

தமிழ் இலக்கியத்தின் தீவிரமான செயற்பாட்டாளர் வே.மு.பொதியவெற்பன். படைப்பாளராக, திறனாய்வாளராக, சிற்றிதழ் ஆசிரியராக, பதிப்பாளராக, புத்தகக் கடைக்காரராகப் பன்முகங்கொண்டு இலக்கியத்துக்கும் அரசியலுக்கும் பணிசெய்தவர். தமிழ்நாடு முற்போக்குக் கலைஞர் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றியவர்.
கும்பகோணத்தில் இடைநிலை வகுப்பு படித்த காலகட்டத்தில் ‘விடுதலை’ இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்த சா.கு.சம்பந்தன் அறிமுகத்தால் தமிழ் மாணவர் கழகம் என்னும் திராவிட இயக்க அமைப்பில் இணைந்து செயல்பட்டவர் பொதி. பகுத்தறிவுக் கருத்துகளைப் பறைசாற்ற வெளிவந்த ‘குத்தூசி’ இதழின் ஆசிரியரான குருசாமியின் கருத்தின்பேரில் சண்முகசுந்தர நேதாஜி என்கிற தன் இயற்பெயரை வே.மு.பொதியவெற்பன் என மாற்றிக்கொண்டார்.
கும்பகோணத்தில் ‘சிலிக்குயில் புத்தகப் பயணம்’ என்கிற பெயரில் பொதி நடத்திவந்த புத்தகக் கடை, அந்தப் பகுதியின் இலக்கிய அடையாளமாகத் திகழ்ந்தது. கவிஞர் பழமலயின் ‘சனங்களின் கதை’, எழுத்தாளரின் கே.டானியலின் ‘கானல்’ நாவல் போன்ற படைப்புகளைத் ‘தோழமை பதிப்பகம்’ வழி பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்டார் பொதி. ‘முனைவன்’, ‘பறை’ ஆகிய இரு சிற்றிதழ்களையும் பொதி கொண்டுவந்தார். இந்த இதழ்கள்வழி நல் இலக்கிய அறிமுகத்தை வாசகர்களுக்கு அளித்தார். 80களில் தொடங்கப்பட்ட புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தில் இணைந்து செயல்பட்டார். இந்தக் காலகட்டத்தில் ‘சூரியக் குளியல்’ என்கிற தலைப்பில் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார்.
தமிழ் நவீனக் கவிதையில் நிகழ்ந்த புதிய மறுமலர்ச்சி குறித்த ஞானக்கூத்தனின் விமர்சனத்தை பொதியவெற்பன் கடுமையாக விமர்சித்துள்ளார். கடுமையாக எழுதுவதால் பொதியின் கட்டுரைகள், தரந்தாழ்ந்து போவதில்லை. கல்விசார் ஆய்வுக் கட்டுரைகள்போல் சான்றுகளுடனும் கட்டுறுதியுடனும் வடிவமைக்கப்பட்டிருக்கும். இது பொதியின் தனிச் சிறப்பு. பொதியின் இன்னொரு அடையாளம் கவிதை நிகழ்த்துக் கலைஞர். தமிழில் பிரபலம் அடையாத இந்தக் கலையில் அவர் விற்பன்னர். அது தொடர்பாக ‘நிகழ்கலை அனுபவமாகும் கவிதையின் இன்னொரு பரிணாமம்’ என்கிற நூலையும் வெளியிட்டுள்ளார். ‘மணிக்கொடி’ இதழ் கலைஞர்களைப் பற்றி ‘சொல்லின் மந்திரமும் சொல் ஓய்ந்த மௌனமும்’ என்கிற நூலையும் வெளியிட்டுள்ளார்.
புதுமைப்பித்தன் கதைகள் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். அவரது கதைகளை ஆராய்ந்து ‘புதுமைப்பித்தன் கதைகள்: அகலமும் ஆழமும்’ என்கிற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளார். தமிழ்த் தீவிர இலக்கிய விமர்சன மரபைத் தன் கூர்மையான விமர்சனத்தின் வழி தகர்த்தவர் பொதி. அந்த வகையில் தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய ‘புதுமைப்பித்தன் கதைகள் சில விமர்சனங்களும் விஷமத்தனங்களும்’ நூல் எழுதப்பட பொதியும் ஒரு தூண்டுகோலாக இருந்தார். புதுமைப்பித்தன், அன்றைய தமிழ் இலக்கியப் பரப்பில் தகுதி குறைக்கப்பட்டும், நிராகரிக்கப்பட்டும் பார்க்கப்பட்ட காலத்தில், இந்த நூல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
பொதியின் கூர்மையான விமர்சனமும் இதைச் சார்ந்ததே. தீவிரத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடியாகக் கருதப்படும் க.நா.சுப்ரமண்யத்தின் விமர்சன முறையைக் கேள்விக்கு உள்ளாக்கினார் பொதி. தன் நிலைப்பாடுகளைச் சூழலுக்கு ஏற்றவாறு க.நா.சு. மாற்றிக்கொண்டதையும் பொதி சான்றுகளுடன் நிறுவியுள்ளார். அதேநேரம், புதுமைப்பித்தன் கதைகளைப் பரப்ப க.நா.சு. மேற்கொண்ட முயற்சியைக் கவனப்படுத்தவும் தவறவில்லை. வெளியே நடந்த அரசியல் மாற்றம், தீவிர இலக்கியத்தில் உள்ளே மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது பொதியின் துணிபு. தமிழின் விமர்சகர்களாக முன்மொழியப்படும் க.நா.சு., சி.சு.செல்லப்பா, வெங்கட்சாமிநாதன் ஆகியோரின் விமர்சன முறையையும் அதன் தத்துவத்தையும் தன் கட்டுரை வழி திருத்தமாக அம்பலப்படுத்தியுள்ளார் பொதி.
இலக்கியம், இன்று ஒரு லாபகரமான தொழிலாக ஆகிவருகிறது. ஆனால், பொதியவெற்பன் இலக்கியத்துக்காகவே தன் வாழ்நாளையும் செல்வத்தையும் செலவிட்டவர். இது ஓர் அருஞ்செயல்தான். அதே நேரம், இன்றும் உறுதியுடன் ‘போலிகளின் நரிமுகத்தைப்/பொய்ம்மைகளின் அறிமுகத்தைத்/தோலுரித்துக் காட்ட வந்தேன்’ எனத் தன் வரிகளுக்கேற்பக் காத்திரமான விமர்சனத்தைத் தொடர்ந்துவருகிறார் பொதியவெற்பன்.