

இந்தியாவின் முதல் குடிநபருடன் மட்டுமல்ல; எதற்கும் ஆகாதவர்கள், விளங்காதவர்கள் என ஒதுக்கப்பட்ட கடைக்கோடி மக்களோடும் தோழமையோடு பழகியவர் ஜெயகாந்தன். அவரோடு நான் மிக நெருங்கிப் பழகிய காலத்தில், எப்போதும் கூடவே அவருக்கு உதவியென இருந்தவர்கள் ஆறுமுகம், பன்னீர் என்ற இரு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள். அவர்கள் தவிர, ஊரிலும் தெருவிலும் வீட்டிலும் ‘இது உருப்படாது’ என்று பெயரெடுத்துப் புகழ்பெற்றிருந்த திப்பு சுல்தான் என்கிற சையத் சாலியா உஸ்மானும் கூட இருந்தார். திப்பு இப்போது எப்படி இருக்கிறார் என்று கடைசியில் சொல்கிறேன். இது தவிர கட்டிடத் தொழிலாளர்கள், எலெக்ட்ரீஷியன்கள், பெயின்ட்டிங் வேலை செய்பவர், சினிமாவில் அடித்தட்டு வேலை செய்பவர்கள், கஞ்சா விற்பவர்கள், சிறைக் கைதி, மூட்டை தூக்குபவர் என்று பலதரப்பட்ட நண்பர்கள் அவருக்கு இருந்தனர். இதில் முக்கியமான விஷயம், இவர்களில் ஓரிருவர் தவிர வேறு யாரும் அவருடைய வாசகர்கள் அல்லர்.
1992–1993 கல்வியாண்டில் சென்னை கிறித்துவக் கல்லூரியில் எந்தப் பிடிமானமும் இல்லாமல் நடிப்புப் பயிற்சிக்காகப் படித்துக்கொண்டிருந்தவர் திப்பு. அவருக்கு அன்பு என்கிற நண்பர் மூலமாக ஜெயகாந்தனைப் பற்றித் தெரியவந்தது. ஜே.கே-வை திப்பு படித்திருக்கவில்லை. ஆனால், ஜே.கே. ‘புகைக்கும்’ விஷயமும் அதைப் பற்றிப் பகிரங்கமாகச் சொல்வதும் அதற்கு ஆதரவாகப் பேசுவதும் அவரை ஈர்த்தது. அவரைக் காணாமலே திப்புவுக்கு அவரோடு ஒரு நெருக்க உணர்வு ஏற்பட்டது. அவரோடு எப்படியாவது பேச வேண்டும் எனப் ‘பிரபலமானவர்கள் விலாசங்கள்’ புத்தகத்தைத் தேடி வாங்கி, அவர் தொலைபேசி எண்ணைக் குறித்துக்கொண்டு, அவரைத் தொடர்புகொண்டு பேசினார்.
“ஐயா! வணக்கமய்யா.”
“சொல்லுங்கோ. யாரு?”
“ஜெயகாந்தன் ஐயா இருக்காங்களா?”
“நாந்தான்.. சொல்லுங்கோ.”
“எம் பேர் திப்பு சுல்தான். நான் உங்க எழுத்தெல்லாம் படிச்சதில்ல.”
“ரொம்ப நல்லது.”
“உங்க மேலே அதிக அன்பா இருக்குதுங்கய்யா. உங்களைப் பாக்கணுமய்யா.”
“சரி.. வாங்கோ…”
“அட்ரஸ் கைல இருக்கு. எப்படிக் கண்டுபிடிக்கிறதுங்கய்யா...?”
“அந்தத் தெருவுக்குள்ள வந்து யாரக் கேட்டாலும் சொல்வாங்க. வாங்கோ…”
“சரிங்கய்யா..”
மறுநாள் 1993ஆம் ஆண்டு விஜயதசமி அன்று ஜே.கே. வீட்டு மாடிக்குடிலில் திப்பு அவரைச் சந்தித்தார். அப்போது ‘கிருஷ்ணசாமி அசோசியேட்’ஸில் பணியாற்றிக்கொண்டிருந்த உதயா என்கிற ஓர் உதவி இயக்குநரோடு, இரு தார மணம் தவறில்லை என்பது குறித்து ஜே.கே. காரசாரமாகப் பேசிக்கொண்டிருக்க, இவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். கொஞ்ச நேரம் செல்ல திப்பு, சிலும்பி கிடக்கும் பைப்பைப் பார்த்தபடி, “ஐயா, இந்த மருந்த உபயோகப்படுத்தினா அழிவுன்றாங்களேய்யா..?”
“யாருக்கு?” என்று கேட்டபடி சிரித்திருக்கிறார் ஜே.கே.
“ஐயா, இந்த மருந்து உபயோகப்படுத்துறவங்க அறிவுநிலைக்கும், மருந்து உபயோகப் படுத்தாதவங்க அறிவுநிலைக்கும் என்னங்கய்யா வித்யாசம்..?”
“நீங்க புடிப்பிங்களா?”
“ஆமாய்யா…”
“நல்லது. இருங்க எடுத்துட்டு வரேன்.”
“இல்லங்கய்யா மன்னிக்கணும்.. மருந்து என்கிட்டயே இருக்கய்யா...”
“சபாஷ்” என்று சொல்லி, அவர் மேசையில் ஒரு தட்டு தட்டிய பின், இருவரும் புகைக்கத் தொடங்குகின்றனர். இரண்டு ரவுண்டுக்கு மேல் போக,
“ஐயா! நான் உங்ககிட்ட கத்துக்கணும்னு வந்துருக்கங்கய்யா..”
“கத்துக்கங்கோ..”
“நான் எதுக்கும் உபயோகமில்லாதவன்..”
“அத நீங்க சொல்லப்படாது.”
“நான் படிச்சவன் இல்ல. உருப்படாதவன்னு பேர் வேறய்யா..”
“படிச்சவன்லாம் உருப்பட்டுட்டானோ… ‘அய்யோ’ என்று போக மாட்டங்கிறான் பல பேரு.”
“என்னங்கய்யா?”
“அதெல்லாம் அப்புறம் புரிஞ்சுக்கலாம்...”
சம்பாஷணை இப்படி நீள, சாதாரணமாய்ப் பார்த்துவிட்டுத் திரும்ப வந்த திப்பு, அங்கேயே தங்கிவிடுகிறார். ஜே.கே.வுக்குப் பணிவிடைகள் செய்வது, இடத்தைக் கூட்டுவது, துடைப்பது, கடைகண்ணிக்குப் போய்வருவது என்று எல்லா வேலைகளையும் அங்கு பார்த்துவருகிறார். ஒரு நாள் இல்லை... இரண்டு நாள் இல்லை... ஜெயகாந்தன் தன் இறுதி வருடங்களில் நலமின்றி அப்போலோ மருத்துவமனையிலிருந்து திரும்பும்வரை. நான் ஜெயகாந்தனைப் பற்றிய ஆவணப்படம் எடுக்கும்போது உடனிருந்து, சில உதவிகளையும் திப்பு செய்தார்.
ஒரு டெம்போ டிராவலரில் ஜே.கே., நண்பர்களோடு 2007இல் கடலூர் மஞ்சக்குப்பம் செல்லும் பயணத்தில் திப்புவைப் பற்றிப் பேச்சுவந்தது. அவரும் உடனிருக்க... இப்படித் தொடங்கினார் ஜே.கே.
“ஏன் எழுதல.. ஏன் எழுதலனு என்னைக் கேக்குறான்க. ஒரு கட்டம்வரை எழுதிட்டேன். இனிமே என்னைப் படிச்சிட்டு சிந்திச்சி அதுலேர்ந்து கிளைச்சி வேற ஒருத்தன் எழுதணும். காலம் முச்சூடுமா ஒருத்தன் எழுதிக்கிட்டே இருக்க முடியும். ஒரு விஷயம் வச்சிக்கங்க. வாதங்களின் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பைச் சொல்கிற நீதிபதி இல்ல எழுத்தாளன். இது சரி... தப்புன்னு சொல்றவனும் அல்ல. இது இப்படி இருக்குது... யோசிச்சிப் பாருன்னு சொல்றவன். இன்னிக்குச் சரின்னு படறது, நாளைக்கு மாறலாம். தவறு, சரி எல்லாமே எப்போதும் மாறக் கூடியது. மாறாத அறத்தை, தன் இயக்கத்தால் கண்டடைவதும் அதைச் சமூகத்துக்குக் கைமாற்றிவிட்டுப் போவதும்தான் கலைஞனின் வேலை. சரி... தப்பு மாறும். அறம் என்னைக்கும் மாறாது. அப்படி அந்த அறத்தைக் கண்டறிபவன் கலைஞன். நீங்கள் கொலைகாரன் என்று சொல்கிற அல்லது அப்படி உங்களால் குற்றஞ்சாட்டப்பட்டவன்கூட, அறம் சார்ந்தவனாக இருப்பான். அதையெல்லாம் கண்டு சொல்வதன் மூலம் சில நியமங்களை அவன் காலத்துக்குத் தக்க மாத்தி அமைச்சு மேலே ஏகணும். அதுதான் நம்ம அவா. இந்தா (திப்புவைக் காட்டி) பைசாவுக்குத் தேறாதுன்னு பேர் எடுத்து, ஒரு இதோடதான் இங்க வந்து கிடக்கான்... இவன் நான் எழுதின எதையும் படிக்காம, என்னைப் படிச்சிக்கிட்டு இருக்கான். ஏற்கெனவே நம்ம வீட்டுல இருக்கார் ஒரு அப்பு (தன் மகன் ஜெயசிம்மனை அவர் அப்படி அழைப்பார்). இப்ப ஒரு திப்பு. ஒரு வகைல இவன் படிக்காதது நல்லது. படிச்சான்னா நம்மள விட்டுப் போனாலும் போயிடுவான்” என்று சொல்லிச் சிரித்தார்.
ஜெயகாந்தனோடு இருந்தும்கூட, ‘ஏதுமே வாசிக்காதவன், எதுக்கும் ஆகாதவன்’ என்று சொல்லிக்கொண்ட திப்பு எல்லாரோடும் இணக்கமாகப் பழகுபவர். ஜே.கே.யின் தொடர்பால் சில சிவனடியார்கள் தொடர்பு ஏற்பட்டுத் திருவாசகம் எல்லாம் வாசித்து, பின் ருத்ராட்சம் விற்கும் ஒரு நியாயமான வியாபாரியாகவும் அதன் மகாத்மியங்களைச் சொல்லி விற்பவராகவும், அதே சமயம் தான் ஒரு முஸல்மான் என்பதை விட்டுக்கொடுக்காமலும் கோயில் கோயிலாக அலைகிறார். இது தவிர ‘அறிவுக்கு வந்தோர் வாசிக்க ஆனது’ என்று சில ஆண்டுகளுக்கு முன் ஒரு குறுநாவலும் எழுதிவிட்டார். லா.ச.ரா. சப்தரிஷி முன்னுரை எழுதியுள்ள அந்நூலை, ரா.கி.ரங்கராஜன் பேரன் ராகவன் ஓசூரில் வெளியிட்டுள்ளார்.
எழுத்தால் மட்டுமல்ல, தன் வாழ்வாலும் பலரை ஆக்கியவர் ஜெயகாந்தன். எல்லா பாகங்களும் உபயோகப்படும் கனிந்த ஒரு முதிர் தென்னை அவர். எங்கள் ஊர் இனிப்புக் கடைகளில் எப்படி இருக்கிறதென்று பார்க்க இனிப்பின் ஒரு விள்ளலை எடுத்துக் கையில் தருவார்கள். அதைத்தான் இப்போது இந்த தலைமுறைக்குத் தந்திருக்கிறேன்.
- ரவிசுப்பிரமணியன்
கவிஞர், ஆவணப்பட இயக்குநர்
தொடர்புக்கு: ravisubramaniyan@gmail.com