

சிந்துவெளிப் பண்பாட்டுக்கும், சங்க இலக்கியம் அகழாய்வுத் தடயங்கள் மூலம் புலனாகும் பழந்தமிழர் வாழ்க்கைக்கும் இடையிலான வேர்நிலைத் தொடர்பைப் புதிய ஆதாரங்களின் வெளிச்சத்தில் ஆராய்ந்து வருபவர் ஆர்.பாலகிருஷ்ணன்.
இந்தியக் குடிமைப் பணித் தேர்வுகளைத் தமிழிலேயே எழுதி வென்ற முதல் தேர்வர் இவர். தனது 35 ஆண்டுக் கால அரசுப் பணி வாழ்வில் ஒடிஷாவின் தலைமைச் செயலாளர் வரை பல்வேறு நிர்வாகப் பதவிகளில் முத்திரை பதித்தவர்; ஓய்வுக்குப் பிறகு, தற்போது ஒடிஷாவின் சிறப்புத் தலைமை ஆலோசகராகச் செயல்பட்டுவருகிறார். இவரது ஆய்வுப் பயணம், 1988இல் ஒடிஷாவில் ஒரு மைல்கல்லில் ‘தமிளி’ என்றொரு கிராமத்தின் பெயரைப் பார்த்ததிலிருந்து தொடங்கியது. இவரது ஆய்வு முடிவுகளைப் பார்த்த ஐராவதம் மகாதேவன்தான் சிந்துவெளி சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட வைத்தார். விளைவு: ‘Journey of a Civilization: Indus to Vaigai’ ஆங்கில நூல். இந்த நூல் வெளியாகி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் தமிழ் வடிவம், ‘ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை’ வெளியாகியுள்ளது. இது குறித்து பாலகிருஷ்ணனுடன் மேற்கொண்ட நேர்காணல்:
‘ஒரு பண்பாட்டின் பயணம்’ முதலில் ஆங்கிலத்தில் வெளியானது ஏன்?
என்னுடைய 31 ஆண்டுத் தொடர் பயணத்தின் விளைவுதான், ‘Journey of a Civilization’ நூல். சிந்துவெளிக்கும் தமிழ் அல்லது திராவிடப் பண்பாட்டுக்கும் இடையிலான உறவைப் பேசும் இந்நூல், சங்க இலக்கியத் தரவுகளின் வெளிச்சத்தில் சிந்து நாகரிகம், தமிழர் நாகரிகம்தான் என்கிற கருதுகோளை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வுகளைத் தீவிரப்படுத்த வலியுறுத்துகிறது. தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் என்னால் எளிதாக இயங்க முடியும். என்றாலும், தமிழுக்கு முன்பாக ஆங்கிலத்தில் கொண்டுவந்தது ஒரு திட்டமிட்ட செயல்தான். இரண்டு முக்கியக் காரணங்கள்: ஒன்று, நூலின் உள்ளடக்கம் கோரும் ஆய்வின் நுட்பம் சார்ந்த அணுகுமுறையைக் கட்டமைப்பதற்குத் தமிழைவிட ஆங்கிலத்தில் மேம்பட்ட வசதிகளும் கருவிகளும் [research methodology, research tools, publication tools, map making, index, bibliography] உண்டு. இரண்டு, இந்த விஷயம் முதலில் ஒட்டுமொத்த உலகுக்கும் சென்றடைய வேண்டும்.
சிந்துவெளி கண்டறியப்பட்ட நூற்றாண்டை ஒட்டியும் கீழடி அகழாய்வுகளின் வெளிச்சக் கீற்றுகளின் பின்னணியிலும் ‘ஒரு பண்பாட்டின் பயணம்’ வெளியாகியிருக்கிறது. நூலின் தமிழ் வடிவம் உருவான விதம் பற்றிப் பகிர்ந்துகொள்ள முடியுமா...
இந்த நூல் வரிக்கு வரி மொழிபெயர்ப்பு அல்ல. இந்த நூலை மீண்டும் தமிழில் எழுதியிருக்கிறேன்; மறுஆக்கம் செய்திருக்கிறேன். ஆங்கில நூலின் வெளியீட்டுக்குப் பிறகு, கரோனா பெருந்தொற்று தொடங்கிவிட்டது. பொதுமுடக்கக் காலகட்டத்தில் எங்கும் செல்ல முடியாத சூழலில், அலுவல் பணிகளும் எனது தனிப்பட்ட கூட்டங்கள், உரைகளும் காணொளி மூலமாகவே நடந்தேறின. ‘ஒரு பண்பாட்டின் பயண’மும் காணொளி மூலமாகத்தான் மொழிபெயர்க்கப்பட்டது! ஆம், நானும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தைச் சேர்ந்த ரஞ்சித் ரூஸோவும் ‘ஸூம்’ செயலி வழியாக இணைவோம். ஆங்கில நூலின் அத்தியாயங்களைப் படித்து, நான் தமிழில் சொல்லச் சொல்ல, அவர் அதைத் தட்டச்சு செய்துகொண்டே வருவார். அது எனக்கு ‘கூகுள் டிரைவ்’-இல் பகிரப்படும். பணி, பயணங்களுக்கு இடையே கிடைக்கும் நேரத்தில் நான் அதைப் பார்த்துத் திருத்தி இறுதிசெய்வேன். இப்படித்தான் ‘ஒரு பண்பாட்டின் பயணம்’ தமிழில் உருவானது.
அலுவல் கூட்டங்கள், உரைகள், நூல் பணி என இடைவெளி இல்லாமல் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்ததால், எனக்குக் குரல்வளையில் ஒரு அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு மூன்று மாதங்கள் பேசாமல் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டேன். என்னுடைய குரல் திரும்பக் கிடைக்குமா என்கிற அச்சம் எனக்கு இருந்தது. 80-90% வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் நம்பிக்கையளித்தார்கள். நல்வாய்ப்பாக பழைய நிலை திரும்பிவிட்டது.
ஆங்கில நூலுக்கு வந்த பின்னூட்டங்கள் தமிழ் நூலின் உருவாக்கத்துக்கு எவ்வகைகளில் எல்லாம் பங்களித்தன?
சிந்துவெளி கண்டறிதலுக்கு வயது நூறு என்றால், அது பற்றிய விவாதங்களுக்கும் அரசியலுக்கும் வயது நூறு. சிந்துவெளியின் அறிவிப்பும், அது தொடர்பான அரசியலும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள். எனவே, என்னுடைய ஆய்வு முதலில் ஆங்கிலத்தில் வெளியாகும்போது, தமிழ் ஆர்வலர்களைத் தாண்டி பன்னாட்டுச் சமூகத்தின் கவனத்துக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதால், அவர்கள் இதை எப்படி அணுகுகிறார்கள், என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய முடியும். பல நூல் மதிப்புரைகள் வெளியாகின. குறிப்பாக, டோனி ஜோசப் ‘தி இந்து’ நாளிதழிலும், ஒமர்கான் ‘ஹரப்பா.காம்’இல் எழுதியதும், ‘ராயல் ஏசியாடிக் சொசைட்டி’யிலும், ‘அவுட்லுக்’கிலும், ‘பிரண்ட்லை’னிலும் வெளியானவை முக்கியமானவை. ஏற்கெனவே இருக்கும் கருதுகோளை, இதுவரை முன்வைக்கப்படாத தரவுகளைக் கொண்டு மேலும் நம்பகத்தன்மை நோக்கி நகர்த்தும் ‘ஒரு பண்பாட்டின் பயணம்’, சங்க இலக்கியத்தை ஒரு வரலாற்று ஆவணமாக முன்வைக்கிறது. ஆனால், இந்தச் செய்திகளை மறுதலிக்கும் ஆய்வுரீதியான மறுப்புகளோ எதிர்வினைகளோ வரவில்லை என்பது இந்த நூலின் தரவுசார்ந்த அணுகுமுறைக்குச் சான்றாகும். வரலாறு என்பது உறைபனி அல்ல. ஓடும் நதி. புதிய செய்திகளின் வெளிச்சத்தில் இன்றைய உண்மை எதிர்காலத்தில் மறுபரிசீலனைக்கு உள்ளாகக்கூடும். அந்த வகையில், ஆய்வு என்பது ஒரு தொடர் பயணம்.
சிந்துவெளியின் புரியாத பக்கங்களுக்குச் சங்க இலக்கியத்தில் விடை இருக்கிறது. சங்க இலக்கியத்தில் பேசப்படும் விஷயங்களுக்குத் தொல்லியல் ஆதாரங்கள் சிந்துவெளியில் இருக்கின்றன. இதை ஆய்வுரீதியாக யாரேனும் மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பு. இவையெல்லாம் எனக்கு ஊக்கமளித்தன; தமிழ்ப் பதிப்பின் உருவாக்கத்தில் பங்களித்தன.