

நெல்லூரில் பிறந்து, அன்மையில் காலமான ராண்டார் கை என்ற மாதபூஷி ரங்கதுரை (1937-2023) தமிழ் சினிமாவின் தொடக்க கால வரலாற்றிற்குத் தனது கட்டுரைகள் மூலம் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்.
தமிழ் சினிமாவின் ஆரம்ப ஆண்டுகளைப் பற்றி அறந்தை நாராயணனைப் போன்று வெகு சிலரே எழுதியிருந்தார்கள். ஏனென்றால், அன்று அத்துறையைப் பற்றி ஓர் உதாசீனமே மேலோங்கியிருந்தது. சட்டப்படிப்பு முடித்த ரங்கதுரை சென்னையில், மூத்த வக்கீல் வி.சி.கோபாலரத்தினத்திடம் உதவியாளராக வேலை பார்த்தார். அன்றைய பல இயக்குநர்களுக்கும் நடிகர்களுக்கும் கோபாலரத்தினம்தான் வக்கீல். ஆகவே, கோடம்பாக்கத்தின் நடப்புகளை வெகு சமீபத்திலிருந்து பார்க்கும் வசதியும் மற்றவர்களுக்குக் கிடைக்காத புரிதலும் இவருக்குக் கிடைத்திருந்தது. அவரது கட்டுரைகளுக்கு இது அடிப்படை சுவைசேர்ப்பதாக அமைந்தது. ரங்கதுரை, ‘ராண்டார் கை’ என்கிற புனைபெயர் மூலம் பிரபலமானர். எம்.கே.தியாகராஜ பாகவதர் – என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் மீது தொடுக்கப்பட்ட லட்சுமிகாந்தன் கொலை வழக்கு பற்றி நிறையவே எழுதினார். சினிமா வழக்குகள் மட்டுமல்ல. ஆளவந்தார் கொலை வழக்கு போன்ற வேறு பிரபல கொலை வழக்குகள் பற்றியும் எழுதினார். அத்துடன் கதை காப்பிரைட் வழக்குகள் பற்றியும் சுவையாக எழுதினார்.
எண்பதுகளில் சென்னையிலிருந்து வெளியான ‘அசைடு’ (Aside) என்கிற மாதமிருமுறை ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியர் ஐவான் ஏப்ரஹாம், இவருடைய சினிமா சார்ந்த எழுத்துக்கு நிறைய இடம் அளித்தார். 1988 ஜனவரியில் ராண்டார் கை இப்பத்திரிகையின் முதல் இதழில் ஆரம்பித்த தொடரின் தலைப்பு ‘ஒன்ஸ் அபான் எ சிட்டி’ (Once Upon a City). இதில் முதல் கட்டுரை ‘த ட்ரீம் ஃபேக்டரீஸ்’ (The Dream Factories) என்ற தலைப்பில் வெளியானது. இதில் முதல் தமிழ் மெளனப் படம் ‘கீசகவதம்’ 1916இல் வெளியானது என்றும் அதன் ஒரு பிரதி அமெரிக்காவில், ராச்செஸ்டரில் உள்ள ஈஸ்ட்மன் கோடக் நிறுவனத்தில் உள்ள ஆவணக் காப்பகத்தில் உள்ளது என்றுதான் கேள்விப்பட்டதாக எழுதியுள்ளார். அதற்கான ஆதாரத்தை அவர் கூறவில்லை.
ஏ.நாராயணன், ராஜ சாண்டோ, பிரகாசா, கே.ராம்நாத் போன்ற தமிழ் சினிமாவின் முன்னோடிகளைப் பற்றி நிறைய விவரங்களுடன் இரண்டு வருடங்களுக்கு இந்தத் தொடரை எழுதினார். இதுதான் தமிழ் சினிமா வரலாற்றிற்கு ராண்டார் கையின் முக்கியமான பங்களிப்பு. பின்னர் அவர் எழுதிய பல கட்டுரைகள் இவற்றின் மீளாக்கமாகவே இருந்தன. அவர் பல ஆண்டுகள் கழித்து எழுதிய ‘ஸ்டார் லைட் அண்ட் ஸ்டார் பிரைட்’ (Star Light and Star Bright) என்கிற நூல் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
பின்னர் ‘தி இந்து’ இதழில் ‘பிளாஸ்ட் ஃபிரம் த பாஸ்ட்’ (Blast from the Past) என்கிற கட்டுரைத் தொடரை ஆரம்பித்தார். மறக்கப்பட்ட பல தமிழ்ப் படங்களை ஒவ்வொரு கட்டுரையிலும் அறிமுகப்படுத்தினார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
நம்மிடம் ஆரம்ப காலத் திரைப்படங்கள் இல்லாதபோது, அச்சு ஊடகங்களில் அந்தப் படங்களைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள், விமர்சனங்கள், நடிகர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாறுகள்தாம் நமக்கு அந்தக் கால சினிமா பற்றிக் கூறுபவை. சினிமா துண்டறிக்கைகளும் பாட்டுப்புத்தகங்களும்கூட நமக்கு ஆதாரங்களாகின்றன. சாதாரண விளம்பரம்கூட முக்கியமான தகவல்களை உள்ளடக்கியிருக்கும். தனது சேகரிப்பை ராண்டார் கை சிறப்பாகப் பயன்படுத்திப் பல இதழ்களில் எழுதினார்.
ராண்டார் கையின் கட்டுரைகள் பல அரிய விவரங்களை அடக்கியிருந்தாலும் பெருவாரியாக அவை ஆளுமைகள் பற்றியே அமைந்திருந்தன. ஒரு திரைப்படத்தின் அடிப்படைச் சிந்தாந்தம், அரசியல் பின்புலம், உள்ளடக்கம் ஆகியவற்றில் அவர் கவனம் செலுத்தவில்லை. அந்தப் பரிமாணம் அவரை ஈர்க்கவில்லை. திரைத்துறையின் வளர்ச்சியையும் அவர் பதிவுசெய்யவில்லை. இன்றும் தமிழ் சினிமா பற்றி எழுதும் பலர் இந்தரீதியிலேயே எழுதுவதைக் கவனிக்கலாம்.
தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தின் பேரில் ராண்டார் கை, பழங்கால சினிமா ஆளுமைகள் பத்து பேரை நேர்காணல் செய்து ஒலிநாடாவில் பதிவுசெய்தார். இதில் கே.ஆர்.செல்லம், எம்.ஆர்.ராதா போன்ற நடிகர்கள் அடக்கம். இவை ராண்டாரின் இரண்டாவது முக்கியமான பங்களிப்பு எனச் சொல்லலாம்.
- சு.தியேடார் பாஸ்கரன்