அடுக்குமாடிக் குடியிருப்பு: நிர்வாக ஒழுங்கை நிலைநாட்டும் வழி

அடுக்குமாடிக் குடியிருப்பு: நிர்வாக ஒழுங்கை நிலைநாட்டும் வழி
Updated on
1 min read

தமிழ்நாடு அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமைச் சட்டம் 2022, கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமியால் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாடு அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமைச் சட்டம் 1994ஐ ரத்துசெய்து, புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

சில முக்கியமான மாற்றங்களைக் கொண்டுள்ள இப்புதிய சட்டத்தின்படி, நான்கு குடியிருப்புகளுக்கு மேல் உள்ள அடுக்குமாடிக் கட்டிடங்களுக்கு ஒரு சங்கம் இருக்க வேண்டும்.

தற்போதைய சூழலில் ஒவ்வொரு அடுக்குமாடிக் குடியிருப்பிலும் குடியிருப்பவர்களின் பொதுப் பயன்பாட்டுக்கான சேவைகளை நிர்வகிப்பதற்குச் சங்கம் உண்டு. இதுபோன்ற சங்கங்கள் மாதக் கட்டணம் அல்லது ஆண்டுக் கட்டணம் வசூலித்து, அந்த நிதியைக் கொண்டு மின் இணைப்பு, தண்ணீர் விநியோகம் உள்ளிட்ட பொதுச் சேவைகளை அளிக்கின்றன.

சிலர் சங்கத்துக்குச் செலுத்த வேண்டிய தொகையைச் சரியான காலத்துக்குள் செலுத்தாமல் இழுத்தடிப்பது அல்லது செலுத்தாமலேயே இருப்பது என அலட்சியம் காட்டுகின்றனர். இவர்களால் ஒழுங்காகச் சந்தா செலுத்துபவர்களுக்கும் அதிகச் சுமை உண்டாகிறது.

குடியிருப்பின் மின்விளக்குகள், மின்தூக்கிகள் போன்றவை எல்லாருக்கும் பொதுவானவை. கட்டணம் செலுத்தாதவர்களுக்கு மட்டும் அவற்றைத் தனியாகத் தடை செய்ய முடியாது. பெரும்பாலான அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தண்ணீர்க் குழாயும் பல வீடுகளுக்கும் பொதுவாகவே உள்ளது.

தனியாக ஒரு வீட்டுக்கு மட்டும் தண்ணீரை நிறுத்த முடியாது. சங்க நிர்வாகிகளுக்கு இதுபோன்ற சில நெருக்கடிகள் உள்ளதால், கட்டணம் செலுத்தாதவர்களுக்கும் சேவையைத் தொடர வேண்டிய நிலை உள்ளது.

தற்போதுள்ள நடைமுறையில் சிவில் வழக்குப் பதிவுசெய்து சங்கத்துக்கு வர வேண்டிய தொகையை வசூலிக்கலாம் என்பது நடைமுறைச் சாத்தியம் இல்லாதது. தற்போது அமலுக்கு வரவிருக்கும் புதிய சட்டம் இந்தச் சிக்கலுக்கு ஒரு தீர்வினைக் கொண்டுள்ளது.

ஓர் உறுப்பினர் கட்டணங்களைச் செலுத்தாத பட்சத்தில், சங்கம் அவரது சொந்த வீட்டின்மீது, சட்ட மொழியில் ‘lien’ என்று குறிப்பிடப்படும் ஓர் உரிமையை உருவாக்கலாம்.

அதாவது, சங்கத்துக்குச் செலுத்த வேண்டிய நிலுவையைச் செலுத்தாமல், அந்தக் குடியிருப்பை அவரால் விற்க முடியாது; ஆனால், அது மட்டுமே போதுமானது அல்ல. பராமரிப்புக் கட்டணத்தைச் செலுத்தாத குடியிருப்புகளுக்கு மின் இணைப்பைத் துண்டிப்பதற்குச் சட்டத்தில் வழிசெய்ய வேண்டும்.

பராமரிப்புக் கட்டணத்தை நிலுவையில் வைத்திருப்பவர்களைப் பற்றிய தகவல்களை சிபில் போன்ற அமைப்பில் பதிவிட அனுமதிக்கலாம். குடியிருப்புச் சங்கங்கள் இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தினால், இந்த நபர்கள் வங்கிகளில் கடன் வாங்குவதில் சிரமம் ஏற்படும்.

அத்துடன், ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனியாகத் தண்ணீர்க் குழாய் நிறுவத் திட்டஅனுமதியிலேயே வழிவகை செய்ய வேண்டும். மிக முக்கியமாக, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியாதபட்சத்தில்தான் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

- எஸ்.கல்யாணசுந்தரம் | ஓய்வுபெற்ற வங்கியாளர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in