

குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்திருக்கும் புகார்கள் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. இவ்விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசுத் தரப்பு அளிக்கும் விளக்கம் திருப்திகரமாக இல்லை. குறிப்பாக, அறிவுத்தளத்தில் பெரிதும் மதிக்கப்படும் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அளிக்கும் பதில்கள் மிகுந்த ஏமாற்றம் அளிக்கின்றன.
24 லட்சம் பேருக்கு குரூப் 4 தேர்வை நடத்தத் தேவைப்படும் 100 கோடிப் பக்கம் கொண்ட கேள்வித்தாள்கள் அச்சிட அரசுக்கு ரூ.48 கோடி வீண் செலவு என்கிறார் அமைச்சர். காகிதங்களுக்காகக் காடுகள் அழிக்கப்படுவதாகவும் ஆதங்கப்படுகிறார். தற்போது தேர்வர்களிடம் விண்ணப்பத்துக்காகத் தலா ரூ.100 வசூலிக்கப்பட்டிருக்கிறது என்றால், ரூ.24 கோடி அரசுக்கு வருமானம்.
அதை அவர் கணக்கில்கொண்டாரா எனத் தெரியவில்லை. வெளிப்படைத் தன்மையைப்பறைசாற்றத் தேர்வர்கள் தத்தமது ஒ.எம்.ஆர். விடைத்தாள்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்ற முறையைக் கொண்டுவரலாமே? ஏற்கெனவே, குரூப் 1, குரூப் 2 முதன்மைத் தேர்வர்கள்தத்தமது விடைத்தாள்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றமுறையை இந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்திய பெருமை டிஎன்பிஎஸ்சிக்கு இருக்கிறது.
60 அல்லது 80பக்கங்கள் கொண்ட முதன்மைத் தேர்வின் விடைத்தாளையே பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்த டிஎன்பிஎஸ்சிக்கு வெறும் இரண்டு பக்கங்கள் கொண்ட ஒ.எம்.ஆர். தாள்களைப் பதிவிறக்கம் செய்யஏற்பாடு செய்வதில் என்ன சிரமம்?
தேர்வு முடிந்தவுடனே ஒ.எம்.ஆர். கார்பன் நகலை மாணவர்களுக்குக் கொடுக்கும் முறையையும் செயல்படுத்தலாம் (இந்த முறையைப் பல்வேறு தேர்வாணையங்கள் பின்பற்றுகின்றன). அதன் பிறகு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்போது ஒ.எம்.ஆர். விடைத்தாள்களைப் பதிவிறக்கம்செய்யும் முறையையும் வைத்தால், தேர்வர்கள் அவர்களிடத்தில் இருக்கும் கார்பன் நகலையும் தேர்வு முடிவுக்குப் பிறகு பதிவிறக்கம் செய்யப்படும் ஒ.எம்.ஆர். நகலையும் ஒப்பீடு செய்துகொள்ள முடியும். பெரும்பாலான குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளியும் வைக்கப்படும்.
பதிவெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளைப் பார்க்கும் முறையைத் தவிர்த்து, தேர்வெழுதிய அத்தனைத் தேர்வர்களின் மதிப்பெண், கம்யூனல் தர வரிசை, ஒட்டுமொத்தத் தரவரிசை ஆகியவற்றைபி.டி.எஃப். வடிவில் வெளியிடும்போது, ஒரே வரிசை எண்களில் வரிசையாக முறைகேடுகள் மூலமாக வெற்றிபெற்றவர்களை எளிதில் கண்டுபிடிக்க இயலும். பல்வேறு முறைகேடுகள் இந்த வடிவிலான தேர்வு முடிவின் மூலம் அம்பலப்பட்டுள்ளது வரலாறு. யூ.பி.எஸ்.சி. இந்த முறையைப் பின்பற்றிவருவது குறிப்பிடத்தக்கது.
எல்லாவற்றுக்கும் மேலாக டிஎன்பிஎஸ்சி தாமாக முன்வந்து இதுபோன்ற தேர்வு முடிவுகளில் மாவட்டம் வாரியாக, தேர்வு மையம் வாரியாகத் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை, தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை ஆகிய விவரங்களை வெளியிட்டால், அத்தனைக் குற்றச்சாட்டுகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்பது மட்டுமல்ல, ‘எங்கள் பயிற்சி மையத்தில் படித்த 2,000 பேர் வெற்றி’ எனச் சொல்லி போலி விளம்பரம் தேடுபவர்களையும் அப்புறப்படுத்தலாம்.
- சத்யா | போட்டித் தேர்வு ஆலோசகர்; தொடர்புக்கு: sathyaiasacademy@gmail.com