ஒரு நிமிடக் கட்டுரை: திரும்புவதற்கான வீட்டின் தொலைவு

ஒரு நிமிடக் கட்டுரை: திரும்புவதற்கான வீட்டின் தொலைவு
Updated on
2 min read

சில மாதங்களாகப் பார்க்கத் திட்டமிட்டிருந்த கிறிஸ்டோபர் நோலனின் ‘இன்டர்ஸ்டெல்லார்’ திரைப்படத்தின் இறுதிப் பகுதியை நேற்று காலை வீட்டில் பார்த்துக்கொண்டிருந்தேன். 21-ம் நூற்றாண்டில் வாழத் தகுதியற்றதாகிப் போகும் பூமியிலிருந்து, மனிதர்கள் வாழ்வதற்கேற்ற கிரகத்தைத் தேடி, பல இன்னல்களையும் காலவெளிப் பிரமாணங்களையும் தாண்டி வெற்றியடைவது குறித்த கதை அது. பதின் வயதுகளில் மகளையும் மகனையும் விட்டுப்போகும் வானியல் விஞ்ஞானிகள் குழுவின் தலைவன் கூப்பர், மீண்டும் தனது மகள் மர்ஃபியை சனிக்கிரகத்தைச் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு விண்வாழிடக் கலத்தில் (Space Habitat) பார்க்கும்போது மகள் தந்தையைவிட இரண்டு மடங்கு முதுமையில் மரணத்தின் வாசலில் இருக்கிறாள். குழந்தைகள் இறப்பதை பெற்றோர் பார்க்கக் கூடாதென்று மகள் சொல்கிறாள். ஒரு தந்தையாக அந்தக் காட்சியில் நான் உறைந்திருந்தபோது, எங்கள் வீட்டு இரும்பு வாயில்கதவு திறந்து ‘ஐயா’ என்று கூப்பிடும் சத்தம் கேட்டது.

நாங்கள் வசிக்கும் மாடி வீட்டில் நான் அமர்ந்திருக்கும் கணிப்பொறிக்குப் பக்கவாட்டில் இருக்கும் ஜன்னலைத் திறந்தேன். இரண்டு மனிதர்கள். ஞாயிற்றுக்கிழமையன்று வருபவர்கள் இவர்கள். ஒருவர் கையில் மண்வெட்டி. இன்னொருவரின் முதுகில் பருத்த பள்ளிக்கூடப் பையை மாட்டியிருந்தார். வெள்ளைச் சட்டை, வேட்டி அணிந்திருந்த இருவரும் ஐம்பதைக் கடந்தவர்கள். முகத்தில் ஒரு வாரத்துக்கு மேலான தாடி. உலர்ந்த கண்கள், வெயில் பழுப்பேற்றிய முகம். அவர்களைப் பார்த்தவுடன் அவர்களது ஊர் தூரத்தில் இருப்பது தெரிந்தது. ஒருவர் கையில் மண்வெட்டி. ‘செடி, புல்லை எல்லாம் வெட்டிச் சுத்தம் செய்துடலாமா?’ என்று கேட்டார்கள். இதைப் போல பெண்களும் வந்து கேட்கிறார்கள். நாங்கள் இருக்கும் வீடு வாடகை வீடு. வீட்டு உரிமையாளர்தான் முடிவு செய்யவேண்டும். அத்துடன் இப்போதைக்கு இந்த வேலைக்கு அவசியமும் இல்லை. ‘வேண்டாம் அய்யா’ என்று சொல்லிவிட்டு ஜன்னலை மூடினேன். திரும்ப ஜன்னலைத் திறந்து அவர்களைப் பார்த்தேன். அவர்கள் மேலே வெறித்தபடி சில நொடிகள் நின்றுகொண்டிருந்தார்கள். வரிசையாகத் தெருவில் இருக்கும் அடுத்தடுத்த வீடுகளைப் பார்த்தார்கள். இது அவர்கள் வேலை கேட்ட முதல் வீடாக இருக்காது. அவர்கள் திரும்பித் தெருவுக்கு வெளியே நடக்கத் தொடங்கினார்கள்.

இவர்களைப் போலவே கொஞ்சம் பழுப்பாகிவிட்ட வெள்ளை வேட்டி சட்டையுடன் நெய் நிறைந்த தூக்குவாளிகளுடன் ஒரு பத்து பேர் சேர்ந்து தெருக்களைப் பிரித்துக்கொண்டு வீடெங்கும் வருகிறார்கள். அவர்கள் வைத்திருக்கும் பொருட்களையோ உழைப்பையோ கௌரவத்துடன் வாங்குவதற்கு நகரத்தில் நபர்கள் குறைந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் கொண்டுவரும் பொருட்களின் அசல்தன்மை குறித்த சந்தேகமும் ஒரு காரணம். அதேபோல நகரத்திலிருந்து விடுமுறைகளில் வெளியேறும் சாலைகளில் விளக்குமாறு, நாட்டுக் கருப்பட்டிப் பெட்டிகளுடன் நிற்கிறார்கள்.

ஒரு ஆலயத்துக்கு வெளியே பூவோ, ஒரு மருத்துவமனைக்கு வெளியே பழமோ விற்கும் பெண்ணுக்குள்ள வருவாய், கௌரவ உத்தரவாதம்கூட இவர்களுக்கு இல்லை. யாசகத்துக்கும் ஊழியத்துக்கும் இடையில் இவர்கள் நிற்கிறார்கள்.

திரும்புவதற்கான வீட்டின் தொலைவு அதிகரிக்க அதிகரிக்க மனிதர்களின் கவுரவமும் பேரம் பேசும் சக்தியும் குறைந்துவிடுகிறது. பிஹாரிலிருந்தும் வடகிழக்கு மாநிலங்களிலிருந்தும் வந்து இங்கே சில சப்பாத்திகளாகவும் கொஞ்சம் உருளைக்கிழங்கு, தக்காளியாகவும் ஆகிவிடக்கூடிய அந்த மெலிந்த மனிதர்களின் ஊரும் மிகத் தொலைவில்தான் உள்ளது.

இவர்கள் திரும்பும்போது ஊர், வீடு, உறவுகள் என்னவாக மாறியிருக்கும்?

-ஷங்கர், தொடர்புக்கு: sankararamasubramanian.p@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in