

கர்னாடக இசை உலகில் மிருதங்கச் சக்கரவர்த்தியாக 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னுடைய மேதைமையான பங்களிப்பைச் செலுத்தியவர் காரைக்குடி மணி. அவரின் தந்தை டி.ராமநாதனே அவருக்கு முதல் குருவாக வாய்த்தது பெரும் பாக்கியம். அதன்பின், காரைக்குடி ரங்கு, டி.ஆர்.ஹரிஹரன், கே.எம்.வைத்தியநாதன் ஆகிய இசை மேதைகளிடம் தன்னுடைய மிருதங்க வாசிப்பை மணி மெருகேற்றிக்கொண்டார்.
மூத்த இசைக் கலைஞர்கள் வகுத்துக்கொடுத்த மரபுகளையும் விட்டுவிடாமல் அதேநேரம், மிருதங்கம் வாசிப்பதில் தன்னுடைய தனிப்பட்ட முத்திரையையும் பதித்து, மிருதங்க வாசிப்பில் ‘காரைக்குடி பாணி’ என்பதை இசை உலகத்தில் பரவச் செய்தார். அவரின் இளமைக் காலத்திலேயே அந்நாளில் புகழுடன் விளங்கிய எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி.கே.பட்டம்மாள், எம்.எல்.வசந்தகுமாரி, மதுரை சோமு, டி.எம்.தியாகராஜன், டி.கே.ஜெயராமன், வயலின் மேதை லால்குடி ஜெயராமன் உள்ளிட்ட பல இசை மேதைகளுக்கும் பக்கவாத்தியமாக மிருதங்கம் வாசித்திருக்கிறார். இவர்களுக்கு அடுத்த தலைமுறைக் கலைஞர்களுக்கும் இன்றைய இளம் தலைமுறையினருக்கும் காரைக்குடி மணியின் மிருதங்கம் இசை மேடைகளில் பக்கபலமாக இருந்திருக்கிறது என்பதிலேயே இவரின் இசையின் இளமையையும் வயதையும் உணர்ந்துகொள்ள முடியும்.
கர்னாடக இசைக் கச்சேரிகளில் லய வாத்தியக் கலைஞர்கள் ‘தனி’யாக (தாள வாத்தியக் கலைஞர்களின் திறனை வெளிப்படுத்தும் ஓர் அங்கம்) வாசிக்கத் தொடங்குவதையே நிகழ்ச்சிக்கான இடைவேளையாகக் கருதும் போக்கு பல ஆண்டுகளாக இருந்துவருகிறது. ஆனால், இந்த நிலையைத் தனது அலாதியான வாசிப்பினாலும் காலப்பிரமாணங்கள், வித்தியாசமான கணக்குவழக்குகளுடன் கூடிய அணுகுமுறையால் ரசனைக்குரிய அனுபவமாக மாற்றியவர் காரைக்குடி மணி.
கர்னாடக இசைக் கச்சேரிகளில் லய வாத்தியங்களில் ராஜ வாத்தியமாக மிருதங்கம் மதிக்கப்பட்டாலும், மேடையில் பாடும் குரலிசைக் கலைஞருக்குப் பக்கவாத்தியம் என்னும் நிலையிலேயே பன்னெடுங்காலமாக மிருதங்கம் இருந்தது. இந்த நிலையை மாற்றி மேடையின் முதன்மை வாத்தியமாக மிருதங்கத்தை இடம்பெறச் செய்து உப பக்கவாத்தியங்களான கடம், கஞ்சிரா, கொன்னக்கோல் ஆகியவற்றுடன் லய வாத்தியங்களை முன்னிறுத்தியே கச்சேரிகளை நடத்தியவர் காரைக்குடி மணி.
மிருதங்க வாசிப்பில் இருக்கும் லய வின்யாசம், சொற்கட்டு, வாசிக்கும் முறை போன்றவற்றில் பல ஆராய்ச்சிகளைச் செய்து அதைத் தான் ஆரம்பித்த ‘ஸ்ருதிலய கேந்திரா’ அமைப்பின் மூலம் உலகின் பல பகுதியில் இருப்பவர்களுக்கும் பரப்பினார். இதன் மூலம் உலகம் முழுவதும் காரைக்குடி மணிக்குச் சீடர்கள் இருக்கின்றனர். இன்றைக்குக் கச்சேரி மேடைகளில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் காரைக்குடி ஆர்.ரமேஷ், திருவாரூர் வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் காரைக்குடி மணியின் பெயர் சொல்லும் சீடர்கள்.
தேசிய அளவில் சிறந்த இசைக் கலைஞருக்காக வழங்கப்படும் விருதை குடியரசுத் தலைவர் எஸ்.ராதாகிருஷ்ணனிடமிருந்து பெற்றபோது, அவருக்கு வயது 18தான். 1998இல் சங்கீத நாடக அகாடமி விருதையும் அவர் பெற்றார்.
கர்னாடக இசைக்கருவியான மிருதங்கத்தின் வித்தியாசமான ஒலியைப் புகழ்பெற்ற மேற்குலக இசைப் பாடகர் பால் சைமனோடு இணைந்து கலப்பிசை (Dazzling Blue) தொகுப்பின் வழியாக எதிரொலிக்க வைத்தார். இதில் இடம்பெற்றிருக்கும் இவரின் சொற்கட்டும் அதைத் தொடரும் மிருதங்க வாசிப்பும் இன்றைக்கும் இசை ரசிகர்களுக்குச் சிம்ம சொப்பனம்தான்!