

‘சட்டம்-ஒழுங்கு’ எனும் பதம் தமிழ்நாட்டில் வேறெந்த அரசியல் கட்சியையும்விட திமுகவால் எளிதாகப் புறந்தள்ள முடியாதது. 1990 ஜூன் மாதம் ஈழப் போராட்டத்துக்கு ஆதரவாக அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி டெல்லியில் அரசியல் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்த நேரத்தில், சென்னையில் ஈபிஆர்எல்எஃப் தலைவர் பத்மநாபா படுகொலை செய்யப்பட்டார்.
ஏற்கெனவே சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை அதிமுக, காங்கிரஸ் கட்சிகள் முன்வைத்துவந்த நிலையில், அந்தச் சம்பவத்தால் அந்தக் குற்றச்சாட்டு தீவிரமடைந்தது. 30 ஜனவரி 1991இல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டதற்கான காரணங்களில் ‘தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் செல்வாக்கு அதிகரிக்க அரசு அனுமதியளித்தது’ என்பது முக்கியமானது.
தொடரும் சவால்கள்: 1998இல் நடந்த கோவை குண்டுவெடிப்புச் சம்பவத்தை முன்வைத்து சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஜெயலலிதா எழுப்பினார். ஆனால், 1994இல் எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, மாநில அரசுகளைக் கலைப்பது அத்தனை எளிதல்ல எனும் சூழல் உருவானதால், அப்போதைய அரசுக்கு ஆபத்து நேரவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இதே போன்ற குற்றச்சாட்டுகளைத் தற்போது தொடர்ந்து முன்வைக்கிறார்.
அவ்வப்போது ஆளுநரைச் சந்திக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ஊழல் குற்றச்சாட்டுகளுடன் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாகப் புகார் பத்திரம் வாசிக்கத் தவறுவதில்லை. “தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை அறிந்தும் நான் எப்படி தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று சட்டப்பேரவையில் கூற முடியும்?” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில்கூட விமர்சித்திருக்கிறார்.
ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு விழாக்கள், பொதுநிகழ்ச்சிகள் அமைதியாக, சுமுகமாக நடைபெற்றன; சாதி, மத மோதல்கள் நடைபெறவில்லை என்றெல்லாம் சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டியிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில் காவல் துறை மிகச் சிறப்பாக இயங்குவதாகப் புகழாரம் சூட்டுகிறார். அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் குற்றச் சம்பவங்கள் குறைந்திருப்பதாகவும் பெருமிதம் தெரிவிக்கிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசுக்குச் சவால் விடும் அளவிலான சாதி, மத மோதல்கள், சட்டம் ஒழுங்குக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான போராட்டங்கள் நடைபெறவில்லை என்பது உண்மைதான். எனினும், ஆணவப் படுகொலைகள் முதல் ஆளுங்கட்சியினரின் அராஜகம்வரை விரும்பத்தகாத எத்தனையோ நிகழ்வுகள் நடந்தவண்ணம்தான் உள்ளன.
வேகம் குறைவு: 23 அக்டோபர் 2022 இல் நடந்த கோவை கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் திமுக அரசுக்கு ஒரு கரும்புள்ளி; உளவுத் துறையின் தோல்வி என்றும் சொல்லலாம். கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு இன்னமும் வேகம் பெறவில்லை.
பொள்ளாச்சி பாலியல் குற்றச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரித்துவந்தாலும், தமிழ்நாடு அரசு தொடர்ந்து கண்காணித்துவருவதாக திமுக தரப்பு சொல்லிக்கொள்கிறது. ஆனால், முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், 2023 பிப்ரவரி மாதம்தான் சாட்சி விசாரணை தொடங்கியிருக்கிறது.
சாதிக் கொடுமைகள்: ஆணவப் படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் திமுகவின் ஆட்சியிலும் அந்த அவலம் தொடர்கிறது. அதற்கு எதிராகத் தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் முதல் அமமுகவரை பல்வேறு கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. ஆனால், தற்போது இருக்கும் சட்டங்களைக் கடுமையாக அமல்படுத்தினாலே போதும் எனும் நிலைப்பாட்டில் திமுக அரசு இருப்பதாகவே தெரிகிறது.
சாதிக் கொடுமைகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க திமுக அரசு திணறுகிறது என்பதற்கு வேங்கைவயல் சம்பவம் ஓர் உதாரணம். கூலிப் படைகள் நிகழ்த்தும் கொலைகள், சமூக விரோதக் கும்பல்களுக்குள் பழிக்குப்பழியாக நடக்கும் குற்றங்களைத் தடுக்க இதுவரை காத்திரமான திட்டங்கள் எதுவும் வகுக்கப்படவில்லை. கோவை நீதிமன்ற வாயிலில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம், காவல் துறை நடவடிக்கைகள்மீதான அச்ச உணர்வு சமூக விரோதிகளிடம் இல்லை என்பதற்கான எடுத்துக்காட்டு.
விழுப்புரம் அன்பு ஜோதி இல்லத்தில் நடந்ததாகச் சொல்லப்பட்ட கொடூரங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் முறையாகக் கண்காணிப்பட வேண்டும் என்பதற்கான உதாரணமாக அமைந்தன. ஆனால், சில நாள்களிலேயே அந்த இல்லத்தின் நிர்வாகிகளுக்குப் பிணை வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான சாட்சியங்களை வழங்க விசாரணை அமைப்புகள் தவறிவிட்டதாகக் கூறியது கவனிக்கத்தக்கது.
அரசு அதிகாரிகளுக்குப் பாதுகாப்பின்மை: மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர், அவரது அலுவலகத்திலேயே வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பில்லை எனும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தங்களுக்குத் துப்பாக்கி உரிமம் வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர்கள் போராடும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது. மணல் கொள்ளையைத் தடையின்றி தொடரவும், தட்டிக்கேட்பவர்களை அச்சுறுத்தவும் கொலை செய்யவும் தயங்காத மணல் மாஃபியாக்களின் அரசியல் தொடர்புகள் குறித்த கேள்விகளும் எழுந்திருக்கின்றன.
திமுகவினரின் அத்துமீறல்: ‘திமுக ஆட்சிக்குவந்தால் வன்முறைச் சம்பவங்கள் நடக்கும்; காவல் துறையினரை அலட்சியப்படுத்தி திமுகவினரே அராஜகத்தில் ஈடுபடுவார்கள்’ என்பது அதிமுக எப்போதும் முன்வைக்கும் குற்றச்சாட்டு. கடந்த சில ஆண்டுகளாக பாஜகவும் அதை அழுத்திச் சொல்கிறது. அதற்கு முகாந்திரம் இருக்கிறதோ எனக் கருதும் வகையில் சில சம்பவங்கள் நடந்திருக்கின்றன.
திமுக ஆட்சிக்குவந்த வேகத்திலேயே அம்மா உணவகத்தின்மீது அக்கட்சித் தொண்டர்கள் இருவர் தாக்குதல் நடத்தினர். அவர்கள்மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னரும், திமுகவினரின் அத்துமீறல்கள் தொடரவே செய்கின்றன. சமீபத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள்மீது அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி காவல் நிலையத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது ஓர் உதாரணம்.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மர்மமாக மரணமடைந்த சம்பவத்தை அரசு கையாண்ட விதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வன்முறை நிகழ்வுகளுக்கும், பல்வேறு ஊகங்களுக்கும் வழிவகுத்த அந்தச் சம்பவத்தில் ஆரம்பம் முதலே வெளிப்படைத்தன்மை இல்லை.
விருத்தாசலத்தில் தனியார் பள்ளித் தாளாளராக இருந்த திமுக நிர்வாகி பக்கிரிசாமி, பள்ளிக் குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்த அவலத்தைத் தொடர்ந்து அவரைக் கட்சியிலிருந்து நீக்கியிருப்பது பாராட்டத்தக்கது. ஆனால், கட்சிப் பொறுப்புகளில் இருப்பவர்களில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து களையெடுப்பதில் ஓர் அரசியல் கட்சியாகவும் திமுகவுக்குப் பொறுப்பு இருக்கிறது.
இணையவழி சூதாட்டத்துக்கு எதிரான சட்டத்தைப் பெரும் போராட்டத்துக்குப் பின்னர் நிறைவேற்றியிருக்கிறது திமுக அரசு. எனினும், இணையவழிக் குற்றங்களைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகள் தேவை. மதுப் பழக்கத்தின் காரணமாக ஏற்படும் விபத்துகள், நிகழ்த்தப்படும் குடும்ப வன்முறைகள், கொலைகள் போன்றவற்றைத் தடுக்க மதுக்கொள்கையில் உறுதியான நிலைப்பாட்டை அரசு எடுக்க வேண்டும்.
காவல் துறை அராஜகம்: காவல் துறையை நவீனப்படுத்த கணிசமான நிதியைத் தமிழ்நாடு அரசு ஒதுக்குகிறது. எனினும், காவல் நிலையச் சித்திரவதைகள், மரணங்கள் முற்றுப்பெறவில்லை. 2022இல் சென்னை புரசைவாக்கத்தில் விக்னேஷ் என்னும் இளைஞர் காவல் துறை விசாரணையில் மரணமடைந்தது தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சிகள் பதறவைத்தன.
அதிமுக ஆட்சியில் நடந்த சாத்தான்குளம் சம்பவத்தை நினைவுபடுத்துவதைப் போல் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்களைப் பிடுங்கி சித்திரவதை செய்ததாக ஏடிஎஸ்பி பல்வீர் சிங்மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் அதிரவைப்பவை. ஐபிஎஸ் அதிகாரியான அவர்மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டிருப்பது நம்பிக்கையளிக்கிறது.
எனினும், இதுபோன்ற தருணங்களில், உடனடி நடவடிக்கை எடுக்கவும் தவறு செய்யும் அதிகாரிகளைத் தண்டிக்கவும் அரசு தயங்கக் கூடாது. ஏனெனில், சட்டம்-ஒழுங்கு என்பது சமூகத்தில் அமைதி நிலவ காவல் துறை நடவடிக்கை எடுப்பதுடன் மட்டும் தொடர்புடையதல்ல; காவல் துறை சட்டத்துக்கு உட்பட்டு நடந்துகொள்வதையும் பொறுத்தது. காவல் துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் இதை மறந்துவிடக் கூடாது!
- தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in