

கூத்துப்பட்டறை நாடகக் குழு, சென்னையில் தொடர்ந்து 5 நாள்களுக்கு ‘நான் புதுமைப்பித்தன்’ என்கிற நாடகத்தை நிகழ்த்தியது. புதுமைப் பித்தனின் வாழ்வை, எழுத்தைச் சாரமாகக் கொண்டு, நாடகப் பிரதியை எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் மிகச் சிறப்பாக உருவாக்கி இருந்தார்.
பன்முக உணர்த்தல்
புதுமைப்பித்தனின் கம்பீரம், சமரசமற்ற போக்கு, நையாண்டி, அவர் சந்திக்க நேர்ந்த வறுமை, மனைவி மீதான காதல், பிற மொழி சார்ந்த நூல்கள், ஆசிரியர்கள் பற்றிய அவரது வாசிப்பனுபவம் என எழுத்தாளரின் பன்முகங்களையும் நாடகம் பார்வையாளர்களுக்கு உணர்த்தியது.
புதுமைப்பித்தனின் கதாபாத்திரங்களை, அவர்களின் உரையாடலை, அவர் மனைவிக்கு எழுதிய கடிதங்களின் வரிகளைப் பயன்படுத்தி நாடகப் பிரதியை உருவாக்கியுள்ளார் எஸ்.ராம கிருஷ்ணன். கருணா பிரசாத் என்னும் கலை ஆளுமைதான் நாடகப் பிரதியை உருவாக்குவதற்கான உத்வேகமாக அமைந்தவர் என்றார் எஸ்.ராமகிருஷ்ணன்.
உருவாக்கப் பின்னணி
கோவிட் காலத்தில் எழுதப்பட்ட நாடகப் பிரதியை ஒரே ஒருமுறை மட்டும் வாசித்துக் காட்டிவிட்டு, கூத்துப்பட்டறை நடிகர்களை ஓராண்டு காலம் புதுமைப்பித்தனின் படைப்புகளைப் படித்து விவாதிக்கவைத்திருக்கிறார் கருணா பிரசாத். நாடக நடிப்புப் பயிற்சி என்பதை, சினிமாவிற்கான நுழைவுச்சீட்டாக பலரும் கருதிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், இந்த நாடக உருவாக்கத்தின் பின்புலம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. ஒரு கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிப்பதுதானே சிறப்பான பயிற்சியாக இருக்க முடியும். எழுத்தையும் எழுத்தாளரையும் தொடர்புபடுத்த வேண்டுமா, வேறாக பார்க்க வேண்டுமா என்பது காலகாலமாக விவாதத்திற்குரிய விஷயமாக இருக்கிறது. இந்த நாடகம் இரண்டையும் இணைத்தே பார்க்கிறது.
எழுத்தாளர் கதை மாந்தரைப் படைக்கிறார். கதாபாத்திரங்களின் ஊடாக, உணர்ச்சிகளின் ஊடாக, கதை மாந்தர்களின் வாழ்க்கையை அவர்களின் சமகால உலகை நமக்கு அடையாளப்படுத்துகிறார். எழுத்தாளர் படைத்த இந்தக் கதை மாந்தர்களின் ஊடாக, எழுத்தாளரை, அவருடைய வாழ்க்கையை நம்மால் உணர முடியுமா? அதைச் சாத்தியப்படுத்தியுள்ளது எஸ்.ராமகிருஷ்ணன், கருணா பிரசாத், கூத்துப்பட்டறை நாடகக் குழு கூட்டணி.
நாடகத்தில் ஒரே நபர் எல்லா நாளும் ஒரே கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவில்லை. வெவ்வேறு நபர்களை, வெவ்வேறு கதாபாத்திரங்களில் வெற்றிகரமாக நடிக்க வைத்திருப்பதும் பாராட்டிற்குரிய செயல். குறைந்த பொருள்களைக் கொண்டு எளிமையாகவும் உண்மைத்தன்மையுடனும் அரங்கை வடிவமைத்திருந்தார் ஆழி வெங்கடேசன். இதேபோல் 80 வயது ‘இளைஞர்’ டாக்டர் செ.ரவீந்திரனின் ஒளி அமைப்பு நாடகத்திற்கு மேலும் செழுமை ஊட்டியது.
நாடகத்தில் கூத்துப்பட்டறை நாடகக் குழுவைச் சேர்ந்த அஜய் அரவிந்த், அஜீத் குமார், ஸ்ரீதேவி, பால்ராஜ், சுரேஷ், சந்திரசேகர், ராமர், கார்த்திக், ரியாஷினி, கடைசியில் கவிதை பாடிய ரமேஷ் பாரதி ஆகிய அனைவரின் பங்களிப்பும் பாராட்டுக்குரியவை.
ஊர்தோறும் தேவை
புதுமைப்பித்தனைத் தெரிந்துகொள்ள, ஓரளவிற்கு அவர் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள இந்த நாடகம் உதவும். நம் பள்ளி, கல்லூரிகளில் கலையரங்குகளில் நிகழ்த்தப்பட வேண்டிய நாடகம் இது. இந்த முயற்சியின் வெற்றி பிற எழுத்தாளர்களையும் அறிமுகம் செய்யும் பிரதிகளை உருவாக்க உந்துதலாக அமையலாம். திறன்பேசியும் தொலைக்காட்சியுமே வாழ்க்கையாகிப் போன காலகட்டத்தில் இந்த ஒன்றரை மணி நேர அனுபவம் இலக்கியத்தை அறிமுகப்படுத்த உதவும்.
ஒரு சின்ன பரிந்துரை - நாடகத்தின் பின்பகுதியில் புதுமைப்பித்தன் காசநோயால் பீடிக்கப்படுவது, ஓயாமல் இருமுவது, சுற்றி இருப்பவரின் அழுகை ஆகியவற்றுக்கான நேரத்தைக் குறைத்து, புதுமைப்பித்தனுடைய கதாபாத்திரங்களின் பகுதிக்கு இன்னமும் நேரம் ஒதுக்கி இருந்திருக்கலாம். நாடகம் முடிந்து வெளியேறும்போது இந்த துயரம் நம்முள் கவிவதைவிட, எழுத்தாளரின் வாழ்க்கை, படைப்பாற்றல் நையாண்டி போன்றவை பல கேள்விகளைக் கேட்டுப் பார்வையாளர்களின் சிந்தனையை தூண்டப் பெரிதும் உதவும்.
- மா