

இனக்குழு இசை (Ethnological music) என்று சொல்லப்படும் விளிம்புநிலையிலுள்ள மக்கள், பழங்குடி மக்கள், சமுதாயப் படிநிலை வரிசையில் கீழ்ப்படிகளில் உள்ளவர்கள் ஆகியோர் இன்னும் பாதுகாத்துவரும் இசையையும் பிற கலை வடிவங்களையும் மரபுகளையும் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் ஜப்பானின் ஒசாகா தேசிய இனக்குழுவியல் அருங்காட்சியகத்திலும் (National Museum of Ethnology) சில அமெரிக்க, ஜெர்மன், ஜப்பான் பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியராக விளங்கியவர் ஜப்பானிய ஆளுமை யோஷிடாகா தெராடா.
ஐரோப்பிய செவ்வியல் இசை, ஜாஸ், இந்துஸ்தானி, கர்னாடக இசை என்கிற பெயரில் நிலவுகின்ற தமிழிசை ஆகியவற்றில் ஆழமான அறிவுகொண்டிருந்தவர். உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து விளிம்புநிலை மக்கள், பழங்குடி மக்கள், தமிழகத்தைப் பொறுத்தவரை சாதியமைப்பில் கீழ்நிலையில் வைக்கப்பட்டவர்களின் இசையையும் கலை வடிவங்களையும் பதிவுசெய்வதிலும் இசைக்கருவிகளையும் கலைப் படைப்புகளையும் சேகரித்து மேற்சொன்ன அருங்காட்சியகத்தில் சேர்ப்பதும் அவருடைய பணியாக இருந்தன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்தோ, தனியாகவோ இசை மட்டுமல்லாது, மரச்சிற்பங்கள் போன்ற கலைவடிவங்களைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுவதையும் தன் வாழ்க்கைப் பணியாகக் கொண்டிருந்தவர்.
ஒரு முறை நீலகிரி மாவட்டத்திலுள்ள இருளர்களும் கோத்தர்களும் பயன்படுத்தும் சிறு அளவிலான நாயனம் போலத் தோற்றமளிப்பதும் அரைசுரத்தில் மட்டுமே இசைக்கப்படுவதுமான கருவிகளைச் சேகரிக்க விரும்பினார். இருளர்களுடன் எனக்குள்ள நல்ல தொடர்பால் அவர்களது இசைக்கருவி கிடைத்தது. ஆனால், கோத்தர்களின் இசையை ஆராய்வதில் பல ஆண்டுகளைச் செலவிட்ட அவரது அமெரிக்க நண்பருடன் நானும் அவரும் கோத்தர் கிராமம் ஒன்றில் நாள் முழுக்கச் செலவிட்டுக் கடுமையாக முயன்றோம். தாங்கள் மிகப் புனிதமாகக் கருதும் அந்த இசைக்கருவியைக் கோத்தர்கள் அல்லாத வேறு யாருக்கும், எவ்வளவு பணம் கொடுத்தாலும் கொடுக்க மாட்டோம் என்று அவர்கள் உறுதியாகக் கூறிவிட்டனர். அது தெராடாவுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. என்றாலும், அதே பழங்குடிக் குழந்தைகளும் முதியவர்களும் காட்டிய அன்பும் விருந்தோம்பலும் அந்த ஏமாற்ற உணர்வைத் தணிக்க உதவின.
தமிழிசையாலும் தமிழ் மொழியாலும் தமிழர்களின் பண்பாட்டாலும் ஈர்க்கப்பட்டுத் தன் பெயரை ‘மதி தெராடா’ என்றே கூறிக்கொள்வார். கடிதங்களிலும் மின்னஞ்சல்களிலும் அப்பெயரையே பயன்படுத்துவார். தமிழ்நாட்டில் கர்னாடக இசைத் துறையில் நிலவும் சாதி ஆதிக்கத்தைக் கண்ணுற்ற அவர், இத்தாலிய மார்க்ஸியச் சிந்தனையாளர் அண்டோனியோ கிராம்ஷியின் ‘மேலாண்மை’ என்கிற கருத்தாக்கத்தின் துணையுடன், இந்த நிலையை ஆராயத் தொடங்கினார். உலக இசை வடிவங்களில் ஈடிணையற்றது என்று அவரால் கருதப்பட்டது பெரிய மேளம் (நாகசுரம், ஒத்து, தவில், தாளம் ஆகிய இசைக்கருவிகளால் இசைக்கப்படுவது). திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, காருகுறிச்சி அருணாசலம், ஷேக் சின்ன மெளலானா ஆகியோரையும் வாய்ப்பாட்டில் தண்டபாணி தேசிகரையும் மிக உயர்வாகக் கருதினார். பாஹ், பீத்தோவன், மோஸார்ட் போன்றவர்களுக்கு நிகரானவர் ராஜரத்தினம் பிள்ளை எனக் கருதினார்.
கர்னாடக இசையில் வயலின், மிருதங்கம், புல்லாங்குழல் முதலியவற்றை ஏறக்குறைய தங்கள் முற்றுரிமையாக்கிக் கொண்டவர்களும் ‘சதிரை’ பரதநாட்டியமாக்கி அதைத் தன்வயமாக்கிக் கொண்டவர்களுமான ஓர் உயர் சாதியினரில் எவரும், ‘மங்கள வாத்தியம்’ என்றழைக்கப்படும் நாகஸ்வரத்தையோ தவிலையோ வாசிப்பதில் அக்கறை காட்டாதது முதலில் அவருக்குப் புதிராகத் தோன்றியது. எனவேதான், தமிழகத்தைப் பொறுத்தவரை இசைக்கும் சாதிக்கும் உள்ள உறவை ஆழமாகப் புரிந்துகொள்ளத் தொடங்கினார். அப்போதுதான் அவருக்கும் எனக்குமிடையே நட்பு மலர்ந்தது. பெரிய மேளம் மெல்ல மெல்ல மறைந்து வருவதும், அதைப் பாதுகாத்து வளர்ப்பதற்கு 2006-2011இல் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அறிவித்த திட்டம் செயல்படாததும் அவருக்கு மிகுந்த வேதனையளித்தன. உலகின் எல்லா வகை இசை வடிவங்களிலும் நாட்டம் கொண்டிருந்த அவர், பெரிய மேளத்தின் மீது தீராக் காதல் கொண்டு நாகஸ்வரத்தை நன்கு வாசிக்கவும் கற்றுக்கொண்டார்.
நாகஸ்வரம் அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரம் ஆகியவற்றிலாவது இன்னும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்டறிய அந்த மாநிலங்களுக்கும் சென்று வந்த அவர், நாகஸ்வரத்திற்குப் பதிலியாக சாக்ஸஃபோன் பயன்படுத்துவதைக் கண்டு உள்ளம் குமுறினார். ‘பெரிய மேளத்தின் மறைவு’ என்பதைத் தன் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கான கருப்பொருளாகக் கொண்டிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன் பணியிலிருந்து ஒய்வுபெற்ற அவர், தன் ஆராய்ச்சிக் கட்டுரைகளை நூல் வடிவத்தில் வெளியிடுவதில் தன் நேரத்தைச் செலவிட்டுவந்தார். சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தால் அவரது கட்டுரை நூல் (‘Rajarathnam Pillai: Charisma, Caste Rivalry and the Contested Past in South Indian Music’) அச்சிடப்பட்டு அந்த நூலகத்தின் இயக்குநர் சுந்தரின் கைகளுக்குச் சில படிகள் வந்த நாளில், தெராடாவின் மறைவும் நிகழ்ந்தது பெரும் சோகம் தரும் உடனிகழ்வு.
- எஸ்.வி.ராஜதுரை