சிந்தனை வெளியைக் காட்டும் சாளரங்கள் - 2 | ரெனே தெகார்த்: சிந்தனையே சுயமா?

சிந்தனை வெளியைக் காட்டும் சாளரங்கள் - 2 | ரெனே தெகார்த்: சிந்தனையே சுயமா?
Updated on
3 min read

ரெனே தெகார்த் (Rene Descartes 1596 – 1650) ஃபிரெஞ்சு தத்துவவாதி, கணித அறிஞர், அறிவியலாளர்; போர் வீரராகவும் வாழ்ந்துள்ளார். மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய மிகச் சிறிய நூல் என்றால், இவர் எழுதிய ‘Meditations on First Philosophy’ (1641) என்ற நூலைத்தான் கூற வேண்டும்.

இந்நூல், வாசிக்கும் யார் மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவல்லது என்பது மட்டுமல்ல, மானுடச் சிந்தனையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் காட்டியதும் ஆகும். நவீன காலம் (Modernity) என்பதன் தத்துவ அடிப்படைகளில் முக்கியமானது தெகார்த்தின் நூல்.

இந்த நூலின் தாக்கம் நன்மை பயத்ததா, தீமை பயத்ததா என்பது மிகப்பெரிய விவாதம். உதாரணமாக, இருபதாம் நூற்றாண்டு ஜெர்மானியத் தத்துவ அறிஞர் மார்டின் ஹைடெக்கர் (1889 – 1976), தெகார்த் மேற்கத்தியத் தத்துவ மரபின் ஆகப்பெரிய வீழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.

சமகால தத்துவச் சிந்தனைப் போக்குகள்பெரும்பாலும் தெகார்த்தின் தாக்கத்தை எதிர்மறையாகவே கணிக்கின்றன எனலாம். ஆனால், அது ஏன் என்பதைப் புரிந்துகொள்ள தெகார்த்தின் முக்கிய இடையீடு என்ன என்பதை நாம் சுருக்கமாகத் தெரிந்துகொள்வது பயன்படும்.

‘சிந்திக்கிறேன், எனவே இருக்கிறேன்’: தெகார்த் என்ற பெயரை அறிந்த பலரும் அறிந்திருக்கக்கூடிய ஆப்த வாக்கியம், ‘சிந்திக்கிறேன், எனவே இருக்கிறேன்’ என்பதாகும். லத்தீனில், ‘Cogito ergo Sum’ என்றும் ஆங்கிலத்தில் ‘I think, therefore I exist’ என்றும் வழங்கப்படும் வாக்கியம் இது.

சாதாரணமாகப் படிக்கும்போது இது ஏதோ சிந்தனையின் சிறப்பை எடுத்துச் சொல்வதுபோலப் புரிந்துகொள்ளப்படலாம். ஆனால், தத்துவத்தில் இது ஒரு தீவிரவாதக் கூற்று. ஏனெனில், இது மானுட சுயம் என்பதே நமக்குள் சிந்திக்கும் ஒன்றுதான் (Thinking thing) என்று கூறுகிறது. அதில் என்ன புதுமை அல்லது பிரச்சினை என்ற கேள்வி எழும்.

வெகுகாலமாக உடலுக்குள் இருந்து அதனை இயக்கும் சக்தியினை ஆன்மா (Soul) என்று மானுடச் சிந்தனை உருவகப்படுத்திவந்தது. ஒரு மனிதர் இறந்தவுடன் அவர் உடலிலிருந்து ஆன்மா பிரிந்து செல்கிறது என்று கருதப்பட்டது. ஆனால், ஆன்மாவுக்கு என்ன ஆகிறது என்று உறுதியாகத் தெரியாததால், அது குறித்த பல்வேறு நம்பிக்கைகளும் கற்பனைகளும் அனைத்து மானுட சமூகங்களிலும் நிலவிவந்துள்ளன.

சொர்க்கம், நரகம், மறுபிறவி எனப் பல கற்பனைகள் உண்டு. ஒருபுறம் மனித ஆன்மாவான ஜீவாத்மா, கடவுளான பரமாத்மாவின் ஒரு பகுதியா, இல்லை அதிலிருந்து பிரிந்துவிட்ட ஒன்றா என்கிற விவாதம் முக்கியமானது. மற்றொருபுறம் உணர்வுகளால் இயற்கையுடன் பிணைக்கப்பட்ட மானுடம், அதிலிருந்து வேறுபட்டதா என்ற கேள்வி. மனிதர்கள், இயற்கை (ஜடப்பிரபஞ்சம் விலங்குகள்), கடவுள் என்ற மூன்று வியக்திகளை எப்படிப் பொருத்துவது?

இருத்தலின் புதியதொரு மையப்புள்ளி: தெகார்த் இந்தச் சிக்கல்களிலிருந்து விடுபட ஒரு புதிய இருத்தலின் மையப்புள்ளியை உருவாக்க நினைத்தார். அந்த மையப்புள்ளி ஐயத்துக்கு அப்பாற்பட்ட, சர்வ நிச்சயமாக நாம் அறியக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும் என்று கருதினார். அதைக் கண்டடையவே அவர் ‘முதல் தத்துவ தியானம்’ (Meditations on First Philosophy) எழுதினார். அதற்கு அவர் கையாண்ட முறையியல் சுவாரசியமானதும் எளிமையானதுமாகும். மிகவும் சுருக்கமாகக் காண்போம்.

அவர் எப்படித் தொடங்கினார் என்றால், சர்வ நிச்சயமாக நாம் அறியக்கூடிய மையப்புள்ளி ஒரு பேச்சுக்குக்கூட ஐயப்பட முடியாததாக இருக்க வேண்டும் என்று முடிவுசெய்தார். உதாரணமாக, அவர் அமர்ந்திருக்கும் அறை அவருக்குப் புலனாகிறது. அது சர்வ நிச்சயமானதா? கனவில்கூட அப்படி ஓர் அறையை அவர் காணலாம். அது உண்மைபோலவே இருக்கும். ஆனால், விழித்தெழுந்து பார்த்தால் இருக்காது. எனவே, அறையோ, புலன்கள் காட்டும் புறவுலகமோ ஐயப்படவே முடியாத சர்வ நிச்சயம் என்று கூற முடியாது.

அடுத்து, அவரது உடல் இருக்கிறது. அது பல்வேறு உணர்வுகளைத் தருகிறது. ஆனால் பாருங்கள், போரில் தன் கையை இழந்த வீரனுக்கு, இல்லாத அந்தக் கையில் அரிப்பதுபோல உணர்வு ஏற்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் ‘பேய் அவயம்’ (Ghost Limb) என்பார்கள். அதனை வைத்துப் பார்த்தால், உடல் தரும் உணர்வுகள் எல்லாம் ஐயத்துக்கு அப்பாற்பட்ட சர்வ நிச்சயம் என்று கூற முடியாது அல்லவா?

ஒட்டுமொத்தப் புறவுலகமும் சரி, உடலும் சரி ஐயத்துக்கு அப்பாற்பட்டவை அல்ல என்றாகிவிட்டது. ஒன்று மட்டும் மீதமிருக்கிறது. அது என்ன? தெகார்த் சந்தேகிக்கிறார் என்பதையே சந்தேகிக்க முடியாது அல்லவா? அவர் சந்தேகிக்கிறார் என்றால் சிந்திக்கிறார்தானே? அதுதான் சர்வ நிச்சயமையப்புள்ளி. ‘நான் சிந்திக்கிறேன், அதனால் இருக்கிறேன்’.

புதிய இருமைவாதம்: சிந்திக்கும் சுயமும் மற்றவையும்: சிந்திக்கும் ஒன்று (Thinking thing) என்பதே சுயம் என்ற சர்வ நிச்சய மையப்புள்ளியை நிறுவியவுடன் தெகார்த், அந்தச் சிந்தனையால் உறுதிசெய்யக்கூடிய உடலும், புற உலகும் உண்மையானவைதான் என்று கூறிவிடுகிறார். அதே போல, கடவுளையும் சிந்திக்க முடிவதால் கடவுளும் உண்மைதான்; அவரே உலகையும், அதைச் சிந்தித்து அறியும் ஆற்றலையும் படைத்தார் என்று கூறிவிடுகிறார்.

தெகார்த் தன் சிந்தனை, கடவுளுக்கான நிரூபணம் என்று கூறினாலும், மானுடச் சிந்தனை மூலமாகத்தான் கடவுளின் இருப்பும் உறுதிப்படுகிறது என்பது இறைமுதல்வாத நோக்குக்கு உகந்ததாகக் கருதப்படவில்லை. அவர் தனி மனிதச் சிந்திக்கும் ஆற்றலைச் சர்வ நிச்சய மையப்புள்ளியாக மாற்றியதில் இரண்டு விதமான தாக்கங்கள் ஏற்பட்டன: ஒன்று, அது கடவுள், அரசன் ஆகிய இரண்டு மையப்புள்ளிகளையும் நகர்த்தி, தனி மனிதனை அரியணையில் ஏற்றியது.

இரண்டு, இயற்கையின் மீதான சர்வாதிகாரத்தை அறிவியலுக்கு வழங்கியது. இருப்பின் தோற்றவியல் (Ontology) சார்ந்த கேள்விகளை அறிவுத்தோற்றவியல் (Epistemology) சார்ந்த கேள்விகளால் பதிலீடு செய்தது.புலனுணர்வை (Sensibility), புரிந்துணர்வுக்கு (Intelligibility) கீழ்ப்படிந்த தாக மாற்றிவிட்டது.

- பேராசிரியர், ‘மானுட யத்தனம் என்றால் என்ன?’ நூலாசிரியர்; தொடர்புக்கு: rajankurai@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in