Published : 03 Sep 2017 10:05 AM
Last Updated : 03 Sep 2017 10:05 AM

நம் பிள்ளைகளை ‘ப்ளூ வேல்’ விபரீதத்திலிருந்து பாதுகாப்பது எப்படி?

து, 80-களின் தொடக்கத்தில் ஏதோ ஒரு வருடம். காலையில் பள்ளிக்குச் சென்ற எங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தி - இன்று முழுவதும் அனைத்து மாணவர்களுக்கும் கடற்கரையில் பணி. காரணம் - நூற்றுக்கணக்கான திமிங்கிலங்கள் கரைக்கு வந்து இறந்து கிடக்கின்றன. கொளுத்தும் வெயிலில் அவற்றின் சடலங்கள் கெட்டுப்போய் துர்நாற்றம் அடிப்பதைத் தவிர்க்க, அவற்றை மீண்டும் கடலுக்குள் தள்ளிவிட வேண்டும்; அல்லது புதைக்க வேண்டும். கடற்கரை சென்றவுடன் பார்த்த காட்சியின் அதிர்ச்சி ஆண்டுகள் கடந்தும் அப்படியே மனதில் இருக்கிறது. கண்ணுக்கெட்டிய தொலைவில் வரிசையாகக் கரையில் ஒதுங்கிய திமிங்கிலங்கள். ஊரின் பெரியவர்கள் கூகுளாகவும் விக்கிபீடியாவாகவும் இருந்த காலம் என்பதால் இது பற்றிய பல கதைகளை கேட்டிருக்கிறேன். கிட்டத்தட்ட அனைத்துமே அறிவியல் ஆதாரமற்றவை.

ஆண்டுகள் கழித்து இதைப் பற்றி தெரிந்துகொள்ள தலைப்பட்டேன். கருவிகள் உருவாக்கும் சமிக்ஞைகள், பருவநிலை மாற்றம், கடலில் கலக்கும் வேதிப் பொருட்கள் என்று பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. கூடவே, திமிங்கிலங்கள் குழுவாகத் தற்கொலை செய்துகொள்வதால்தான் இப்படி ஒரே நேரத்தில் கரையொதுங்குகின்றன என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்தக் கூற்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆக, திமிங்கிலம் கம்பீரமான கடல்வாழ் பாலூட்டியாக மதிக்கப்பட்டாலும், மேற்படி நிகழ்வுகள் மூலம் சற்றே மர்மத்தையும் தன்னில் கொண்டிருக்கிறது.

தற்கொலைப் பாலம்

அது, 90-களின் பிற்பகுதி. சான் பிரான்சிஸ்கோ நகருக்கு வந்த புதிது. இங்கிருக்கும் கோல்டன் கேட் பாலம் பிரசித்தி பெற்றது. வருடத்தின் எந்த நாளில் சென்றாலும் மக்கள் அதில் நடந்துகொண்டிருப்பதைப் பார்க்கலாம். காரணம், மலைகளுக்குக் கீழாக சான் பிரான்சிஸ்கோ வளைகுடாவை ஆழ்ந்து ரசிக்கும் அனுபவம் பாலத்தில் நடந்தால் மட்டுமே கிடைக்கும். ஆனால், அந்த பாலம் தனக்கேயான கறுப்பு மர்மத்தை சுமக்கிறது. பாலத்தின் மேலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை உலகிலேயே இந்த கோல்டன் கேட் பாலத்துக்கு இரண்டாவது இடம். (முதலிடம் சீனாவில் இருக்கும் நான்சிங் ஆற்றுப் பாலத்துக்கு). பாலத்திலிருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொள்ளும் மனநிலையை ஆராயும் ஆவணப் படமான ‘த பிரிட்ஜ்’, கோல்டன் கேட் பாலத்தைத் தொடர்ந்து ஒரு வருடம் படம்பிடித்த பின்னர் உருவாக்கப்பட்டது. பாலத்திலிருந்து 23 பேர் வளைகுடாவுக்குள் குதிப்பதை இந்தப் படத்தின் கேமரா பதிவுசெய்தது.

கோல்டன் கேட் பாலத்திலிருந்து குதித்துத் தங்களின் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற 2,000 பேரில் வெகுசிலரே உயிர்தப்பியிருக்கிறார்கள். அவர்களைச் சந்தித்துப் பேசி ‘த நியூ யார்க்கர்’ இதழில் ‘குதிப்பவர்கள்’ என்ற தலைப்பில் டாட் ஃபிரண்டு எழுதிய கட்டுரை மிகவும் முக்கியமானது. (அந்தக் கட்டுரையை படிக்க: https://goo.gl/dHehLx). குதித்த கணத்தில் தாங்கள் செய்வது எவ்வளவு தவறானது என்பதை உணர்ந்ததாக, பிழைத்த அனைவருமே சொன்னதாகப் பதிவு செய்கிறது இந்தக் கட்டுரை. கோல்டன் கேட் பாலத்தில் தற்கொலை தவிர்ப்பு தொடர்பான வாசகங்கள் அடங்கிய பலகைகளுடன் ஆங்காங்கே தொலைபேசிகளும் இருக்கின்றன. பொத்தானை அழுத்திப் பேசினால், உங்களுடன் ஆறுதலாகப் பேசத் தகுதியான ஆட்கள் தயாராக இருக்கிறார்கள்.

விபரீத விளையாட்டு

திமிங்கிலங்களின் தற்கொலையிலிருந்து மனிதர்களின் தற்கொலைக்கு இந்தக் கட்டுரை தாவியதை சமீப நாட்களில் செய்திகளில் பிரதான இடம் பிடித்துக்கொண்டிருக்கும் ‘ப்ளூ வேல்’ விளையாட்டுடன் தொடர்புபடுத்திப் பார்த்துக்கொள்ளலாம்.

‘ப்ளூ வேல்’-ஐ விளையாட்டு என்று சொல்வதைவிட விபரீதம் என்றுதான் சொல்ல வேண்டும். கணினிகளிலும் கைபேசிகளிலும் பரவலாகப் பதிவிறக்கம் செய்யும் விளையாட்டுகள்போல் எந்தப் புதுமையும் கொண்டதல்ல ‘ப்ளூ வேல்’. கிட்டத்தட்ட நாமெல்லாம் மறந்தே போன கூகுளின் ‘ஆர்குட்’ போன்ற ஒரு சமூக வலைதளம்தான் இது. பதிவு செய்தவர்களில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக 50 பணிகள் அளிக்கப்படும்.

கொடூரமான திகில் படம் ஒன்றைப் பார்ப்பது, வீட்டுக்கூரைமீது ஒற்றைக் காலில் நின்றபடி புகைப்படம் எடுப்பது என விபரீதமான பணிகளில் தொடங்கி, கையை ‘கத்தியால் கீறிக்கொண்டு திமிங்கில உருவத்தை வரைந்துகொள்ள வேண்டும்’ என்பதுவரை விபரீதத்தின் அளவு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து 50-வது பணியாக ‘உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டும்’ என்பதில் முடிகிறது. விளையாட்டைத் தொடங்கியபின் இதன் பயங்கரத்தையோ அபத்தத்தையோ புரிந்துகொண்ட பலரும் சில பணிகளைச் செய்த பின்னர் விலகிவிட, சிலர் தொடர்ந்து தங்களுக்கு இடப்பட்ட 50-வது பணியையும் செய்து உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவில் தொடங்கப்பட்ட இந்த ‘ப்ளூவேல்’ வலைதளம் பல நாடுகளைச் சேர்ந்தவர்களையும் வலைவீசிப் பிடித்தபடி இருக்கிறது. ‘ப்ளூ வேல்’ விளையாட்டின் இறுதிப் பணிவரை நிறைவேற்றி ரஷ்யாவில் மட்டும் 200-க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த வருடத்தில் இந்தியாவில் நுழைந்திருக்கும் ‘ப்ளூ வேல்’ சமீபத்தில் கேரளத்திலும் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறது. இந்த விளையாட்டின் கோர நாக்குக்கு பலியானவர்களில் கிட்டத்தட்ட அனைவரும் பதின்ம வயதைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தடைசெய்ய முடியுமா?

இளைஞர்களை இந்த விபரீதப் பாதையில் இட்டுச்செல்லும் உந்துசக்தி என்ன என்பது பரவலாக விவாதிக்கப்படுகிறது. இப்படி விபரீதங்களைச் சமூகத்துக்குள் கொண்டுவரும் தொழில்நுட்பம் காரணமா? அரசு இதையெல்லாம் தடை செய்ய வேண்டாமா ? இந்த மனநிலையை எப்படித் தெரிந்துகொள்வது? எப்படிக் குணப்படுத்துவது?

முதலில், தொழில்நுட்ப வளர்ச்சி என்பது எல்லா முன்னேற்றங்களையும் போலவே நன்மையும் தீமையும் ஒருசேரக் கொண்டதே. நவீனத் தகவல் தொழில்நுட்பம் நமது வாழ்க்கை முறையைக் கடந்த பத்தாண்டுகளுக்குள் முழுவதும் புரட்டிப் போட்டுவிட்டது. அதை நமக்குப் பயனுள்ள வகையில் மாற்றிக்கொள்ள வேண்டியது நம் கையில்தான் இருக்கிறது. இணையம் என்பது அடிப்படையில் எவரது கட்டுப்பாட்டிலும் இல்லாத வினோத மிருகம் என்பதால் இதற்கு அரசு கட்டுப்பாடு விதிப்பது மிகவும் கடினம். அது மட்டுமல்ல, அத்தகைய கட்டுப்பாடுகளை மீறி இணைய சேவைகளைப் பயன்படுத்துவென்பது இன்று எளிதான ஒன்றாகிட்டது. இதுபோன்ற வலைதளங்கள் அரசு ஆணைப்படி தடை செய்யப்பட்டு, இந்த வலைதளத்துக்குள் நீங்கள் நுழைவதை இணைய சேவை கொடுக்கும் நிறுவனங்கள் தடை செய்தால், அந்தச் செய்தி மூலமாகவே அவற்றின் பிரபலம் அதிகரிப்பது ஒருபுறமிருக்க, மறுபுறத்தில் ‘பதிலீட்டு மென்பொருட்கள்’ (proxy softwares) மூலம் இந்தத் தடையை எளிதாகக் தாண்டி, தளத்துக்குச் சென்றுவிடலாம். வணிக நோக்குடன் நடத்தப்படும் விபரீதத் தளங்களுக்குப் பணம் வந்துசேரும் வழிகளை அடைப்பதன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த வாய்ப்புகள் உண்டு. உதாரணத்துக்கு, வலைதளம் மூலம் ‘குட்கா’ விற்கப்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தத் தளத்துக்கான கடன் அட்டைப் பரிவர்த்தனைகளை மேலாண்மை செய்யும் நிறுவனத்தின் கணக்கை மூடுவதன் மூலம் வலைதளத்தைச் செயலிழக்க வைக்கலாம். ஆனால், பணப் பரிவர்த்தனைகள் இன்றி, விபரீதத்துக்கென்றே நடத்தப்படும் ‘ப்ளூ வேல்’ போன்றவற்றைத் தடைசெய்வது அவ்வளவு எளிதல்ல.

சரி, அப்படியானால் என்னதான் செய்ய வேண்டும் ?

1.இதைப் படிக்கும் நீங்கள் பெற்றோராக இருந்து, உங்களுக்குப் பதின்ம வயதில் குழந்தைகள் இருந்தால், அவர்களின் கைபேசிப் பயன்பாட்டை முடிந்தவரை கண்காணியுங்கள். ‘டீன் சேஃப்’ (Teen Safe) போன்ற சேவைகளை முடிந்தால் பயன்படுத்துங்கள்.

அவர்களின் நடவடிக்கைகளில் திடீர் மாற்றம் ஏற்படுகிறதா என்பதைக் கவனியுங்கள். அவர்களுக்கு திடீர் உற்சாகமோ திடீர் சோகமோ தோன்றினால் அதை அவசியம் கவனித்தாக வேண்டும். குறிப்பாக, நண்பர்களை விட்டுத் திடீரென தனித்திருக்கும் இயல்பு அவர்களுக்கு உருவானால், என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அலசிப்பார்த்தாக வேண்டும்.

‘ப்ளூ வேல்’ விளையாட்டில் இணைய வேண்டும் என்று அவர்களின் நண்பர்களோ சக வகுப்பு மாணவர்களோ அழுத்தம் கொடுப்பதற்கு முன்னே, அதன் கோரத்தைப் பற்றிப் பேசிவிடுங்கள். அதன் தேவை வரும் முன்னரே அதைப் புறக்கணிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திவிடுங்கள்.

2. இதைப் படிக்கும் நீங்கள் ஆசிரியராகவோ, சமூகத்தில் வேறு வகைகளில் அங்கம் வகிப்பவராகவோ இருந்தால் அவர்களுக்கு இது: ‘குழந்தை ஒன்றை வளர்க்க ஒரு கிராமமே தேவை’ என்று ஆங்கிலத்தில் பழமொழி ஒன்று உண்டு. குடும்பத்தைத் தாண்டி, சமூகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது அந்தப் பழமொழி. உங்களுக்குப் பதின்ம வயது குழந்தை இல்லை என்றாலும், வளர்ச்சிகள் அவ்வப்போது கொண்டுவரும் தீமைகளைக் களையும் பொறுப்பு உங்களுக்கும் இருக்கிறது என்பதை உணருங்கள். உங்கள் பள்ளியில்/ கல்லூரியில்/ ஊரில் இளைஞர் எவராவது மன அழுத்தத்துடன் தனித்திருந்து, எப்போதும் கைபேசியையே பார்த்தபடி இருந்தால், அவர்களின் பெற்றோருக்குத் தெரிவிக்க முயலுங்கள்.

3. நீங்கள் பதின்ம வயது இளைஞராக இருந்தால், பள்ளி/ கல்லூரி படிப்புக்கும் மேலே உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒன்றில் ரசனையை உருவாக்கிக்கொள்ளுங்கள். அது இசை, பூச்செடி வளர்ப்பு, பிரெஞ்சு மொழியில் அடிப்படை உரையாடல் என ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்; அதில் மூழ்கி முத்தெடுக்க முனையுங்கள்.

‘ப்ளூ வேல்’ விளையாட்டை உருவாக்கிய பிலிப் சமீபத்தில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவர் சொன்னது இது, “சமூகத்தின் அழுக்கைக் களைந்தெடுக்கவே இதை நான் உருவாக்கினேன். இந்த விளையாட்டின் மூலம் தங்கள் உயிரை யாரேனும் மாய்த்துக்கொண்டால் அவர்கள் இந்த சமூகத்துக்குத் தேவையற்றவர்கள் என்றுதானே அர்த்தம்” என்று சொல்லியிருக்கிறார். ஆனால், நாம் அனைவரும் சமூகத்திலிருந்து களைந்தெறியப்பட வேண்டிய அழுக்கு அல்ல... நம் சிந்தனையும் செயலாற்றலும் நம் சமூகத்தைத் தொடர்ந்து செப்பனிடப் பயன்படும் ஆயுதங்கள் என்ற உண்மையை எல்லோரும் நினைவில் கொண்டால் எந்தத் திமிங்கிலமும் நம்மை அணுக முடியாது.

-அண்டன் பிரகாஷ், எழுத்தாளர், தகவல் தொழில்நுட்ப வல்லுநர், தொடர்புக்கு: anton.prakash@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x