

அ
னிதாவின் மரணம் நீட்டின் விளைவு. ஆனால், நீட் மட்டுமேதான் இம்மரணத்துக்குக் காரணமா? நாம் சிந்திக்க வேண்டும். பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டமும், ஏழ்மையும் சமூகப் பொருளாதாரப் பாதுகாப்பற்ற மன நிலையை மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் ஏற்படுத்திவருகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நல்ல வருவாய் ஈட்டக்கூடிய, படிப்புகளைத் தேர்வுசெய்து படிக்க வைக்க முனைகின்றனர். இதனால் மருத்துவம், பொறியியல் படிப்புகளில் ஒரு சில பிரிவுகளுக்குக் கடும் போட்டி நிலவுகிறது. போட்டிக்கேற்ப இத்துறைகளில் அதிக இடங்கள் இல்லை. இது பிரச்சினைகளை உருவாக்குகிறது.
எந்தப் படிப்பைப் படித்தாலும் வேலைவாய்ப்பு கிடைக்கும். எந்த வேலைக்குப் போனாலும் நல்ல ஊதியம் கிடைக்கும். சமூகப் பொருளாதாரப் பாதுகாப்பு கிடைக்கும் என்ற நிலை இருந்தால், ஒரு குறிப்பிட்ட படிப்புக்கு ஏராளமானோர் போட்டியிடும் நிலை உருவாகாது.
மருத்துவப் படிப்பின்மீது மக்களுக்குப் பெரும் மோகம் உள்ளது. இந்தியாவில் மருத்துவம் தனியார் மயமானதும், வியாபாரமயமானதும், வருவாய் ஈட்டும் தொழிலாக மாறியதும், அரசுப் பணியுடன் தனியாகத் தொழில்செய்யும் வாய்ப்பும், ஓய்வுபெற்ற பின்னரும் வாழ்நாள் முழுவதும் வருவாய் ஈட்டலாம் என்ற நிலையும், அது வழங்கும் சமூக மரியாதையும், மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்ற ஆர்வத்தை அதிகரிக்கிறது. அதனால், மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காதபோது, கடும் ஏமாற்றம் ஏற்படுகிறது.
வாழ்க்கைக்குப் பல்வேறு படிப்புகளும் அவசியம் என்ற மனநிலையை நமது கல்விமுறை உருவாக்கத் தவறிவிட்டது. மருத்துவப் படிப்பு மட்டுமே மிக உயரிய படிப்பு என்ற கருத்தாக்கம், மாணவர்கள் உள்ளத்தில் ஆழமாகப் பதியவைக்கப்பட்டுள்ளது. இதனால், மருத்துவப் படிப்புக்குக் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அப்படிப்பு மிக வேகமாகத் தனியார் மயமாக்கப்படுகிறது. வியாபாரமாக்கப்படுகிறது. இது போன்று உயர் கல்வி 70%-க்கும் மேல் தனியார்மயமாகிவிட்டது. உயர் கல்வியில் சேரத் தகுதி உள்ள மாணவர்களில் 28 %-க் கும் குறைவானவர்களுக்கே உயர் கல்வி வாய்ப்பு கிட்டுகிறது.
சர்வதேச நிதி மூலதனம், உலக வங்கி போன்றவற்றின் நிர்ப்பந்தத்தால் மருத்துவமும் மருத்துவக் கல்வியும் இந்தியாவிலும் தனியார் மயமாக்கப்படுகின்றன. பெருநிறுவனமயமாகின்றன. அதற்கு உதவும் வகையிலேயே தேசிய நலக்கொள்கை-2017 மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது.
அதற்கேற்ப, மருத்துவக் கல்லூரிகளைத் தனியார் தொழில் நிறுவனங்களும் தொடங்கலாம் என இந்திய மருத்துவக் கழகம் தனது விதிமுறைகளை மாற்றியுள்ளது. தனியார் நிறுவனங்கள் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கிட, அரசு மருத்துவமனைகள் தாரைவார்க்கப்படுகின்றன. ஆந்திரத்திலும் குஜராத்திலும் இது நடக்கத் துவங்கியுள்ளது.
‘இந்திய மருத்துவக் கழக’த்தை ஒழித்துவிட்டு, அதற்குப் பதிலாக ‘தேசிய மருத்துவ ஆணையம்’ உருவாக்கப்பட உள்ளது. தற்போது மாநில அரசுகளின் கட்டண நிர்ணயக் குழுக்கள் தனியார் கல்லூரிகளின் 100% இடங்களுக்கும் கட்டணத்தை நிர்ணயிக்கின்றன. அதை ஒழித்துக்கட்டும் வேலையை மத்திய அரசு செய்துள்ளது. அதற்காக, தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில், 40 %-க்கும் குறைவான மருத்துவ இடங்களுக்கு மட்டுமே அரசால் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது, அதிர்ச்சியளிக்கிறது.
ஏற்கெனவே, தனியார் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள், கட்டணங்களைச் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். கேரளம் போன்ற மாநிலங்களில் இடங்களைத் திரும்ப ஒப்படைக்கின்றனர். நாடு முழுவதும் உள்ள தனியார் நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளில் 5,200 எம்.பி.பி.எஸ். இடங்கள் 3.09.2017 வரை காலியாக இருந்தன. ஒருபுறம், மருத்துவ இடம் கிடைக்காததால் தற்கொலை. மறுபுறம், மருத்துவ இடங்கள் காலியாக இருக்கும் நிலை. கல்விக் கட்டணம் மிக அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம். எனவே, குறைவாக உள்ள அரசு மருத்துவக் கல்வி இடங்களில் சேர, மிக அதிகமானோர் போட்டிபோடுகின்றனர். இதனால், நீட் போன்ற தேர்வுகள் புகுத்தப்பட்டு, அனிதா போன்ற மாணவர்கள் வடிகட்டப்படுகின்றனர்.
இத்தகைய காரணங்களால் கல்வி, வேலைவாய்ப்புக்குக் கடுமையான போட்டி நிலவுகிறது. உதாரணத்துக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் 200 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு 1 லட்சத்து 89 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். வேலைவாய்ப்பிலும் இதே நிலைதான். உத்தரபிரதேசத்தில் 368 அலுவலக உதவியாளர் வேலைக்கு 23 லட்சம் பேர் போட்டியிட்டனர். அதில் 255 பேர் பி.ஹெச்டி., முடித்தவர்கள். இத்தகைய நிலைமைகளே மருத்து வப் படிப்பை நோக்கி மாணவர்களைத் தள்ளுகின்றன. இந்நிலையில், மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களையும், மாநில உரிமைகளையும், கூட்டாட்சிக் கோட்பாட்டையும் பாதிக்கும் வகையில், சமூக நீதிக்கும், இட ஒதுக்கீட்டுக்கும் எதிராக, மத்திய அரசு நீட் நுழைவுத் தேர்வைப் புகுத்தி உள்ளது.
தமிழக அரசின் ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்கு, நீட்டிலிருந்து விலக்குக் கொடுக்க முடியாது என மத்திய அரசு பிடிவாதமாக இருக்கிறது. இதன் பின்னால் தேர்வுகளையே லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றும் அரசியல் உள்ளது. ஆண்டுதோறும், இந்தியாவில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு நுழைவுத் தேர்வுகளை எழுதுகின்றனர். இத்தேர்வை தனியார் பெரு நிறுவனங்களே நடத்துகின்றன. நீட் தேர்வை புரோமெட்ரிக் என்ற அமெரிக்க நிறுவனம் நடத்தியது. மாணவர்கள் செலுத்திய கட்டணம் இந்நிறுவனத்துக்குச் சென்றது. நுழைவுத் தேர்வால் வரும் வருவாய் தங்களுக்கு வேண்டிய நிறுவனங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கில்தான், நீட்டிலிருந்து விலக்கு வழங்க மத்திய அரசு மறுக்கிறது.
இந்நிறுவனங்களுக்குக் கூடுதல் வருவாய் கிடைத்திடவே, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி, சித்தா போன்ற படிப்புகளுக்கும், பொறியியல் படிப்புகளுக்கும் நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் போய் மருத்துவம் படிக்க விரும்புவர்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்கிறது. மருத்துவப் படிப்பை முடித்து, பயிற்சி மருத்துவத்தையும் முடித்த உடன் ‘நெக்ஸட்’ என்ற ‘எக்ஸிட்’ தேர்வை எழுத வேண்டும் எனக் கூறுகிறது. நீதிபதி நியமனத்துக்கும் தேர்வு கொண்டுவரப்படும் என்கிறது.
போட்டித் தேர்வுகளை நடத்துவதற்காகவே, ‘தேசிய தேர்வு முகமை’ என்ற அமைப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பின் கீழ் பன்னாட்டு நிறுவனங்களே போட்டித் தேர்வுகளை நடத்த உள்ளன. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தைப் பற்றிப் பேசும் அரசு போட்டித் தேர்வுகளை நடத்திட அமெரிக்க நிறுவனங்களைச் சார்ந்திருப்பது அவமானமல்லவா?
- ஜி.ஆர்.இரவீந்திரநாத், பொதுச் செயலாளர்,
சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம்.
தொடர்புக்கு: daseindia@gmail.com