சச்சின் 50: சதங்களால் சாதித்த ஜாம்பவான்

சச்சின் 50: சதங்களால் சாதித்த ஜாம்பவான்
Updated on
3 min read

கிட்டத்தட்ட 24 ஆண்டுகாலம் சர்வதேச கிரிக்கெட் களத்தில் தன்னிகரற்ற நட்சத்திரமாக ஜொலித்த சச்சின் டெண்டுல்கர், மலைக்கவைக்கும் பல சாதனைகளை நிகழ்த்தியவர். தன் கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கம் முதல் இறுதிவரை எந்தத் தருணத்திலும் ஒளி குன்றாத நட்சத்திரமாகத் திகழ்ந்த மிகச் சில வீரர்களில் முக்கியமானவர். நீண்ட காலம் களத்தில் நின்றவர்களில் அவரளவுக்குத் தொடர்ந்து அணியின் வெற்றிக்குப் பங்களித்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

நம்பிக்கை நட்சத்திரம்: 1989இல் பாகிஸ்தானில், தான் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டித் தொடரிலேயே இரண்டு அரைச் சதங்களை அடித்தார் சச்சின். 18 வயதை நிறைவுசெய்வதற்குள், மட்டைவீச்சுக்குக் கடினமான ஆடுகளங்களைக் கொண்ட இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் சதமடித்தார். டெஸ்ட் போட்டிகளில் நிதானமாகவும் 50 ஓவர் போட்டிகளில் சூழலுக்கேற்ப நிதானமாகவும் அடித்து ஆடுவதற்குமான லாகவம் அவருக்குக் கைகூடியிருந்தது.

1990களில் இந்திய கிரிக்கெட் அணியில் திறமையான மட்டையாளர்களும் பந்துவீச்சாளர்களும் இருந்தார்கள். ஆனால், அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தவர் சச்சின் மட்டும்தான். இதன் பொருள் பிறர் வெற்றிக்குப் பங்களிக்கவில்லை என்பதல்ல. ஆனால், சச்சின் களத்தில் மட்டையுடன் நின்றுகொண்டிருப்பது அன்றைய இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் அசாத்திய நம்பிக்கையை அளித்தது.

சச்சின் களத்தில் இருக்கும்வரை தம்மால் வெற்றி பெற முடியாது என்பதை எதிரணியினர் உணர்ந்திருந்தனர். சச்சினை அவுட் ஆக்குவதிலேயே முதன்மைக் கவனம் செலுத்தினர். மிகப் பெரிய மட்டையாளர்களை அச்சுறுத்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சச்சினுக்குக் கூடுதல் கவனத்துடன் பந்து வீச வேண்டியிருந்தது.

1998இல் ஷார்ஜா கோப்பையில், இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறுவதற்கான போட்டியிலும் இறுதிப் போட்டியிலும் சதம் அடித்து ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்ததும், அடுத்த ஆண்டு சென்னையில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அனைத்து முன்னணி மட்டையாளர்களும் அவுட்டாகிவிட, 136 ரன்கள் அடித்து அணியை வெற்றியின் விளிம்புக்குக் கொண்டுசென்றதும் 90களின் இந்திய அணிக்கு சச்சின் என்னவாக இருந்தார் என்பதை உணர்த்துபவை.

இளைஞர்களுக்கு இணையாக... புத்தாயிரத்தில் அணியின் தலைவரானார் சவுரவ் கங்குலி; அவர் வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், முகமது கைஃப், ஜாஹீர் கான், ஆசிஷ் நெஹ்ரா உள்ளிட்ட பல திறமைவாய்ந்த இளைஞர்களுடன் இந்திய அணியை மிக வலுவானதாக கட்டமைத்தார். ஒரு மூத்த வீரர் எனும் பொறுப்புணர்வுடன் இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் களத்தில் அவர்களுக்கு இணையாகப் பங்களிப்பவராகவும் சச்சின் திகழ்ந்துகொண்டிருந்தார்.

இந்தியாவிலும் அந்நிய மண்ணிலும் சதங்களையும் அரை சதங்களையும் அவர் குவிப்பது குறையவில்லை. மட்டைவீச்சில் அவருடைய வேகமும் விவேகமும் மேன்மையடைந்தன. புதிய உத்திகளைப் புகுத்துவதும் புதிய ஷாட்களைப் பரிசோதித்துப் பார்ப்பதும் தொடர்ந்துகொண்டிருந்தது. களத்தடுப்பிலும் (Fielding) இளம் வீரர்களுக்கு இணையான துடிப்புடன் செயல்பட்டார்.

2007 உலகக் கோப்பையில் இந்தியா முதல் சுற்றிலேயே வெளியேறியது. அதில் சச்சினும் மிக மோசமாக விளையாடியிருந்தார். இதையடுத்து அவரைப் பற்றிய விமர்சனங்கள் அதிகரித்தன. சச்சினுக்கு ஓய்வுபெற வேண்டிய வயதாகிவிட்டது என்று சாமானிய ரசிகர்கள் தொடங்கி இயான் சாப்பல் உள்ளிட்ட கிரிக்கெட் ஜாம்பவான்கள் வரை பலரும் கடுமையாக விமர்சித்தனர். ஆனால், அதற்குப் பிறகுதான் சச்சின் தன் கிரிக்கெட் வாழ்க்கையின் மிகப் பெரிய சாதனைகளை நிகழ்த்தினார்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட வலிமையான அணிகளுடனும் தாய்மண்ணிலும் அந்நிய மண்ணிலும் டெஸ்ட், ஒருநாள் என இரண்டு விதமான போட்டிகளிலும் சதங்களை அடித்தார். 2010இல் தென் ஆப்பிரிக்காவுடனான போட்டியில் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடித்த முதல் வீரர் என்னும் அசாத்திய சாதனையை நிகழ்த்தினார். அப்போது அவருக்கு வயது 36. எல்லாவற்றுக்கும் மேலாக, 2011 உலகக் கோப்பையில் இரண்டு சதங்களுடன் மொத்தம் 482 ரன்களைக் குவித்து, இந்திய அணி இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வெல்வதில் முக்கியப் பங்காற்றினார்.

அர்த்தமற்ற அவதூறுகள்: எந்த ஓர் ஆளுமையும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரல்ல. ஒருநாள் போட்டிகளில் 80 ரன்களை அடித்த பிறகு சதம் அடிக்கும் முனைப்பில் மெதுவாக விளையாடுவது, நூறாவது சதம் என்னும் சாதனையை நிகழ்த்துவதற்காக நீண்ட காலம் அணியில் நீடிக்க அனுமதிக்கப்பட்டது என சச்சின் மீது சில நியாயமான விமர்சனங்கள் உண்டு. ஆனால், அதைத் தாண்டி சச்சின் மீது காரணமற்ற வெறுப்பு கொண்டவர்கள் சிலரால் அவர்மீது பல அவதூறுகள் முன்வைக்கப்படுகின்றன.

அணியின் வெற்றியைவிடத் தன்னுடைய சொந்த சாதனைக்கே முக்கியத்துவம் அளிக்கும் சுயநலவாதி என்பது அத்தகைய அவதூறுகளில் ஒன்று. பல போட்டிகளில் அணியின் வெற்றிக்குப் பங்களித்தவராகவும் அணியின் வெற்றிக்கு ஒற்றை ஆளாகப் போராடியவராகவும் திகழ்ந்தவர் சச்சின் என்பது புள்ளிவிவரங்களைப் பார்த்தாலே தெரிந்துவிடும்.

1999 உலகக் கோப்பையின்போது சச்சினின் தந்தை மரணமடைந்தார். தனது தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காகச் சென்றுவிட்டு உடனடியாகத் திரும்பினார் சச்சின். ஒரே ஒரு போட்டியை மட்டுமே தவறவிட்டார். பாகிஸ்தானுடன் 136 ரன்கள் அடித்த சென்னை போட்டியில் கடுமையான வயிற்றுப்போக்குடன் டயபர் அணிந்தபடி விளையாடியதாக அவரே பதிவுசெய்திருக்கிறார். தன் கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் பல கடுமையான காயங்களையும் உடல் நலிவுகளையும் அறுவைசிகிச்சைகளையும் தாங்கிக்கொண்டு விளையாடியிருக்கிறார்.

தலைசிறந்த ஆளுமை: சச்சின் டெண்டுல்கர் களத்தில் நிகழ்த்திய சாதனைகளுக்காக மட்டும் போற்றப்படுவதில்லை. சறுக்கல்கள், வீழ்ச்சிகள் வந்தபோதெல்லாம் அவற்றிலிருந்து எதிர்பார்த்ததைவிட அதிக வேகத்தில் மீண்டுவந்து முன்பைவிடக் கூடுதல் வேகத்தை வெளிப்படுத்தியதால்தான் இன்றுவரை கொண்டாடப்படுகிறார். இறுதிவரை தன்னுடைய ஆட்டத்திறனை மெருகேற்றிக்கொண்டே இருந்தார்.

காலமாற்றத்துக்கும், காயங்களாலும் வயது மூப்பினாலும் தன்னுடைய உடலில் ஏற்பட்ட மாற்றங்களுக்கும் ஈடுகொடுக்கும் விதமாகத் தன் மட்டைவீச்சு நுட்பத்தை மாற்றிக்கொண்டே இருந்தார். புதிய புதிய நுட்பங்களைப் புகுத்தி மட்டைவீச்சை ரசனைக்குரியதாக மாற்றினார். அவருடைய ஆட்டத்தைப் போலவே ஓட்டத்தின் வேகமும் தொடக்கம் முதல் இறுதிவரை சிறப்பாக இருந்தது. களத்தடுப்பில் எப்போதும் சிறப்பாகப் பங்களித்தார். அவ்வப்போது பந்துவீச்சின் மூலமும் அணியின் வெற்றிக்குப் பங்களித்துள்ளார்.

1990களில் உலகமயம் அறிமுகமான புதிதில் வளரும் நாடான இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுக்கு எதிராகத் தன் மட்டைவீச்சால் ஆதிக்கம் செலுத்தியது அன்றைய இந்தியர்களுக்கு, குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரும் உத்வேகத்தை அளித்தது. இவை அனைத்தும் சேர்ந்துதான் சச்சின் டெண்டுல்கரைக் கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த ஆளுமைகளில் ஒருவராக ஆக்குகின்றன.

ஏப்ரல் 24: சச்சின் டெண்டுல்கரின் 50ஆவது பிறந்தநாள்

- தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in