சிந்தனை வெளியைக் காட்டும் சாளரங்கள் - 1 | செக்ஸ்டஸ் எம்பிரிகஸ்: ஐயமே மருந்து

சிந்தனை வெளியைக் காட்டும் சாளரங்கள் - 1 | செக்ஸ்டஸ் எம்பிரிகஸ்: ஐயமே மருந்து
Updated on
3 min read

கிரேக்கத் தத்துவத்தில் ‘ஸ்கெப்டிசிஸம்’ என்று அழைக்கப்பட்டதைத் தமிழில் ‘ஐயவாதம்’ என்று கூறலாம். பண்டைய கிரேக்க ஐயவாதத்தில் பல பிரிவுகள் உண்டு. அவற்றில் முக்கியமான ஒரு தத்துவவாதி, செக்ஸ்டஸ் எம்பிரிகஸ் [Sextus Empiricus]. இவர் ஒரு மருத்துவர். பொ.ஆ. (கி.பி.)இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர். இவர் ஐயவாத பிதாமகர் பைரோவின் சிந்தனைகளைப் பின்பற்றியவர். அந்தப் பிரிவின் ஐயவாதச் சிந்தனைகளைத் தொகுத்தளித்தவர்.

செக்ஸ்டஸ் எம்பிரிகஸின் எழுத்துகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பகுதிகளைத் தொகுத்து ‘ஐயவாதம், மனிதன், கடவுள் குறித்த எழுத்துகளின் தெரிவுசெய்யப்பட்ட பகுதிகள்’ [Sextus Empiricus: Selections from the Major Writings on Scepticism, Man, and God] என்ற தலைப்பில் நூலாக்கியவர் பிலிப்.பி.ஹாலி (1922-1994) என்கிற அமெரிக்கப் பேராசிரியர்.

அவருடைய இந்தச் சிறிய இருநூறு பக்க நூலை, சரியான கவனத்துடன் வாசித்தால், மிகப்பெரிய சிந்தனைத் தெளிவு கிடைக்கும் என்பதே என் எண்ணம். அதற்குக் காரணம், என் அனுபவம். நாற்பது வயதுவரை என்னை அலைக்கழித்த பதற்றங்களிலிருந்து முற்றிலும் விடுவித்து, என் சிந்தனை உலகப் பயணத்துக்குப் பெரும் திறப்பினை அளித்த நூல் இது. ஒருவரால் ஒரே ஒரு நூலைத்தான் படிக்க முடியுமென்றால், இந்த நூலையே நான் படிக்கச் சொல்லிப் பரிந்துரைப்பேன்.

ஐயவாதம் என்றால் என்ன? - ஐயவாதம் குறித்துப் பல தவறான புரிதல்கள் நிலவிவருகின்றன. இந்த நூலைப் படிக்கத் தொடங்கும்போதும்கூடப் பல குழப்பங்கள் வரலாம். உதாரணமாக, ஐயவாதம் என்பது எல்லாவற்றைக் குறித்தும் ஐயப்படுவது, சந்தேகப்படுவது என்று பொருள் கொள்ளப்பட்டுவிடலாம்.

எதையுமே நம்பாவிட்டால், எதை வைத்துக்கொண்டு வாழ்வது என்று கேட்பார்கள். மேலும், ஐயவாதிகள் செயல்பட மாட்டார்கள். ஏனெனில், செயலின் பலாபலன்களில் அவர்களுக்கு நம்பிக்கையே இருக்காது. ஐயவாதியின் முன்னால் ஒரு ஆப்பிள் பழத்தை வைத்தால், அது நன்றாக இருக்குமா இருக்காதா, அதைச் சாப்பிடுவது நல்லதா இல்லையா என்ற கேள்விகளினால் அதைச் சாப்பிடாமலேயே அமர்ந்திருப்பார் என்று கேலியாகச் சொல்வார்கள். இவ்வாறெல்லாம் கூறுவது எதனால் என்றால் ஐயவாதத்தின் லட்சியம் ஐயப்படுவது மட்டுமே என்று நினைப்பதுதான். இது முற்றிலும் தவறானது என்பதைத்தான் இந்த நூல் விளக்குகிறது.

ஐயவாதத்தின் நோக்கம், பதற்றமின்றித் தொடர்ந்து சிந்திப்பதற்கான மன அமைதி, ஆசுவாசம் ஆகியவற்றைப் பெறுவதுதான். அதற்கான வழிமுறையாக அது கடைப்பிடிக்கும் கோட்பாடு, கருத்து மாறுபாடுகள் ஏற்படும் களங்களில் தீர்மானத்தை-தீர்ப்பை ஒத்திப்போடுவது (suspension of judgment in matters of opinion). அதாவது, குறிப்பிட்ட ஒன்றைப் பல்வேறு காரணங்களால் நாம் தேர்வுசெய்தாலும் கூட, அதுவே முற்றிலும் சரியான தேர்வு என்று நம்ப வேண்டிய அவசியம் இல்லை. வேறு காரணங்களால் மாற்றுத் தேர்வினை மேற்கொள்பவரிடம் விரோதம் பாராட்டவோ பதற்றம் அடையவோ வேண்டியதில்லை.

உதாரணமாக, கடவுள் குறித்த கேள்வியில் கடவுள் இல்லை என்றும், கடவுள் இருக்கிறார் என்றும் வாதிடுவது சாத்தியம். இதில் ஏதாவது ஒரு கருத்தினை நம்பினால் மாற்றுக்கருத்து நம்மைப் பதற்றமடையச் செய்யும். கடவுள் நம்பிக்கையாளர்கள் கடவுள் இல்லை என்று சொல்பவர்களால் மனம் புண்படுவதாகக் கூறுகிறார்கள். அதேபோல, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும், கடவுள் நம்பிக்கையாளரின் செய்கைகளால் மனம் நோக முடியும்.

அது மட்டுமல்லாமல், ஒரு கடவுளை நம்புபவர்கள், வேறொரு கடவுளை நம்புபவர்கள் மேல் வெறுப்பும் சினமும் கொள்வதும் பரவலாக நிகழ்வதுதான். இதற்கெல்லாம் காரணம், நம்பிக்கையையே வாழ்வாதாரமாக நினைப்பதும், அந்த நம்பிக்கை மறுக்கப்பட்டால் பதற்றமடைவதும், நிலைகுலைவதும்தான். இந்த நோய்க்கான மருந்துதான் ஐயவாதம்.

ஐயவாதத்தின் தேவை: எந்தவொரு நம்பிக்கையின் அடிப்படையும் என்ன என்பதை ஐயவாதம் பரிசீலிக்கிறது. எதனால் ஒரு நம்பிக்கையை மற்றவரும் ஏற்க வேண்டும் என்று நினைக்கிறோம் என்பதை ஆராய்கிறது. அதற்கான காரணம், பொதுவான புலன் அனுபவம். தனிநபர்களின் புலன் அனுபவங்கள் எல்லாம் பிறராலும் பகிர்ந்துகொள்ளப்படுவதால்தான் கூட்டியக்கம் சாத்தியமாகிறது; மொழி சாத்தியமாகிறது.

ஒரே இயல்வெளியை அனைவரும் பகிர்ந்துகொள்கிறோம். அதனால், அனைவரின் இயல்வெளியைக் குறித்த புரிந்துணர்வும் பொதுவானது என்று கருதுகிறோம். அதற்கு அடுத்தபடியாகப் புரிந்துணர்வின் அடிப்படையில் உருவாகும் அனுமானங்களும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்று நம்பத் தலைப்படுகிறோம். இங்கேதான் பெருமளவு பதற்றம் உருவாகிறது.

ஐயவாதத்தின் செல்லும் நெறி என்னவென்றால், பொதுவானபுலன் அனுபவம் என்பதிலேயே வித்தியாசங்களுக்கான சாத்தியங்களைக் காண்பதை முறையியல்படுத்துகிறது. உதாரணமாக, ஒரு சிறுவனுக்கு உயரமானதாகத் தெரியும் மேஜை, அவனது தாய்க்கு உயரமாகத் தெரியாது. தொழில்முறையாகச் சமையல் செய்பவர் ஒரு சூடான பாத்திரத்தைக் கைகளால் பற்றி எடுத்துவைப்பார்.

அதைப் பார்த்துவிட்டு மற்றொருவர் அந்தப் பாத்திரத்தைத் தொட்டால் அது கையைச் சுட்டுவிடும். இதுபோல, பல்வேறு புலன் அனுபவ மாறுபாடுகளைத் தொகுக்கும் ஐயவாதம், பொதுவான அனுபவம் என்பதை ஐயப்படுவது சார்ந்த முறையியலாக ஆக்குகிறது. அதன் மூலம் பல்வேறு அனுபவங்களும், அனுமானங்களும், கருத்துநிலைகளும் சாத்தியம் என்பதை உணரவைக்கிறது. எனவே, கருத்து மாறுபாடுகளின் களத்தில் தீர்ப்பினை ஒத்திப்போடச் சொல்கிறது.

பதற்றம் குறைப்போம்: புலன் அனுபவங்கள் அனைத்தும் வேறுபடும் என்றால், அவை ஐயத்திற்குரியவை என்றால், நாம் எதன் அடிப்படையில் செயல்படுவது என்கிற கேள்வி எழுகிறது. அங்குதான் செக்ஸ்டஸ் ஒரு முக்கியமான கருத்தாக்கத்தைச் சொல்கிறார். அது நடைமுறை மதிப்பீடு (practical criterion) சார்ந்தது என்கிறார். ஆப்பிள் பழம் உண்ணக்கூடியது என்பது நடைமுறை மதிப்பீடு, அதைச் சந்தேகிக்க வேண்டியதில்லை.

ஆனால், ஆரோக்கியமான வாழ்வுக்கு ஆப்பிள் அவசியம் சாப்பிட வேண்டும் என்று ஒருவர் சொன்னால், மற்றொருவர் அது தேவையில்லை, கொய்யாப் பழமே நல்லது என்றால், அந்தக் கருத்துக்களின் மீது நாம் தீர்ப்பை ஒத்திப்போட வேண்டும். நமக்குச் சரியெனப் படுவதைச் செய்யலாம்; நாம் செய்வது மட்டுமே சரியென்று சாதிக்க வேண்டியதில்லை. அது மனம் பதற்றமடையாமல் சிந்திப்பதற்கான வழி என்று சொல்கிறார் செக்ஸ்டஸ் எம்பிரிகஸ்.

- ராஜன் குறை | மருந்து பேராசிரியர், ‘மானுட யத்தனம் என்றால் என்ன?’ நூலாசிரியர்.
தொடர்புக்கு: rajankurai@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in