

தமிழ்நாட்டின் ஆற்றங்கரை நகரங்களில் நடைபெற்ற 2023ஆம் ஆண்டுக்கான இலக்கியத் திருவிழாக்கள் வைகை இலக்கியத் திருவிழாவோடு நிறைவடைந்தன. புத்தகக் காட்சிகளைத் தொடர்ந்து இலக்கிய மேம்பாட்டுக்காகத் தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ள முக்கியமான முன்னெடுப்புகளில் ஒன்றாக இந்த இலக்கிய விழாக்களைக் கருத வேண்டும். வரும் ஆண்டுகளிலும் இது தொடரும் என்கிற அனுமானத்தில் இவ்விழாக்கள் நடத்தப்பட்ட விதம், பங்குபெற்றோரின் அனுபவங்கள், எதிர்பார்ப்புகள் பற்றி உரையாடுவது அவசியமாகிறது.
சொற்பொழிவாளர்களுக்கு முக்கியத்துவம்
வாசிப்பு வழியாக மட்டுமே அறிமுகம் அடைந்துள்ள எழுத்தாளர்களை நேரில் சந்திப்பது, அவர்களின் உரைகளைச் செவிமடுப்பது, உரையாடுவது ஆகியவற்றுக்கான வெளியை உருவாக்கித் தருவதே இலக்கிய விழாக்களின் முதன்மை நோக்கமாக அமைய வேண்டும். கூடுதலாக, விமர்சகர்கள், ஆய்வாளர்களின் பங்களிப்புக்கான இடத்தையும் அனுமதிக்கலாம். உலகம் முழுமையும் இவ்வகையிலேயே இலக்கிய விழாக்கள் நடத்தப்பட்டுவருகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் புத்தகக் காட்சிகள் தொடங்கி இலக்கிய விழாக்கள்வரை மக்கள்திரளுக்காகப் பேசக்கூடிய பெரும் பொழிவாளர்களுக்கு இடமளிப்பது குறித்து எதிரும் புதிருமான கருத்துகள் உலா வருகின்றன.
‘மக்கள்திரளைக் கூட்டுவதற்கு அவர்கள் தேவைப்படு கிறார்கள். அவர்களும் இலக்கியத்தைப் பற்றித்தானே பேசுகிறார்கள், அவர்கள் பரிந்துரைக்கும் இலக்கியங்கள் வழியாகவும் புதிய வாசகன் உருவாகக்கூடும்தானே!’ எனக் கருதுபவர்கள் இருக்கிறார்கள். பெரும் பேச்சாளர்களுக்கு நாடெங்கும் மேடைகள் காத்துக்கிடக்கின்றன. அவர்கள் பங்குபெறும் பட்டிமன்றங்கள் இல்லாமல் தொலைக்காட்சிகளில் எந்த விழாக்களும் நிறைவடைவதில்லை. பள்ளிகள், கல்லூரிகளின் ஆண்டுவிழாக்கள், அயல்நாடுகளின் தமிழ்ச் சங்கங்கள் என எண்ணிறந்த மேடைகள் இருக்க, இலக்கிய விழாக்களிலும் அவர்களுக்கு இடமளிக்கத்தான் வேண்டுமா என்ற வினாவையும் எளிதாகப் புறக்கணித்துவிட முடியாது.
இப்படி வாதிப்பதன்மூலம் மக்கள்திரள் பேச்சாளர்களையும் அவர்களின் பேச்சுமுறைமையினையும் குறைத்து மதிப்பிடுவதாகப் பொருளாகாது. பெரும் மக்கள்திரளுக்காகப் பேசுவதும் ஒரு கலைதான். அது எல்லாருக்கும் எளிதாகக் கைகூடிவிடுவதில்லை. தமிழ்நாட்டில் அதற்கான நீண்ட வரலாறும் உண்டுதானே! தமிழ்நாட்டின் சமூக அரசியல் வரலாற்றை மாற்றியமைத்ததில் மேடைப் பேச்சுகளின் பங்கை யார் மறுக்க முடியும்? பெரியார், அண்ணா, கருணாநிதி, ஜீவா, குன்றக்குடி அடிகளார் என்றொரு நீளமான வரிசை நம் நினைவுக்கு வரும். தமிழ்நாட்டில் அருகிவரும் கலைகளில் இந்த மேடைப் பேச்சுக் கலையும் இணைந்திருக்கிறது. இந்தக் கலையும் இளையோரிடம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளைப் பற்றி அரசு தனியே சிந்திக்கலாம். பொங்கல் போன்ற விழாக் காலங்களில் இத்தகைய பேச்சாளர்களுக்கான நிகழ்வுகளைத் திட்டமிடலாம்.
பொருந்தாச் சுவை
அதே நேரம் இலக்கிய விழாக்களில் பெரும் உரைவீச்சுகள் பாயசத்தில் பச்சைமிளகாய் போல் பொருந்திப்போவதில்லை. பெரும்திரளுக்கான பேச்சைத் திட்டமிடும்போது ‘சுவாரசியம்’ ஒரு முக்கிய அம்சமாக மாறிவிடுகிறது. சுவாரசியத்தை மட்டும் முதன்மையாகக் கருதுபவர்கள் ஒரு இலக்கிய விழாவைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு குறைவு. வாசிக்கத் தொடங்கியிருப்பவர்களுக்கும் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருப்பவர்களுக்குமே இலக்கிய விழாக்கள் ஆர்வமூட்டக்கூடும். ஆக, இலக்கிய வாசகர்கள் எழுத்தாளர்களின் உரைகளுக்காகவே வருகிறார்கள். சமயங்களில் பேச்சாற்றல் இல்லாத எழுத்தாளர்கள் மேடைகளைச் சரிவரக் கையாள இயலாவிட்டாலும்கூட, அதைப் பொருள்படுத்தாமல் அவர்களை அவதானிக்க விரும்புகிறார்கள். ஆகவே, வரும் காலத்தில் பெரும் பேச்சாளர்களை இலக்கிய விழாக்களில் இணைப்பதை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். இலக்கிய விழாக்கள் பெரும்பகுதி எழுத்தாளர்களுக்கும் சிறுபகுதி விமர்சகர்களுக்கும் ஆய்வாளர்களுக்குமானவை என்கிற தெளிவு அவசியம்.
இரண்டாவதாக, அந்தந்த நகரங்கள் - அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர்களை மட்டுமே அழைப்பது என்றொரு விதி உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒருவகையில் பல்வேறு பிரச்சினைகளைத் தவிர்க்க விழா அமைப்பாளர்கள் கண்டறிந்த எளிய தீர்வாக இருக்கலாம். ஆனால், இன்னொரு வகையில் இது ஒரு வேடிக்கையான தீர்வு. இலக்கிய விழாக்கள் இலக்கியப் பரிச்சயம் உடையவர்களையே மையமாகக் கொண்டு திட்டமிடப்படுவது என்பதை ஏற்றுக்கொண்டால், மதுரையில் வாழும் ஒருவர் மதுரைப் பகுதியின் எழுத்தாளர்களை அறிந்தவராக இருக்க அதிக வாய்ப்பு உண்டல்லவா? அடுத்த ஆண்டு இதை அப்படியே தொடர முடியுமா அல்லது வைகை எழுத்தாளர்கள் தாமிரபரணிக்கும், தாமிரபரணி குழுவினர் வைகைக்கும் நாடு கடத்தப்படுவார்களா? இலக்கிய விழாக்களுக்கு வருபவர்கள் சிறந்த இலக்கியவாதிகளைச் சந்திக்கவே ஆவல்கொண்டவர்களாக இருப்பார்கள். ஆகவே, இந்த பிராந்திய அணுகுமுறைக்கு மாற்றுவழிகளை யோசிக்க வேண்டும்.
பலன் என்ன?
முதல் முறையாக இத்தகைய இலக்கிய விழாக்கள் நடத்தப்பெற்றிருக்கின்றன. அரசு பெரும் நிதியை வழங்கியிருக்கிறது. அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து நடத்தி முடித்திருக்கின்றன என்ற வகையில் ‘வெற்றிகரமாக இலக்கியத் திருவிழாக்கள்’ நடந்தேறின என்று பெருமைப்பட்டுக்கொள்ள நியாயம் உண்டு. என்றாலும் அரசின் இந்த அரிதான முன்னெடுப்பினால் எதிர்பார்த்த பலன் கிடைத்ததா என்றும் சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
‘அறிவுப் பொருளாதாரம்’ உலகை வழிநடத்தும் சக்தியாக மாறியிருக்கும் சூழலில் தமிழ்ச் சமூகத்தின், குறிப்பாக இளைய சமுதாயத்தின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவது, வாசிப்பதன் மூலம் தமிழ்ச் சமூகத்தை அறிவார்ந்த சமூகமாக வளர்த்தெடுப்பது ஆகியவையே இத்தகைய விழாக்களின் நோக்கமாக இருக்க வேண்டும். இவ்விடத்தில் இன்னொரு அடிப்படையான கேள்வியையும் நாம் எதிர்கொண்டாக வேண்டும். இலக்கியம் என்பதை எல்லாவற்றுக்குமான வழியாக நாம் கற்பனை செய்கிறோமா? கலை - இலக்கியம் - கல்வி ஆகியவை ஒன்றிணைந்தவை அல்லவா? இலக்கியத்தின் வழியாக நுண்கலைகளை அறிவதும், நுண்கலைகளின் ஊடாக இலக்கியத்தை வந்தடைவதும் இவற்றோடு கல்வியும் இணையும்போது அது முழுமைபெற்றதாக செழுமையடைவதையும் கண்டுவருகிறோமல்லவா?
கேரளமும் வங்காளமும் இதற்குக் கண்கூடான சான்றுகள். மனிதர்களின் நுண்ணுணர்வுகளை வளர்த்தெடுப்பதில் கலை, இலக்கியம், கல்வி ஆகியன இணைந்தே பயணப்பட வேண்டும். ஆகவே, தமிழ்நாடு அரசு இலக்கிய விழாக்களை ‘உரைகளைக் கேட்கும் விழா’க்களாக கருதிவிடக் கூடாது. வகுப்பறைகளிலும் பொதுவெளிகளிலும் நம் மக்கள் உரைகளை மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். காட்சிக் கலாச்சாரம் தீவிரப்பட்டு கால் நூற்றாண்டு கடந்துவிட்ட சூழலில், இன்றைய மனிதனின் கவனக் குவிப்பு வெகுவாகக் குறைந்திருக்கிறது. எனவே, வரும் காலத்தில் இலக்கியத் திருவிழாக்களை, ‘கலை இலக்கியத் திருவிழா’க்களாக வடிவமைக்க வேண்டும். உரைகளோடு, நாடக நிகழ்வுகள், கவிதை வாசிப்புகள், ஓவிய-ஒளிப்படக் காட்சிகள், இலக்கியத்திலிருந்து புனையப்பட்ட திரைக்காட்சிகள், இசை நிகழ்வுகள் என விரிவுபடுத்த வேண்டும். எளிமையும் அழகுணர்வும் மிக்கவையாக அரங்குகள், விளம்பரங்கள் திட்டமிடப்பட வேண்டும். இவ்விழாக்களை நோக்கி மக்கள், இளையோர் தன்னெழுச்சியாகத் திரண்டு வரவைக்க வேண்டும்.
மாற்றம் அவசியம்
நடந்து முடிந்த இலக்கியத் திருவிழாக்களை வரும் ஆண்டுகளிலும் தமிழ்நாடு அரசு அப்படியே படியெடுக்கத் தொடங்குமானால், வெகுவிரைவில் அது ஒரு சடங்காக மாறி தேய்ந்துவிடக்கூடும். எண்பதுகளில் இடதுசாரிகள் உருவாக்கிய ‘கலை இரவுகள்’ பெரும் அலைகளை உருவாக்கின. பாடல்கள், நாடகங்கள், உரைவீச்சுகள் என்று அமர்க்களப்பட்டன. மாற்றங்கள் பெரிதும் இல்லாமல் தொடர்ந்தபோது, அது ஒரு சடங்காக மாறியதைக் காண முடிந்தது. அதுபோலவே தொண்ணூறுகளில் மதுரையில் பெரும் ஆரவாரத்தோடு நிகழ்ந்த ‘தலித் கலை விழாக்கள்’ காத்திரமான கலைச் செயல்பாடாகத் தொடங்கி, செய்ததையே திரும்பச் செய்ததன் மூலமாக நாளடைவில் அது ஒரு அரசியல் சடங்காகத் தேய்ந்து வரவேற்பினை இழந்தது.
திரைப்படங்கள், தொலைக்காட்சி, கைபேசி ஊடகங்களைத் தவிர்த்து, தமிழர்களுக்கு ஆரோக்கியமான கூடும் வெளிகள் இல்லை. மனிதர்கள் நேரடியாக ஒருவரோடு ஒருவர் சந்திக்கும், உரையாடும் பொதுவெளிகள் அருகி வருகின்றன. அதற்கான புதிய வெளிகளாக இத்தகைய கலை இலக்கிய விழாக்களை மாற்ற முடியும். இயந்திரங்களே கற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ள இந்த நூற்றாண்டில் அரசு இயந்திரமும் கற்றுக்கொண்டு, கற்பனை ஆற்றலோடு செயல்பட முடியும்தானே?
- இரா.பிரபாகர்
தமிழ்த் துறைத் தலைவர்
அமெரிக்கன் கல்லூரி
தொடர்புக்கு: profprabahar@gmail.com