Published : 10 Apr 2023 06:18 AM
Last Updated : 10 Apr 2023 06:18 AM
இந்திய தேச வரைபடத்தைத் தயார் செய்வதற்காக, நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் அங்குலம் அங்குலமாக நில அளவை செய்யும் பணி 1802 ஏப்ரல் 10இல் சென்னைக்கு அருகில் உள்ள செயின்ட் தாமஸ் மலைச் சிகரத்தில் வில்லியம் லாம்ப்டன் என்ற நிலஅளவையாளரால் தொடங்கப்பட்டது. இந்தியப் பெருங்கோண நில அளவை (The Great Trigonometrical Survey of India) என அழைக்கப்படும் இந்தப்பணிபின்னாட்களில் உலக அளவில் புகழ் பெற்றது.
இந்தப் பணியின்போது நாக்பூரில் வில்லியம்லாம்ப்டன் மரணமடைந்தார். அவரது உதவியாளராகப் பணியாற்றிய ஜார்ஜ் எவரெஸ்ட் இந்தப் பணியைத் தொடர்ந்தார். உலகின் மிக உயரமான சிகரமாக, அப்போது பிரிட்டிஷாரால் ‘சிகரம் XV’ என அழைக்கப்பட்ட மலைச்சிகரம் அறிவிக்கப்பட்டது இந்தப் பணியின்போதுதான். பெருங்கோணக் கணக்கீடுகளை உறுதிசெய்யும் பணி, இந்தியக் கணிதவியல் வரைவாளர் ராதாநாத் சிக்தாரிடம் வழங்கப்பட்டது. கணக்கீடுகள் ராயல் ஜியோகிராபிகல் சொசைட்டிக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
ஜார்ஜ் எவரெஸ்ட் ஓய்வுபெற்ற நிலையில், அவர் கண்டறிந்த உயரமான சிகரத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. இந்த மாபெரும் பணியை மேற்கொள்ள லாம்ப்டனும், எவரெஸ்ட்டும் பயன்படுத்திய 500 கிலோ எடை கொண்ட தியோடலைட் கருவி இன்றும் டேராடூனில் உள்ள இந்திய நிலஅளவை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
கடக்க வேண்டிய தொலைவு: இந்தியப் பெருங்கோண முக்கோண நிலஅளவைக் கோண நிலையங்களை அடிப்படையாகக் கொண்டுதான் எல்லா மாநிலங்களிலும் தனியார் மற்றும் அரசு நிலங்களில் எல்லைக் குறியீடுகள் நிறுவப்பட்டன. அதன் அடிப்படையில் நில ஆவணங்கள் தயார்செய்யப்பட்டு, நவீனத் தொழில்நுட்பம் மூலம் இணையதளத்தில் வீட்டில் இருந்தபடியே நில ஆவண நகல்களைப் பெற இன்றைக்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
200 ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து, மின்சார வசதிகள் இல்லாத காலத்தில் இந்த மகத்தான பணியை மேற்கொண்ட நிலஅளவைப் பணியாளர்களில் பலர் தொற்று நோய்களாலும், கொடிய மிருகங்களாலும் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அந்தத் தியாகத்தின் பயனைத் தற்போது நாம் பயன்படுத்திவரும் நிலையில், நில நிர்வாகத்தில் இன்றும் கடக்க வேண்டிய தூரம் மிக அதிகம்.
நாளுக்கு நாள் பெருகிவரும் மக்கள்தொகை, நகர்ப்புற வளர்ச்சி, புறநகர் விரிவாக்கம், பெருந்திட்ட சாலைகள், மெட்ரோ ரயில், உயர்மின் கோபுரங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் போன்ற சமூகப் பொருளாதார முன்னேற்றங்களின் விளைவுகளைக் கருத்தில் கொண்டு நிலத்தின் தனி உரிமையாளர்கள், அரசு மற்றும் பொது நிறுவனங்கள் ஆகியவற்றின் நிலப்பகுதிகளின் சட்டபூர்வமான எல்லைகள், பரப்பளவு, நிலவரி ஆகியவற்றை நிர்ணயித்து நீர்வளம் மற்றும் கனிமவள ஆதாரங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்க ஏதுவாகநில ஆவணங்களைத் தொடர்ந்து திறம்படப் பராமரிக்கவேண்டியது இன்றைய இன்றியமையாத தேவையாகும்.
நடைமுறைப் பிரச்சினைகள்: ஆரம்பகாலங்களில், நிலஅளவைப் பணியின்போது தயாரிக்கப்படும் கிராம ‘அ’ பதிவேட்டில் முதல் பக்கத்தில் அந்தக் கிராமத்தின் வரலாற்றுக் குறிப்பு இடம்பெறும். இதில் அந்தக் கிராமத்தின் நஞ்சை, புஞ்சை நிலங்கள்; நஞ்சை நிலமாக இருப்பின் அந்த சர்வே எண், குறிப்பிட்ட நீர்ப்பாசன ஆதாரம் எது என்பன உள்ளிட்ட விவரங்களும் காணப்படும்.
ஆனால், தற்போது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் ‘அ’ பதிவேட்டில் இவை இடம்பெறுவதில்லை. ஒரு நிலத்துக்கு முக்கியமான நீர்ப்பாசன ஆதாரத்தைக்கூடக் குறிப்பிடாமல் நில ஆவணங்களைக் கணினி மூலம் பராமரிப்பது நில நிர்வாகத்தின் அடிப்படையையே கேள்விக்குறியாக்கிவிடும்.
ஒவ்வோர் ஆண்டும் பல லட்சம் பத்திரப் பதிவுகள் நில ஆவணங்களில் உரிமைமாற்றம் செய்யப்படாமல் விடுபட்டிருக்கின்றன. அந்த ஆவணங்களைத் தற்போதைய சூழலுக்கு மேம்படுத்துவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுவருவதால் நில நிர்வாகத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.
கடந்த 30 வருடங்களாக நில ஆவணங்களை மேம்படுத்தும் வகையில் மறு நிலஅளவை மேற்கொள்ளப்படாததாலும், பட்டா மாறுதல் செய்யும்போது கிரயம் பெற்றவர் பெயரை நீக்கம் செய்யாததாலும் நில ஆவணங்களில் சம்பந்தமில்லாத 50 பேர், 100 பேர் பெயர்கள் கூட்டுப் பட்டாவில் பதிவாகி நில ஆவணங்கள் நிலவியலின் உண்மை நிலை பிரதிபலிக்காமல் ஏட்டளவில்தான் உள்ளது.
ஒரு நிலத்தின் சரியான எல்லைகள், பரப்பளவு, உரிமையாளரை நிர்ணயம் செய்து அவருக்கான நில உரிமைச்சான்று வழங்கத் தாமதம் ஏற்படும் சூழலில் மற்றொரு நபர் உரிமை கோரி மனு செய்தால், அந்த நிலம் பிரச்சினைக்குரிய நிலமாக மாறி இருதரப்பினரும் நீதிமன்றத்தை அணுகி, அந்த நிலத்தைத் தொடர்ந்து யாரும் பயன்படுத்த முடியாமல் ஒரு தடை உத்தரவைப் பெற்றுவிடுவார்கள். இப்படி நீண்ட காலமாக யாராலும் பயன்படுத்தப்படாத நிலங்கள் சமூகவிரோதச் செயல்களுக்கு இடமளித்துவிடுவதுண்டு.
செய்ய வேண்டியவை: ‘நிலத்தின் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்துவரும் நிலையில், ஒவ்வொரு சதுர அடி நிலத்தையும் கவனமாகவும் துல்லியமாகவும் அளவுசெய்து, நில ஆவணங்களில் பதிவுசெய்து நில உரிமையாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு நில உரிமைச் சான்றை வழங்கவும், அரசுத் துறை சார்ந்த நிலங்களைச் சரியான முறையில் நில ஆவணங்களில் பதிவுசெய்யவும் நில நிர்வாகத் துறையை முற்றிலும் சீரமைத்து நில நிர்வாகத் துறையை ஒரு தனி அமைப்பாகக் கட்டமைக்க வேண்டும்.
நில ஆவணங்கள் நிலவியல் அமைப்பினைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்க வேண்டும்’ என்கிறது மத்திய அரசு. ஆனால், 150 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட கிராமப் படங்களில் இதுவரை தற்போது நிலவியலில் உள்ளவாறு மாற்றம் ஏதும் செய்து புதுப்பிக்கப்படவில்லை. இது நில நிர்வாகத்தின் பின்னடைவை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக உள்ளது.
100 வருடங்களுக்கு முன்பு ஒற்றையடிப் பாதையாகவோ மண்சாலையாகவோ கிராமப் படத்தில் வரையப்பட்டுள்ள சின்னம் (Topo Detail Mark) இப்போது நிலவியலில் தேசிய நெடுஞ்சாலையாகவோ மாநில நெடுஞ்சாலையாகவோ உள்ளது. எனவே, இன்றைய நிலையைப் பிரதிபலிக்கும் நிலவியல் மாற்றங்களைக் கிராம வரைபடத்தில் மேற்கொண்டு நில ஆவணங்களைப் புதுப்பிப்பது நில நிர்வாகத் துறையின் முக்கியப் பணியாகும்.
ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் உள்ள குக்கிராமங்களைக் காட்டும் வட்ட ‘அ’ பதிவேடு மற்றும் கிராம படம் ஆகியவை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டவை. தற்போது அனைத்துக் கிராமங்களிலும் லட்சக்கணக்கான புறநகர் குடியிருப்புப் பகுதிகள் உருவாகிவிட்ட நிலையில், இவற்றைக் கிராமப் படத்திலும் வட்ட ‘அ’ பதிவேட்டிலும் பதிவுசெய்து ஆவணப்படுத்தும் பணி இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, ஒரு தனி மனிதரின் தேவைக்கு மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் தற்கால மற்றும் எதிர்காலத் தேவைக்கும்ஏற்ப நிலத்தைப் பகிர்ந்தளித்து, நில உரிமையாளர்களின் சட்டபூர்வமான நலன்களைப் பேணும் வகையிலும், அரசின் அனைத்துத் துறைகளுக்கும் போதுமான அளவில் பயன்தரக்கூடிய விதத்திலும் நில நிர்வாகத்தை நவீனத் தொழில்நுட்பத்தின் மூலம் மேம்படுத்திட அரசு ஆவன செய்ய வேண்டும் என்பதே தேசிய நிலஅளவை நாளில் அனைவரின் எதிர்பார்ப்பும் ஆகும்.
ஏப்ரல் 10: தேசிய நிலஅளவை நாள்
- வே.முத்துராஜா | தமிழ்நாடு நில அளவைவக் கணிக வரைவாளர் ஒன்றிப்பு மற்றும் தொழிநுட்ப மேலாளர், தொடர்புக்கு: muthuvel64@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT