மாணவர்களுக்குச் சிறப்புப் பேருந்து அவசியம்

மாணவர்களுக்குச் சிறப்புப் பேருந்து அவசியம்
Updated on
1 min read

தமிழ்நாட்டில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பள்ளி, கல்லூரி மாணவர்களில் பெரும்பாலானோர் தினமும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. மாணவர்களுடன், அன்றாடம் வேலைக்குச் செல்பவர்களும், பிற பணிகளுக்காகச் செல்வோரும் காலையில் ஒரே நேரத்தில் பயணம் செய்வதால், இயல்பாகவே பேருந்துகளில் கூட்ட நெரிசல் இருக்கும்.

கூடுதல் பேருந்துகள் இயக்கப்படாததால் இடநெருக்கடியும் அதிகம். மாலையில் வீடு திரும்பும்போதும் இதே பிரச்சினைதான். நிற்க இடமில்லாமல் படியில் தொங்கியபடி செல்லும் மாணவர்கள் ஒருபுறம் என்றால், அந்தப் பிரச்சினையைச் சாகச பாணியில் எதிர்கொண்டு படிக்கட்டிலும் ஜன்னல்களிலும் தொங்கிக்கொண்டுவரும் ஒருசில மாணவர்களும் உண்டு. இந்தச் சூழல் அவ்வப்போது விபத்துகளுக்கும் வழிவகுக்கிறது.

இதைத் தவிர்க்கும் பொருட்டு, கூடுதல் பேருந்துகளை இயக்குவது நல்லது. மகளிருக்கென சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதைப் போல, மாவட்டம் முழுவதும் கூட்ட நெரிசல் மிகுந்த அனைத்து முக்கிய வழித்தடங்களிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டும் பயணம் செய்ய காலை-மாலை இரு வேளைகளிலும் சிறப்புப் பேருந்துகளை இயக்கலாம்.

பள்ளி-கல்லூரி வேலைநாள்களில் இவற்றை இயக்குவது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும். இது மாணவர்களின் சிரமத்தைக் களைவதுடன், அவர்கள் புத்துணர்வுடன் கல்வி நிலையங்களுக்குச் செல்வதற்கும் துணைபுரியும். மாணவர்களுக்கு அரசு ஒதுக்கும் நிதி, மாநிலத்தின் சிறந்த எதிர்காலத்துக்கான முதலீடு என்பதால் இதில் அரசு கணக்குப் பார்க்கக் கூடாது.

போக்குவரத்து, பள்ளிக் கல்வி ஆகிய துறைகளுக்கான மானிய கோரிக்கைகளின்போது இதுதொடர்பான எதிர்பார்ப்புகள் இருந்தன. ஏனோ இதுகுறித்த அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை. அரசு உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டிய விஷயம் இது!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in