

மாற்றுப் பாலினத்தவரான திருநர் சமூகத்தை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து அவர்களுக்கான சமூக அங்கீகாரத்தை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது. அவர்களுக்குச் சட்டபூர்வமான பாதுகாப்பு கிடைக்கும் முன்பாகவே அவர்களுக்கான நல்ல திட்டங்களை அறிவிப்பதிலும் செயல்படுத்துவதிலும் முன்னத்தி ஏராகத் திகழ்ந்தது தமிழ்நாட்டை ஆண்ட / ஆண்டுகொண்டிருக்கும் திமுக அரசு.
2008லேயே ‘அரவாணிகள் நலவாரிய’த்தைத் தமிழ்நாடு அரசு தொடங்கியது; திருநர் கணக்கெடுப்பு நடத்தி, திருநர் அடையாள அட்டையைக் கொடுத்தது. அரசு அளிக்கும் பல சலுகைகளைப் பெறுவதற்கு அந்த அட்டை உதவியது. வாக்காளர் அடையாள அட்டையைத் திருநர் சமூகத்தினர் அவர்கள் விரும்பும் பாலினத்தின் அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்கான உரிமையும் வழங்கப்பட்டது. திருநர்கள் சுயதொழில் தொடங்குவதற்கான மானியங்களையும் தமிழ்நாடு அரசு வழங்குகிறது.
2009லேயே சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் பாலின மாற்று அறுவைசிகிச்சைக்கான பிரிவு தொடங்கப்பட்டது. தற்போது சென்னை, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையிலும், சேலத்திலும் பாலின மாற்று அறுவைசிகிச்சை செய்வதற்கான வசதி விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
இதன் மூலம், இந்தியாவிலேயே பாலின மாற்று அறுவைசிகிச்சையை முறையாக மேற்கொள்ளும் முதல் மாநிலம் என்னும் பெருமையையும் தமிழ்நாடு பெற்றிருக்கிறது. நாடாளுமன்றத்தில் திருநங்கைகள் உரிமை மசோதாவை திருச்சி சிவா எம்.பி. அறிமுகம்செய்தது முதல், பெண்களோடு திருநர் சமூகத்தினரும் சாதாரணப் பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணிக்கலாம் என்கிற அறிவிப்புவரை திமுக அரசு திருநர் சமூகத்துக்குத் தொடர்ந்து நன்மைகளைச் செய்துவருகிறது.
முந்தைய அதிமுக ஆட்சியில் திருநருக்கு இடஒதுக்கீடு கேட்டு இரண்டு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. அதன் நீட்சியாக, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அடியொட்டி மிகவும் பிற்படுத்தப்பட்டவர் (எம்பிசி) பிரிவின்கீழ் தங்களுக்கான சலுகைகளைத் திருநர் பெற்றுக்கொள்ளலாம் என்று இன்றைய அரசு அறிவித்திருக்கிறது.
திருநர்கள் பட்டியல் சாதியினராக இருந்தால், அந்தப் பிரிவின்கீழ் ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கொள்கை முடிவு எடுத்துள்ளது. இது திருநர் சமூகத்திடம் வரவேற்பைப் பெற்றது. அதேவேளையில், ‘சாதிப் பட்டியலோடு பாலினத்தைக் கொண்டுசேர்ப்பது சரியா?' என்று கொதித்து எழுந்த சமூகச் செயல்பாட்டாளர்களும் உண்டு. உண்மையில், திருநர் சமூகத்தினர் இன்றைக்கு எதிர்பார்ப்பது தங்களுக்கான தனி இடஒதுக்கீட்டையே!
திருநர் சமூகத்தைச் சேர்ந்த பலரும் இன்றைக்குப் பள்ளி இறுதி வகுப்பைத் தாண்டி, பட்டதாரிகளாக இருக்கிறார்கள். முதல் தலைமுறை கல்வியாளர்களாக உருவான அவர்கள், அரசுப் பணிகளில் சேர்வதற்கு குரூப் 4 போன்ற தேர்வுகளை எழுதுகிறார்கள். அப்படி அண்மையில் எழுதிய திருநர்களில் 300க்கு 210 மதிப்பெண்கள் எடுத்த நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் எம்பிசி பிரிவின்கீழ் வருவதாலேயே நிராகரிக்கப்பட்டிருக்கின்றனர்.
தொடர் புறக்கணிப்புகளுக்கு ஆளான ஒரு சமூகம், எம்பிசி என்னும் பிரிவில் மற்ற ஆண்களோடும் பெண்களோடும் போட்டி போட முடியுமா எனச் சிந்திக்க வேண்டும். கல்வி, அரசுப் பணி, விளையாட்டு என எல்லா நிலைகளிலும் திருநருக்கான தனி இடஒதுக்கீட்டைத் தமிழ்நாடு அரசு வழங்குவது காலத்தின் கட்டாயம். இந்த முன்னெடுப்பின் மூலம் திருநர் வாழ்வை மேம்படுத்த இந்தியாவுக்கே நாம் வழிகாட்டலாம்!
ஏப்ரல் 15: தேசிய திருநர் தினம்
தொடர்புக்கு: ravikumar.cv@hindutamil.co.in