

எல்லாரும் தமிழ் அகரமுதலியை வைத்திருக்க வேண்டும் என்று கோருவேன். ஓர் ஐயம் என்றால் உடனே அதனை நாடித் தெளிவுறலாம். வீட்டில் ஆங்கில அகராதி வைத்திருப்பார்கள். தமிழகராதி வைத்திருக்க மாட்டார்கள். தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் முதற்பதிப்பாக வெளியிட்ட ‘தமிழ் தமிழ் அகரமுதலி’ என்னும் நூலை முன்பே பரிந்துரைத்திருந்தேன். மு.சண்முகனார் தொகுத்தது.
தமிழ்நாட்டரசின் வெளியீடு. என் வகுப்பு மாணாக்கர்களிடமும் ‘தமிழ் தமிழ் அகரமுதலி’யை வாங்கிப் பயனுறுக என்று அறிவுறுத்தியிருந்தேன். எங்கும் கிடைக்காதபோது எப்படி வாங்குவது? நற்பேறாக அந்நூல் இணையத்தில் கிடைத்தது. அவ்விணைப்பைப் பகிர்ந்திருந்தேன். அதனைத் தரவிறக்கி அச்செடுத்து நூற்கட்டு செய்துவிட்டார் என் மாணாக்கர்களில் ஒருவரான கோகுலநாதன்.
இந்நூலின் பதிப்பு விலை ஆயிரத்து இருநூறு. அச்செடுக்க எண்ணூறு, நூற்கட்டாக்க நூறு என்று தொள்ளாயிரம் விலையில் முடித்தும்விட்டார். இத்தகைய அகராதிகள் எப்போதும் குறையில்லாமல் கிடைக்க வேண்டும். ‘தற்காலத் தமிழகராதி’, ‘லிப்கோ அகராதி’ போன்றவை எப்படிப் பரவின? தனிப்பதிப்பக நூல்களான அவை சந்தையில் தொடர்ந்து கிடைத்துக்கொண்டிருந்தன. வேறு அகராதிகளே இல்லை.
அதனால் பரவின. எண்பத்தைந்தாம் ஆண்டு வெளியிடப்பட்ட தலைசிறந்த தமிழகராதியான ‘தமிழ் தமிழ் அகரமுதலி’ எங்குமே கிடைக்கவில்லை. நான் அந்த அகராதியினைக் கண்டுபிடித்ததும் பெருங்கதைதான். புத்தகக் கண்காட்சி அரங்கொன்றில் கீழ்க்குப்பையில் கிடக்கக் கண்டேன். எடுத்துப் புரட்டிப் பார்த்ததும் அதன் பெருமை புலப்பட்டது. நான் வாங்கியது முதற்பதிப்பு நூல். அதன் விலை வெறும் நூறு என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பிற்பாடு என் தமிழை ஆக்கிப் பெருக்கியதற்கும் அந்நூற்குப் பங்குண்டு.
இனிமேலாவது மு.சண்முகனார் தொகுத்த ‘தமிழ் தமிழ் அகரமுதலி’ என்னும் தமிழகராதி சிறிதும் தட்டுப்பாடின்றி எங்கும் எப்போதும் கிடைக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டியது அரசினர் பொறுப்பு. தமிழ்க் கல்வியிலும் வளர்ச்சியிலும் பரவலிலும் முதன்மையான அகராதி நூல்களின் இருப்பு மிகமிக இன்றியமையாதது.
- கவிஞர் மகுடேசுவரன்