அஞ்சல் தொழிற்சங்க அங்கீகாரம் ரத்து: அடிப்படைக் காரணம் என்ன?
அஞ்சல் துறையில் தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம் (NFPE), அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் (AIPEU) ஆகிய இரண்டு சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்துசெய்திருக்கிறது மத்திய அரசு. அதற்கு மூன்று காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் போராடிய விவசாயிகளுக்கு, இந்தச் சங்கங்கள் நிதி வழங்கியது முதல் காரணம். அதாவது, அந்தப் போராட்டத்தின் விளைவாக, வேளாண் சட்டங்களை நிறுத்திவைத்த அரசு, நிதி வழங்கிய அமைப்பின் அங்கீகாரத்தை ரத்துசெய்திருக்கிறது.
இரண்டாவது காரணம், சிஐடியு சங்கத்துக்கு இந்த இரு சங்கங்கள் நிதி அளித்தது. அது விளக்கப்பட்டுவிட்டது: அதாவது, உலகத் தொழிலாளர் சம்மேளனத்துக்கான கட்டணத்தைத்தான் சிஐடியு மூலம் செலுத்தியுள்ளனர். பாரதிய அஞ்சல் தொழிலாளர் சங்கமும் அப்படியான கட்டணம் செலுத்தியுள்ளது.
ஆனால், அந்தச் சங்கத்தின்மீது நடவடிக்கை இல்லை. மூன்றாவது காரணம், மார்க்சிஸ்ட் கட்சிக்கு ரூ.4,950 அனுப்பியது. கரோனா காலத்தில் நூல் நிலையத்திலிருந்து புத்தகங்களைப் பெற்றுக்கொண்ட வகையில், நேரே செல்ல இயலாமல் அனுப்பி வைத்த சொற்பத் தொகை அது.
ஆளும் கட்சி சார்பான பாரதிய அஞ்சல் தொழிலாளர் அமைப்பை வலுப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கையாகத்தான் இதை அணுக முடியும். கூடவே, இந்தச் சங்கங்கள் மத்திய ஆட்சியாளர்களது கொள்கைகளை விமர்சிப்பது மட்டுமின்றி, அகில இந்திய அளவில் எதிர்ப்பு இயக்கங்களில் பங்கேற்பதும் அரசை உறுத்தியிருக்கிறது.
அங்கீகாரம் ரத்து என்பது, சங்கத் தலைமைகளைக் கடந்து அவற்றின் உறுப்பினர்களுக்கு அரசு விடுக்கும் எச்சரிக்கை. ‘பத்திரமான இடத்தைத் தேடிக்கொள்ளுங்கள்’ என்ற மறைமுகக் குறிப்பு அது. சோவியத் ஒன்றியம் தகர்ந்துபோன பிறகு, சில தேசிய ஏடுகள், குறிப்பாக, பொருளாதார தினசரிப் பத்திரிகைகள், ‘தொழிற்சங்கங்கள் தனியார்மயத்தை எதிர்த்துப் போராடக் கூடாது’ என்று வலியுறுத்திவந்தன.
தொழிலாளர்கள் தங்களது எஜமானர்கள் குறித்துக் கேள்வி கேட்கும் அதிகாரம் படைத்தவர்கள் அல்ல; யார் ஏவலுக்கும் அடிபணிய வேண்டியதுதான் அவர்களது கடமை என்றும் பத்திரிகைகள் கருத்து தெரிவித்ததுண்டு.
சொல்லப்போனால், தொழிற்சங்கத் தொடக்க காலத்திலேயே அதன் நிறுவனத் தலைவர்கள் கடுமையாகப் பழிவாங்கப்பட்டனர். நேரடித் தாக்குதலுக்கு உள்ளாகினர். வேலைநீக்கம் செய்யப்பட்டனர். காலனியாதிக்க காலத்தில் சென்னையில் 1918இல் உருவாக்கப்பட்டதுதான், இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான சென்னைத் தொழிலாளர் சங்கம் (Madras Labour Union).
பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு எதிரான சதியாகத்தான் அது கருதப்பட்டது. புகழ்பெற்ற பி அண்டு சி மில்லில் வேலைநிறுத்தம் நடத்திய ‘குற்ற’த்துக்காக வழக்கைச் சந்திக்க வேண்டிவந்த சங்கத் தலைவர்கள், நிர்வாகத்துக்குப் பெருந்தொகை நஷ்ட ஈடு செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட சவால்களை எல்லாம் எதிர்கொண்டனர். தொழிற்சங்கத் தலைவர்கள் தேச விரோத சக்திகள் என்ற அபாண்டமான பழி, தொடக்க காலத்திலேயே புனையப்பட்ட பெரும்பொய்களில் ஒன்றாகும்.
அங்கீகாரம் ரத்து என்பது குறிப்பிட்ட சங்கங்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது அல்ல. ஜனநாயக வெளி இன்னும் சுருங்குவதைக் காட்டும் அறிகுறி அது. தங்களுக்கும் அதன் மூலம் பாதிப்புகள் ஏற்படும் என்பதை மக்கள் உணர்ந்துகொள்வது அவசியம்.
- தொடர்புக்கு: sv.venu@gmail.com
