடம்பர விழாக்களுக்காகச் செலவு செய்ய முடிந்த அரசால் இதைச் செய்ய முடியாதா?

மருத்துவரீதியான நெருக்கடிநிலையைப் பிரகடனம் செய்யலாம் எனும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது. ராணுவ மருத்துவக் குழுக்களை வரவழைக்க வேண்டும். அரசுத் துறைகளிடையே டெங்குத் தடுப்பு நடவடிக்கைகளில் ஒருங்கிணைப்பை உருவாக்க வேண்டும். டெங்கு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் மட்டுமே டெங்கு பாதிப்பிலிருந்து மக்களை விடுவிக்க முடியும்.

- டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், பொதுச் செயலாளர்,

சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம்.

தொடர்புக்கு: daseindia@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in