

நூறு நாள் வேலைத் திட்டத்தில் உடலுழைப்புச் செய்யும் தொழிலாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி, மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. எங்கள் கிராமத்து டீக்கடையில் அச்செய்தியை வாசித்த ஒரு விவசாயி, ‘சரிதான்... இதுகளுக்குச் சம்பள உயர்வு வேறயா?’ என்று கடுப்புடன் சொன்னார்.
‘மரத்தடி நிழலில் உறங்கி எந்திரிச்சு வாறதுக்குச் சம்பள உயர்வு அவசியந்தான்’ என்று இன்னொருவர் பக்க மேளம் வாசித்தார். ‘ஏழை எளியதுக பொழச்சுட்டுப் போட்டுமேன்னு யோசிக்க மாட்டீங்களா?’ என்று நான் குறுக்கே பாய்ந்தேன். ‘ஏழைகளா... இவங்கள்லாம் போன்ல ஆர்டர் போட்டுத் தினம்தினம் மதியம் பிரியாணி வாங்கிச் சாப்டுறாங்க தெரியுமா?’ என்று என் பந்தைத் திருப்பி அடித்தார் முதலாமவர்.
திட்டம் வந்த வரலாறு: சம்பள உயர்வு ஒன்றும் ஓஹோ என்றெல்லாம் இல்லை. ரூ.281இலிருந்து ரூ.293ஆக உயர்ந்திருக்கிறது. பன்னிரண்டு ரூபாய்தான் உயர்வு. கிராமப்புற, நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தாரிடையே நூறு நாள் வேலைத் திட்ட எதிர்ப்புணர்வு, அது வந்த காலம்தொட்டே இருந்துவருகிறது. 2005ஆம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் இடதுசாரிகள் தந்த அழுத்தத்தால் இத்திட்டம் அமலுக்கு வந்தது.
அதுவும் எத்தகைய பின்னணியில்? 1995 முதல் ஏறுமுகமாக இருந்த விவசாயிகள் தற்கொலை என்கிற பின்னணியில். 1995க்கும் 2014க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் மட்டும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். கடன் சுமை, விளைச்சல் இன்மை, வறுமை, நிவாரண உதவிகளில் ஊழல் எனப் பல காரணங்களால் இந்தத் தற்கொலைகள் நிகழ்ந்தன.
பத்திரிகையாளர் பி.சாய்நாத் இந்தியாவின் பல மாவட்டங்களுக்கும் பயணம் செய்து, கிராமப்புற மக்களை வாட்டும் வறுமை குறித்துப் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி, இந்தியாவின் மனசாட்சியைத் தட்டியெழுப்ப முயன்றுகொண்டிருந்தார். ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் கிராமப்புற விவகாரங்களின் ஆசிரியராக (Rural affairs Editor) சாய்நாத் ஆற்றிய பணிகளின் தொகுப்பாக ‘நீரோவின் விருந்தினர்’ என்கிற ஆவணப்படம் (இயக்கம்: தீபா பாட்டியா) 2009இல் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்படத்தின் மையக் கருத்து மகாராஷ்டிர மாநிலத்தின் விவசாயிகள் தற்கொலைதான்.
கல்நெஞ்சக்காரர்கள்: ‘ரோம் நகரம் தீப்பற்றி எரிந்தபோது, நீரோ மன்னன் பிடில் வாசித்துக்கொண்டிருந்தான்’ என்கிற வாசகம் உலகப் புகழ்பெற்றது. ‘நீரோவின் விருந்தினர்’ எனும் ஆவணப்படம் நீரோ மன்னனின் இன்னொரு கொடூர முகத்தையும் அறிமுகப்படுத்தியது.
அடிக்கடி வெளிநாட்டு மன்னர்களைத் தன்னுடைய விருந்தினர்களாக ரோமாபுரிக்கு வரவழைத்து நீரோ மன்னன் விருந்தளிப்பானாம். அந்த விருந்து மண்டபத்தில் வெளிச்சம் வேண்டும் என்பதற்காக அடிமைகளைத் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு, அவர்கள் மீது நெருப்பை வைத்து எரிப்பானாம். என்ன ஒரு கல்நெஞ்சன்!
மன்மோகன் சிங்கின் பொருளாதாரக் கொள்கை பன்னாட்டு முதலாளிகளுக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்பதாக இருந்தது. அந்த விருந்தினருக்காக இந்தியாவின் விவசாயிகளைக் கொளுத்தி, வெளிச்சம் போடுகிறார்கள் என்பதுதான் அந்த ஆவணப்படத்தின் விமர்சனம்.
நீரோ மட்டுமா குற்றவாளி? நீரோவின் விருந்தினர்களும் குற்றவாளிகள்; விவசாயிகள் எரிந்து கருகுவதைக் கண்டும் மௌனம் காக்கும் நாம் அனைவருமே குற்றவாளிகள் என்று அப்படம் நம்மை நோக்கியும் விரலை நீட்டியது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராடிக்கொண்டிருந்தபோது மெளனம் காத்த மோடியின் அரசு வரைக்கும் அந்தச் சுட்டுவிரல் நீள்கிறது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
மடைமாற்றப்படும் கோபம்: முற்றிலும் விவசாயம் கைகொடுக்காத பின்னணியில், விவசாயிகளும் லட்சக்கணக்கில் விவசாயக் கூலிகளாக இறக்கம் பெற்றுவந்த பின்னணியில், பட்டினிச் சாவைத் தவிர்க்கும் நல்லெண்ணத்தில் குறைந்தபட்சமாக ஆண்டுக்கு 100 நாள்களுக்கு அரசு வேலை கொடுத்து, உயிர்த் தண்ணீர் ஊற்றும் ஏற்பாடுதான் இந்த நூறு நாள் வேலைத் திட்டம் என்பதை நடுத்தரவர்க்கம் மறந்துவிடுகிறது.
குறைந்த கூலிக்கு வந்துகொண்டிருந்த விவசாயத் தொழிலாளிகளை இந்தத் திட்டம் அந்தப் பக்கம் இழுத்துக் கொண்டுவிட்டதே என்பதுதான் உள்ளூர் விவசாயிகளின் கோபம். விவசாயிகளின் வாழ்க்கையும் விவசாயத் தொழிலும் கடுமையான நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டிருக்கும்போது, அரசின் மீது வரவேண்டிய கோபம், இந்தப் பாவப்பட்ட ஏழை உழைப்பாளிகள் மீது பாய்கிறது. இந்த மடைமாற்றத்தை நடுத்தரவர்க்கம் ஆதரிக்கிறது.
வேலை பார்க்காமல் அவர்கள் சம்பளம் வாங்குவதாகப் புகார் சொல்லும் இந்த நியாயமார்கள் பி.சாய்நாத்தின் கட்டுரைகளை வாசிக்க வேண்டும் எனப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தமிழிலேயே அவருடைய நூல், ‘ஒரு நல்ல வறட்சியை எல்லோரும் நேசிக்கிறார்கள்’ எனும் தலைப்பில் வெளிவந்திருக்கிறது.
தூங்கும் மனசாட்சி: 2008இல் விழுப்புரம் மாவட்டம் ரெட்டணை கிராமத்தில் இந்த நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளிகளுக்குத் தர வேண்டிய ரூ.80 தினக்கூலியைக் குறைத்துக் கொடுத்ததால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல் துறை தடியடி நடத்தித் துப்பாக்கிச்சூடும் நடத்தியது.
அச்சம்பவம் குறித்துப் பேசிய அன்றைய அமைச்சர் ஒருவர், வேலை செய்யாமல் ஊதியம் வாங்கும் எண்ணம் தொழிலாளர்களிடம் வளர்ந்துவருவதாகப் பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்தார். எல்லாருமே யோக்கியமாக இருப்பதுபோலவும் 60 ரூபாய் தினக்கூலி பெறும் தொழிலாளிகள்தாம் ஏமாற்று வேலையில் ஈடுபடுவதுபோலவும் பேசுகிறவர்களின் மனசாட்சியை எப்படித் தட்டியெழுப்புவது?
மகளிர் உரிமைத்தொகைபோல இந்த ஏழை மக்களுக்குச் சும்மா காசு கொடுத்தாலும் தப்பில்லைதான். சமூக நலத் திட்டங்களை அரசுகள் கைகழுவும் போக்கு இந்தத் தனியார்மயக் காலத்தில் அதிகரித்துவரும்போது சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படைத் தேவைகளுக்கான செலவு அதிகரித்துவருவதும் அவற்றைத் தொழிலாளர்கள் தம் குறைந்த கூலியைக் கொண்டே சந்திக்க வேண்டியிருப்பதும்தான் கள யதார்த்தம்.
பட்டினிச் சாவு தமிழகத்தில் இல்லாமல் இருக்கலாம். ஆனால், வறுமை என்பது பட்டினி என்கிற ஒரே ஒரு குறியீட்டால் மட்டும் அளவிடப்படுவதில்லை. சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல், குடியிருப்பு, சத்தான உணவு எனப் பல காரணிகள் இருக்கின்றன. இந்தப் பின்னணியில்தான் இலவசங்களை நாம் வரவேற்க வேண்டியுள்ளது. நூறு நாள் வேலைத் திட்டத்தையும் வற்புறுத்த வேண்டியிருக்கிறது. கொஞ்சம் யோசியுங்கள் நியாயமாரே!
- ச.தமிழ்ச்செல்வன் | எழுத்தாளர், பண்பாட்டுச்செயல்பாட்டாளர்; தொடர்புக்கு: tamizh53@gmail.com