

ஆண்டுதோறும் சித்திரைப் பௌர்ணமி நாளன்று, தேனி மாவட்டம் குமுளியில் உள்ள விண்ணேற்றிப் பாறையில் கண்ணகிக் கோட்டத்திலுள்ள மங்கலதேவி கண்ணகிக்குத் திருவிழா நடைபெற்றுவருகிறது. இந்த ஆண்டு மே 5 (வெள்ளிக்கிழமை) அன்று திருவிழா நடைபெறவிருக்கிறது. சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூவேந்தர்களைப் பற்றியும், சங்க காலத்துக்குப் பின்னான சிலப்பதிகார காலத்துக்குமான ஒரே வரலாற்று ஆதாரமாகவும் உள்ள இடம், இந்த கண்ணகிக்கோட்டம்.
விண்ணேற்றிப் பாறையில் கண்ணகி என்ற பெயரிலுள்ள மங்கலதேவி கண்ணகிக் கோட்டம் தவிர, வேறெங்கும் கண்ணகிக்குக் கோயில் இல்லாததற்கு, வஞ்சிக் காண்டத்தின் வாழ்த்துக் காதையில் இடம்பெற்றுள்ள கண்ணகியின் கூற்றை ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர் [தென்னவன் தீது இலன்; தேவர் கோன் தன் கோயில்/ நல்விருந்து ஆயினான்.
நான் அவன் தன்மகள்/ வென்வேலான் குன்றில் விளையாட்டு யான் அகலேன்]. கண்ணகி வழிபாடு என்பது பகவதி, பத்தினித் தெய்யோ, ஒரு முலைச்சியம்மன், திருமாவுண்ணி, கண்ணாத்தாள் போன்ற பெயர்களில்
கேரளத்திலும் இலங்கையிலும் இன்றைக்கும் தொடர்கிறது.
1956இல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழகம்–கேரள எல்லையில் சுமார் 600 கி.மீ. பரப்பளவுள்ள வனப்பகுதி அளக்கப்படவில்லை. பாதுகாக்கப்பட்ட பெரியாறு காப்புக் காட்டுப் பகுதிக்குள் அளக்கப்படாத பகுதியும் அடங்கியுள்ளது. இதனால், தமிழகத்தின் பெரியகுளம் வட்டார எல்லைக்குள் அடங்கிய கண்ணகிக் கோட்டமானது, தற்போதுவரை கேரளத்தின் ஆளுகையின்கீழ் உள்ளது.
தமிழகம்–கேரள எல்லைப் பகுதியிலுள்ள குமுளியிலிருந்து 14 கி.மீ. தொலைவில் விண்ணேற்றிப் பாறை அமைந்துள்ளது. இந்தப் பாதையைத் தன் கட்டுக்குள் வைத்துள்ள கேரள அரசு, கேரளத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் மங்கலதேவி கண்ணகிக் கோட்டமும் இருப்பதாக 1983இல் அறிவித்தது.
மேற்குத் தொடர்ச்சி மலைமேல் அமைந்துள்ள இந்தக் கண்ணகிக் கோட்டத்தைப் பராமரிக்க எவ்வித முயற்சிகளையும் கேரளத் தொல்லியல் துறை மேற்கொள்ளாத நிலையில், கோட்டம் இடிந்து சிதிலமடைந்துள்ளது. கண்ணகிக் கோட்டம் அமைந்துள்ள இடம் தமிழகத்துக்குச் சொந்தமானது என்பதைச் சட்டபூர்வமாக நிறுவுவதற்குள், கண்ணகிக் கோட்டத்தின் சிதிலமடைந்த சுற்றுச்சுவர்களும், அடிப்பகுதி மட்டுமே எஞ்சியிருக்கும் கண்ணகி சிலையும் முழுவதுமாகச் சிதைந்துவிடும் நிலையில் உள்ளன.
ஆண்டுதோறும் சித்ரா பெளர்ணமி மங்கலதேவி கண்ணகித் திருவிழாவில் பங்கேற்கத் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குமுளி வழியாகக் கண்ணகிக் கோட்டத்துக்குச் செல்கின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அனுமதி, குறிப்பிட்ட நேரத்துக்குள் சென்றுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளைக் கேரள வனத்துறை விதிக்கிறது. இதன் காரணமாக, கண்ணகிக்கோட்டத்துக்குச் செல்லும் தமிழ்நாட்டு பக்தர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
“சென்னைக் கடற்கரையில் இருக்கும் கண்ணகி சிலைக்கு, ஒவ்வோர் ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று மாலை அணிவித்து அரசு மரியாதை செலுத்தப்படும்” என சட்டமன்றத்தில் (110 விதியின்கீழ்) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்தார். அடுத்த ஆண்டுக்குள்ளாவது கண்ணகிக் கோட்டத்தைத் தமிழகத்தின் எல்லைக்கு உள்பட்டது என்கிற உரிமையைத் தமிழக முதல்வர் பெற்றுத்தர வேண்டும் என்பது தமிழர்களின் எதிர்பார்ப்பு!
- தொடர்புக்கு: murugesan.m@hindutamil.co.in